Thursday 21 April 2016

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க, வருமானத்தை உயர்த்த சில வழிமுறைகள்



தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க, வருமானத்தை உயர்த்த சில வழிமுறைகள்
தமிழகத்தின் கடன் சுமை சுமார் மூன்று லட்சம் கோடி என்ற செய்தி கண்டிப்பாக வருத்தப்பட செய்யும் செய்தியாகும். இந்த கடன்சுமையிலிருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்று விரும்பும் உங்களை போன்றே நானும் விரும்புகிறேன். எப்படி மக்களை அதிகம் பாதிக்காத வகையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பது என்று நான் சிந்தித்ததை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    அரசு சாதாரன மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பல வகை பொருள்கள் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் அவை தமிழக சந்தையில் மிகச்சிறந்த இலாபத்தை ஈட்டி வருகின்றன. அத்தோடு இல்லாமல் சில பொருள்களின் தரம் குறித்தும் கடும் சர்ச்சைகள் எழுகின்றன.
    சில பொருள்களை பற்றி இங்கு காண்போம். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பால் பவுடர் நெஸ்லே நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. 400 கிராம்கள் பால் பவுடர் சுமார் 300 ரூபாய் முதல் 515 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது. மாதம் ஒன்றிற்கு ஒரு குழந்தை உள்ள குடும்பம் சுமார் 1000 முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது ஒரு அத்தியவசியமான ஒரு பொருள். கண்டிப்பாக இப்பொருளில் நெஸ்லே பன்னாட்டு நிறுவனம் கொள்ளை இலாபத்தை சம்பாதிக்கிறது. இந்த நுகர் பொருளை அரசு தயாரித்து விற்கும் போது பால் உற்பத்தியாளர்கள், பால் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் சந்தைபடுத்தும் முகவர்கள் என மிக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பினை அளிக்க முடியும். மக்கள் நியாயமான விலையில் இப்பொருளை வாங்கமுடியும்.
பற்பசை, குளியல் சோப்பு, சலவை சோப்பு, தரை மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்தும் அமிலங்கள் போன்ற அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பிராண்டுகளே தமிழக சந்தையில் முன்னிலையில் உள்ளன. இந்த பொருள்களை அரசு உற்பத்தி செய்யும் போது கண்டிப்பாக விலை குறையும் அதே நேரத்தில் குடும்பத்தின் செலவினங்களும் குறையும். பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
இயற்கை முறையில் வேதி உரங்களை பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருள்களுக்கு தற்போது சந்தை அதிகரித்துள்ளது. தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நிலங்களை ஒருங்கினைத்து இயற்கை முறையில் வேதி உரங்களை பயன்படுத்தாமல் காய்கறிகள், பழங்கள், அரிசி, சிறு தானியங்கள் போன்றவற்றை தயாரித்து சந்தைபடுத்துதலின் மூலம் தன்னுடைய வருமானத்தை உயர்த்திக்கொள்ள முடியும். வேளாண் பொருள்களில் மதிப்பு கூட்டி உற்பத்தி செய்யும் போது மேலும் அதிக இலாபத்தை பெற முடியும்.
மாத்திரைகள், சிரப்கள் போன்றவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன். குறைந்த பட்சம் சாதாரன தலைவலி, சளி, காய்ச்சல், வலி நிவாரனிகள் போன்றவற்றை அரசு தயாரிக்கும் பொழுது அரசும் வருமானத்தை உயர்த்திக்கொள்ள முடியும் மக்களுக்கும் சேமிப்பு அதிகரிக்கும். 
தமிழக அரசு நுகர் பொருள் உற்பத்தியில் கால்பதித்தால் அரசின் வருமானம் உயருவதோடு, தரமான பொருள்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யமுடியும். உற்பத்தி மற்றும் சந்தைப்படுதலில் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
ஆடம்பர திருமணங்கள், மிகப் பெரிய பொது கூட்டங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிகளின் கொடிகம்பங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு சிறிய அளவிலாவது வரி விதிக்கலாம். செகுசு கார்கள் போன்றவற்றிற்கு விற்கப்படும் பெட்ரோல், டிசலுக்கு அதிக வரி விதிக்கலாம். இதனால் சாதாரன மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
அரசு என்பது இலட்சம் கரங்கள் இலட்சம் மூளைகளால் செயல்படும் அமைப்பு. மேற்கண்ட வழிமுறைகளை தாண்டி அரசால் சிந்திக்க முடியும். தீவிரமாக இதைப்பற்றி சிந்திக்கும்போது மிகச்சிறந்த உபாயங்களை கண்டறிய முடியும். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் இருக்கக்கூடிய  பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களை ஆய்வுகளில் ஈடுபடுத்தும் போது நிச்சயம் பல யோசனைகள் கிடைக்கும்.
மக்களை கேட்கும் அரசு, பல்லாயிரம் ஊதியம் பெறும் பேராசிரியர்கள்  நிலையான வேலைவாய்ப்பும், சமூக அந்தஸ்து மிகுந்த அரசு ஊழியர்கள் போன்றவர்களை இயக்கும் அளவிற்கு தமிழக மக்கள் தீரம் மிக்கவர்கள் ஆகும் போது தான் மக்களாட்சி மலரும், தமிழகத்தின் பொருளாதாரம் உயரும்.  ரெ.ஐயப்பன்



