Wednesday 4 December 2013

மீண்டும் வா பாரதி



மீண்டும் வா பாரதி

வானத்தில் சூரியனை பார்த்ததுண்டு
வையகத்தில் சூரியனை பார்த்ததுண்டா?
கவிதை எழுதும் கவிஞனை கண்டதுண்டு
கவிதையே கவிஞனாய் கண்டதுண்டா?
மனிதரிலே உணர்வுகளை கண்டதுண்டு
உணர்வுகளே மனிதனாக கண்டதுண்டா?
பா ரதம் ஓட்டிய பாரதியே
வா மீண்டும் வா
தெற்கில் உதித்த சூரியனே
தேயாமல் வாழும் கவிதை சந்திரனே
பாட்டு எழுதுவதற்கென்றெ வந்தவனே
எங்கள் நிலையை பார்த்து பார்த்து நொந்தவனே
வா மீண்டும் வா
உன் எழுத்து தமிழ் மொழியின் தலையெழுத்து
நீ எழுதாத எழுத்து பிழையெழுத்து
தமிழர்க்கு உத்வேகம் அளித்திட்ட நவகவியே
உன் உடல் மரணம் எமதேவன் பெருந்தவறே.
மரபுகளை உடைத்தவனே – பாரதி
உன் மரணத்தை மறுப்பாயோ?
புதுக்கவிதைகளைத அளித்தவனே – உன்
உயிர் உடலை இப்புவிக்கு தருவாயோ?
வா மீண்டும் வா
பாரதி நீ
மண் தின்று மறைந்து போகும் உடலா?
நீ யாருமே குடிக்க முடியாத கடல்.
பாட்டலே நீ அளந்தாய் ஆகாசம்
இனி யாராவது செய்ய முடியுமா இந்த சாகசம்?
வா மீண்டும் வா
பாரதி
உன் உணர்வுகளை உன் பாடல் பேசும்
உனை மறுத்தால், தமிழ் மொழி ஏசும்.
தமிழ் இருக்கும் வரை உன் மணம் வீசும்
தமிழன் இருக்கும் வரை, அவன் வாய் உனை பேசும்.
பாரதி
உன் கவிதை கதிர்கள் இங்கே
உன் சூரிய முகம் தான் எங்கே?
உன் சிதையிலிட்ட தீ
என் சித்தத்தை சுடுகிறதே – பாரதி
வா மீண்டும் வா
உன் பாக்கள் படையெடுத்த போதெல்லாம்
எங்கள் நெஞ்சை சிறையெடுத்தன
நீ விடை கொடுத்த போது – எங்கள்
கண்கள் கண்ணீர் மடை திறந்தன.
தமிழ் கடலின் கவிப்புயலே
மறுமுறை மையம் கொள்ள மாட்டாயா?
வா மீண்டும் வா
பாரதி
உன்னால் மட்டும் எப்படி
வார்த்தைகளால் வாள் வீசும் செப்படி
கேட்க வைக்கும் பாட்டுக்களா? - இல்லை
வேட்டு வைக்கும் பாட்டுக்கள்.
தூங்க வைக்கும் பாட்டுக்களா? – இல்லை
ஏங்க வைக்கும் பாட்டுக்கள்
பாரதி
தடிகள் கொண்டு எழுதினாயோ?
இடிகளாய் இறங்கியதே.
முட்கள் கொண்டு எழுதினாயோ?
இதயத்தை உழுகிறதே.
தீயை கொண்டு எழுதினாயோ?
தீவிரமாய் சுடுகிறதே?
தமிழ் வார்த்தை கொண்டு அல்லவா எழுதினாய்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தருகிறதே.
வா மீண்டும் வா
தமிழ் ஆயுதம் தாங்கிய அகிம்சாவாதியே
உன் பாக்களால் அன்று வெள்ளை அரசாங்கம் அரண்டது.
இன்று தமிழ் கவியுலகம் உன் மறைவாலே இருண்டது.
பாரதி
வரம் என்று வந்தவனே
வீரம் இது என்று சொன்னவனே
தமிழ் கவியுலகம் ஆண்டவனே
விண்ணுலகம் ஆளப் போனாயோ?
தமிழ்த்தாயின் முகவரியே
காட்டிவிடு உன் முகம் தனையே
உன் மதி இங்கே பிழையென்று நினைத்தாயொ?
எங்கள் உளம் தனையே தீச்சுடர் தள்ளி போனாயே.
வா மீண்டும் வா
நீ மறுத்த சாதி இன்னும் இருக்கிறது -அது
முரசறைந்து வன்முறையை கூட அழைக்கிறது
பாக்கள் என்னும் படை நடத்தி வா
சாதியத்தின் சமாதியிலே பூக்கள் தூவிப் போ.
மதங்கள் இங்கே மதம் பிடித்து மண்ணில் ஆடுது
உன் கவிதை என்னும் கதை எடுத்து வா
மதம் தனையே வதம் செய்து போ.
உணர்வுகளின் பிழம்பே
சொற்களின் குழம்பே – பாரதி
உன் வயிறு காய்ந்த போது கூட
வைராக்கியமாய் இருந்தவனே
உன் வாழ்கை கசந்த போது கூட
தமிழ் வசந்தத்ததை வீசியவனே
வா மீண்டும் வா
பாரதி
நீ விற்பதற்காகவா கவிதை எழுதினாய்
நாங்கள் கற்பதற்காக அல்லவா எழுதினாய்
தமிழ் தாயின் தலை மகனே
காட்டிவிடு உன் முகம் தனையே.
பாரதி
உடலாய் வரமறுத்தால்
உணர்வுகளாய் வா
உருவமாய் வர மறுத்தால்
நெஞ்சின் உரமாய் வா
நிஜமாய் வர மறுத்தால்
பாரதி நினைவுகளாய் வா
காண குயிலே
கருப்பு நிலவே
சிகப்பு தமிழே
ஞான கதிரவனே
உனை கண்பதெப்போது?
வா மீண்டும் வா – பாரதி
ரெ.ஐயப்பன்
www.ayyappangeo@gmail.com




