Saturday 28 March 2015

ஸ்ரேயா சிங்கால் – கருத்துரிமை போராளியான சட்டக்கல்லூரி மாணவி

ஸ்ரேயா சிங்கால் – கருத்துரிமை போராளியான சட்டக்கல்லூரி மாணவி

சினிமா, கிரிக்கெட், இணையம், அரட்டை, கலாய்த்தல் என பொழுது போக்குக்குகளில் ஊறித்திளைக்கும் இளைய சமுதாயத்தினர் நடுவே அவ்வப்பொழுது, ஆங்காங்கே சமூக அவலங்களை எதிர்த்து போராடும் பொறுப்பு மிக்க மனிதர்களாக இளம் தலைமுறையினர் உருவாகி இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டிகளாக வளர்ந்து வருவதை வரவேற்று இளம் மக்களிடையே இச்செய்தியை கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது. 

பால் தாக்கரே இறுதி சடங்குகளின் போது மகாராஷ்டிரம் முழுவதும் ஸ்தம்பித்த்து. கடைகள் அடைக்கப்பட்டன, பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதை தவறென்று கருத்து இனையத்தில் பதிவு செய்த பெண் மற்றும் அக்கருத்தை விருப்பம் செய்த அவருடைய தோழி இருவரும் இணைய சட்டம் 66 எ வின் கீழ் கைது செய்யப்பட்டனர். இச்செய்தியை அறிந்த சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்கால் உடனடியாக களத்தில் இறங்கினார். சட்டக்குடும்பத்தில் வளர்ந்த ஸ்ரேயா சிங்கால் மூத்த வழக்கறிங்கர்களின் துணை கொண்டு ஒரு மணுவை 2012ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து போராடினார். 21 வயது மட்டுமே நிரம்பிய அவருக்கு இது பெரிய சவாலாக இருந்தது. தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்த உச்ச நீதிமன்றம் மூன்றாண்டுகள் கழித்து தற்போது இணைய சட்டத்தின் 66 எ பிரிவு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக்கூறி ரத்து செய்துள்ளது. இதனால் இணையத்தின் சமூக ஊடகங்களில் மாற்று கருத்துகளை முன் வைக்கும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது.
66 எ பிரிவின் படி  மாற்றுக்கருத்துகளை முன்வைப்போர், அதை விருப்பம் செய்வோர், பகிர்வோர் அனைவரும் எந்த விசாரணையும் இன்றி கைது செய்ய வழி வகை செய்கிறது. இது ஜனநயகத்தின் குரல் வளையை நெரிக்கும் சட்டமாகும். இச்சட்டத்தை இளம் மாணவி எதிர்த்து வெற்றி பெற்றுள்ளது உண்மையில் வரவேற்கத்தக்கது. இவரது தாயார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இவரது செல்வாக்கான குடும்ப பின்னணி இவருக்கு சாதகமானதாக இருந்த்தும் இவரது வெற்றிக்கு காரணம் என்றால் மிகையாகாது. இதிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி இது தான் செல்வாக்கான குடும்பங்களில் உள்ளவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கும் பொழுது சமூகத்தின் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்க முடியும்.
இளம் மாணவ சமுதாயத்தினர் சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதற்க்கு ஸ்ரேயா சிங்கால் உதாரண மாணவி ஆகிவிட்டார். அவருக்கு ஒரு சபாஷ், அவரது மக்கள் பணி தொடரட்டும். இது போன்ற செய்திகளை படித்து நமது மாணவ சமூகம் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் ஜனநாயக விழிப்புணர்வு பெற்று நல்ல உண்மையான குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். 
ரெ.ஐயப்பன்