Tuesday 15 September 2015

காற்று மாசு



காற்று மாசு
[என்னுடைய மாணவர் ஒருவர் கேட்டதற்காக எழுதியது]
கால வெளிகளை கடந்து
வாண வெளியெங்கும்
கடவுள் போல் நிறைந்திருப்பது, காற்று
ஆதி முதல்
இன்றைய தேதி வரை – நம்மை
வாழ வைப்பது காற்று தான்
நம் நாசி நுகர – காற்றில்
ஆக்ஸிஜன் குறைந்துவிட்டால்
காலன் கதவருகே
வந்து நிற்பான்
என்னுடன் வர ரெடியா?
என்று கூவி அழைப்பான்.
காற்றின் தேசத்தில்
மரங்கள் தான் மன்னர்கள்
கரியமில வாயுவை
தன்னுள் கட்டியாக்குகிறது
தன் வேரால் – மண்ணை
கெட்டியாக்குகிறது
உயிர் காற்றை
காற்றின் கலவையில் ஊதுகிறது
காற்றின் பகைவர்களோடு
பசுமையின் காவலனாய் மோதுகிறது
வாகனப் புகையினால் வந்தது வம்பு
இது அறிவியல்
விட்ட அம்பு
சாலையெங்கும் புகை மேகம்
இது நமக்கு பகை மேகம்
மழை தந்து உயிர்
வாழ வைக்கும் மேகமல்ல
நோய் தந்து உயிரை
வீழ வைக்கும் மேகம்
மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு
ஆலையால் தாஜ்மகால்
கறுத்து விட்டது என்ற
கவலை சிலருக்கு.
தாஜ்மகாலை பற்றிய
கவலை எனக்கில்லை
அது ஆடம்பர சமாதி
அரச அதிகாரத்தின் ஆணவ சின்னம்
அன்பின் கோர வெளிப்பாடு
தாஜ்மகால் கறுத்து விட்டது
என்று கவலைப்படாதிர்கள்
புகையை வடி கட்டி வடி கட்டி
நம் நுரையீரல் சிறுத்து விட்டது
என்னடா இது வாழ்க்கை என வெறுத்துவிட்டது.
காற்றை காப்பாற்ற என்ன செய்வது?
இது கருத்தரங்க தலைப்பு
ஏ.சி யை சுவாசிக்கும் கணவான்களே
காற்றறை நீங்கள் நேசிப்பது
உண்மையானால்
ஏ.சி பெட்டிகளை உடைத்தெறியுங்கள்
ஏ.சி பெட்டிகளால் தான்
வெளியாகிறது சி.எப்.சி
இனியும் ஏ.சி வேண்டுமா?
நீ யோசி?
உன் உடல் சுகப்பட
ஓசோன் உடைபட வேண்டுமா?
இப்படியே போனால்
இந்த பூமி 100 ஆண்டு தாண்டுமா?
காற்றை மாசுபடுத்த ஒரு விழா
அது தீபாவளி என்னும் திருவிழா
பட்டாசு சத்தத்தில்
காற்றின் கவசம் உடைகிறது
காற்றின் கற்பு குறைகிறது
அழுக்கான காற்று
இழுக்கான மனிதனின்
ஆயுள் குறைக்கிறது
பட்டாசு விழாக்களை
நொடியில் மறுப்போம்
வெடிகளால் அல்ல
பசுங் கொடிகளால்
அலங்கரிப்போம் விழாக்களை
காற்று மண்டலத்தின்
காவலாளிகள் மரங்கள் தான்
நம் கரங்கள்
மரங்களைக் காக்காவிட்டால்
காற்றைக் காப்பது கடவுள் தான்.
ரெ.ஐயப்பன்






Wednesday 9 September 2015

ஆசிரியர் தின கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை (05/09/2015) நான் ஆசிரியன்