Monday 4 April 2016

நிலம் என்னும் சமூக சொத்து



நிலம் என்னும் சமூக சொத்து
நிலம் நமது கலாசாரத்தில் தாய் மற்றும் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறது. ஆனால் இந்த நிலத்தின் பயன்பாடு மற்றும் நிலத்தின் மீதான சமுகத்தின் உரிமை போன்றவற்றின் மீது தனி நபர்கள் அசுர தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீர், காற்று போலவே நிலமும் சமுகத்தின் சொத்து தான் ஆனால் நிலம் தற்போது ஒரு வளம் என்ற நிலையிலிருந்து தனி நபரின் செல்வம் என்ற நிலையை அடைந்துள்ளது.

நிலம், பணத்தை முதலீடு செய்ய நல்ல ஒரு வாய்ப்பாக காணப்படுகிறது. தன்னிடம் உபரியாக உள்ள பணத்தில் நிலத்தை வாங்கி அதன் பயன்பாட்டினை முடக்கி வைத்திருப்பதன் மூலம் நிலத்திற்கான தேவையை அதிகரிக்கிறது. இதனை சந்தைபடுத்தும் போது உயர்ந்து நிற்கின்ற தேவை நிலத்தை நல்ல விலைக்கு விற்க ஏதுவாகிறது. நல்ல விலை கிடைப்பதனால் ஏற்கனவே உபரி வருமானம் உள்ளவர் மேலும் அதிக வருமானத்தை பெறுகிறார், அவருடைய உபரி வருமானம் அதிகரிக்கிறது. எனவே தொடர்ச்சியாக நிலத்தை அதிக விலைக்கு வாங்கி முடக்கி மேலும் அதிக விலைக்கு விற்கிறார். இதனை சாதாரனமாக பார்க்கும் போது இதில் என்ன தவறு என்றே கேட்கத் தோன்றும். ஆனால் இது சமூகத்தில் ஏற்படுத்தும் பொருளாதார மாற்றங்கள் ஏராளம்.