எட்டையபுர எஜமான்
எட்டையபுர
எஜமானே! – யாருக்கும்
கவரி வீசாத கவரி மானே!
அடிமை நண்பனின்
அறியாமைக் கிணற்றை
ஆழ தூரெடுத்தவனே!
உன்னை
பாரதி என்றழைப்பதை விட
பாரதத் தீ என்றே அழைக்கலாம்.
எப்பக்கம் திருப்பினாலும்
மேல்த்தட்டு நோக்கியே எரிந்து
அடித்தட்டு நிரப்பியவன் நீ
கூட்டுச் சமையலில் – உனக்குப்
பரங்கிக் காய் பிடிக்காது – அதை
எத்தட்டில் வைத்தாலும்
அத்தட்டைக் கழுவிடுவாய் – உன்
கவிதைகளால்.
மதம் பிடித்த யானை
மதம் பிடித்த மனிதர்களை விட்டு
மதம் பிடிக்காத உன்னைத் தாக்கியது
மதம் பிடித்ததால் இருக்குமோ?
உன் நூல் கூறுகிறதோ இல்லையோ?
நீ பாரதி என்று......
நூல் கூறுகிறது
நீ பாரதி
என்றும்... எங்கள்...பாரதி
நீ வேறு உலகில் இருப்பதாகக்
கற்பனை செய்கிறேன்.
ஒரு சந்தேகம்....
அங்கும் நூல்கள் உண்டா?
இருந்தால்
தயவு செய்து
சட்டையைக் கழற்றி விட்டு
கோயிலுக்கு போ... ஏனென்றால்
நீ மதம் பிடிக்காதவன்.
-         சு.ஜெயராஜ்



No comments:

Post a Comment