ஒருவன் தான் வசிக்க தேவையான இடத்தை விட அதிகமாக நிலங்களை வாங்க முயற்சி செய்யும் போது நிலத்தின் சந்தை மதிப்பு உயர்கிறது, அத்தோடு அவன் வாங்கிய நிலம் தன்னுடைய நிலப்பயன்பாட்டினை இழந்து காலிமனையாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த நிலம் உற்பத்திக்கு துணையாக இருந்திருக்கும். தற்போது அந்த நிலம் காலிமனையாக பண மதிப்பு உயர்வதற்காக காத்திருக்கிறது. பின் தொடர்ச்சியாக அந்த நிலம் விற்கப்பட்டாலும் நிலத்தின் உரிமையாளர்கள் மாறுவாரே தவிர நிலத்தின் பயன்பாடு அதிகரிக்காது. நகரங்களை ஒட்டிய விவசாய நிலங்கள் இப்படி காலிமனைகளாக தன் இயற்கை மதிப்பை இழந்து நிற்கின்றன. ஒரு தனி நபருக்கு சொத்தாக ஒரு நிலம் இருப்பதனால் விவசாயம் செய்யும் விவசாயிக்கோ, அல்லது சொந்த வீட்டில் குடியிருக்க விரும்பும் நியாயமான குடிமக்கள் எவருக்கும் இந்த நிலத்தின் சந்தை மதிப்பு உயர்வதினால் அவர்களுக்கு நிலம் எட்டாக் கனியாகவே இருந்துவிடுகிறது.

மேய்ச்சல் நிலங்கள், ஆற்றுப்படுகைகள், விவசாய நிலங்கள் மற்றும் ஏர், குளங்கள் என்று பல்வகை பயன்பாடுகளை உடைய நிலம் ஒருபுறம் மக்கள் தொகை பெருக்கத்தினால் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படுகின்றன மறு புறம் உபரி வருமானத்தை முதலீடு செய்து அதன் மதிப்பை உயர்த்தும் செல்வமாக நிலம் கையாளப்படுகிறது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.73 கோடி குடும்பங்கள் வாழத்தகுதி அற்ற குடியிருப்புகளில் வசிக்கின்றனர் என்று தெரிவிக்கிறது. இந்நிலை நிலத்தின் மீது தனிநபர்கள் தன்னுடைய சுய நலத்திற்காக தொடுக்கும் தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

நிலம் தனிநபர்களின் கைகளில் தேவைக்கு அதிகமாக சிக்கும் போது அதன் பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன் முடக்கப்படுகிறது. இயற்கையாக அந்த நிலத்தின் தேவை மிகுந்தவர்களுக்கு அந்த நிலம் அவர்களால் கையகப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறது. முதன்மையாக நிலமில்லா விவசாயி தன் உழைப்பில் நிலத்தினை வாங்கி சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது இயலாத ஒன்றாகிவிடுகிறது. அதே போல் குறைந்த வருமானம் உடைய நபர்கள் பணத்தினை சேகரித்து நிலம் வாங்கி வீடு கட்டி சொந்த வீட்டில் வசிப்பது என்பது இப்போது குதிரை கொம்பாகிவிட்டது. தொழில் செய்பவர்கள் தன்னுடைய தொழிலை எளிமையாக விரிவாக்க முடியாது. இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் நிலம் தனி நபர்களின் உபரி வருமானத்தின் பண மதிப்பை பெருக்குவதற்காக முடங்கி காலிமனையாக இருப்பது தான்.

இந்நிலையில் நிலத்தின் மீது அரசு கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நிலம் அரசிடம் தான் விற்க வேண்டும், அதே போல் நிலத்தை அரசிடம் தான் வாங்க வேண்டும். அரசு யாருக்கு எவ்வளவு நிலத்தை எந்த பயன்பாட்டிற்காக விற்பது போன்றவற்றில் கொள்கைகளை வகுத்துக்கொள்ளும் போது நிலப்பயன்பாடு முடக்கம் என்பதை தடுக்க முடியும்.

இந்த பொருப்புகளை நமது அரசு ஏற்க வேண்டும் அத்தோடு மக்கள், நிலம் வாழ்வதற்கான வளம், அதனை ஊனப்படுத்தி செல்வத்தை குவிப்பது அறம் சார்ந்த வாழ்விற்கு எதிரானது என்பதை மனதில் ஏற்க வேண்டும்    ரெ.ஐயப்பன்