ஆசிரியர் தின கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை (05/09/2015)
நான் ஆசிரியன்
நான் ஆசிரியன்
வகுப்பறை நாடகத்தின்
வசனகர்த்தா நான்
நிஜமான நாடகத்தை
தினந்தோறும் நடத்துபவன்
என்னை கேட்பவன்
ஏற்றம் பெறுகிறான்
என்னை ஏற்காதவன்
என்மேல் சீற்றம் கொள்கின்றான்
நான் ஆசிரியன்
வகுப்பறை தேசத்தில்
மக்களாட்சி நடத்திடும்
மன்னவன் நான்
எனக்கு இணக்கமான இதயங்கள்
இங்கே தான் இருக்கின்றன
என்னை கேட்க செவிகளை
அவர்களே எடுத்துவருகிறார்கள்
அவர்கள் அறிவாய் பேச
நாக்குகளை நானே எடுத்துச்செல்கிறேன்
நான் ஆசிரியன்
நான் அடங்கமறுப்பவன்
என்னை அடக்க முடியாது
மழை மேகம் நான்
மலையகத்து நீர்வீழ்ச்சி நான்
கீழ்வானத்து குளிர் மழை நான்
அறிவுக் கடலில் மாணவர்களை
நீராடவைப்பவன் நான்
என் ஞாண வேள்வியை
பாடத்திட்டத்தின் இரு பக்கங்களில்
அடக்க முடியாது.- ஆம்
நான் அடங்கமறுப்பவன்,
என்னை அடக்க முடியாது
ஆசிரியன் வீடுகளில் வாழ்கிறான்
என்று யார் சொன்னது?
ஆசிரியனை கண்டவுடன்
மாணவ மலர்கள் மலர்கின்றான
அந்த புன்னகை பூக்களில் தான்
ஆசிரியன் வாழ்கிறான்
ஊதியங்கள் உலகிற்காகத்தான்
ஆசிரியன் தான் ஒப்பற்ற தலைவன்
பாடவேளைகள் தோறும் மேடைகள் காத்திருக்கும்
அவன் வருகையை மழலை மக்களின்
விழிகள் வழியை பார்த்திருக்கும்
தினந்தோறும் தேர்தல் தான்- ஆம்
ஆசிரியனுக்கு தினந்தோறும் தேர்தல் தான்
மணித்துளி தோறும் தேர்தல் பிரசாரம்
இது பொல்லாத தேர்தல்
எவரும் எளிதில் வெல்லாத தேர்தல்.
வார்த்தைகளை சொல்பவன் அல்ல ஆசிரியன்
வாழ்க்கையைச் சொல்பவன் ஆசிரியன்
தாள்களை திருத்துபவன் அல்ல ஆசிரியன்
ஆள்களை திருத்துபவன் ஆசிரியன்
இலட்சங்களுக்காக வேலை செய்பவன் அல்ல, ஆசிரியன்
இலட்சியங்களுக்காக வேலை செய்பவன், ஆசிரியன்
இயந்திரங்களின் பொறியாளன் அல்ல ஆசிரியன்
இதயங்களின் பொறியாளன் ஆசிரியன்,
சுவாசிப்பதை நிறுத்தினாலும்
வாசிப்பதை நிறுத்தமுடியாது
வாசிக்கும் வரை தான் ஆசிரியன்
வாசிப்பதை நேசிக்கும் வரை தான் ஆசிரியன்
ஆசிரியன் அறிவின் சுரங்கம்
ஆற்றலின் பெட்டகம்
அவன் சொல் தன்மையானது
அவசியமேற்படின் வன்மையானது
உண்மையில் அவன் உள்ளம்
ரோஜா இதழைவிட மென்மையானது.
விளம்பர அலைகளிலிருந்து
மாணவ சருகு படகுகளை காத்து
நங்கூர கப்பலாக்குபவன் ஆசிரியன்
ஏசுவை வதை செய்த உலகத்தில்
ஏசுவதே தவறா? மாணவரை
ஏசுவது போல் பேசுவதே தவறா?
சட்டம் போடும் கணவான்களே
மாணவரை நல்வழிப்படுத்த
திட்டம் என்ன உள்ளது?
சமூகம் கோடி கைகளால் செய்யும்
தவறுகளை தன் ஜோடி கைகளால்
மாற்ற முயலுபவன் ஆசிரியன்
ஆசிரியன் அணை கட்ட முடியாத நதி
அனைவரையும் சுண்டி இழுக்கும் அவன் மதி
வயல் வெளிகளில் அல்ல – மாணவரின்
மன வயல்களில் பாயும் ஞாண நதி
ஆசிரியன் வணிக உலகத்தில்
வர்த்தகமாகாத கடைச்சரக்கு
ஆசிரியன் என்பதில் தான் என் மிடுக்கு
ஆசிரியன் சொல் பட்டே
அறிவு அடுத்த தலைமுறைக்கு தாவுகிறது
கலைகள் என்னைச் சொல் என்னைச் சொல்
என்று ஆசிரியனிடம் கூவுகிறது
இறுதியாக ஒன்று சொல்கிறேன்
காலமே நீ குறித்துக் கொள்
காற்றே நீ பயனிக்கும் திசையெல்லம் பரப்பி வை
கடல் அலைகளே உன் கரைகளில் பதிந்து வை
வெடிக்காத எரிமலையாய்
தொடுக்காத மாலையாய்
உதிரிப்பூக்களாய் சிதறிக்கிடக்கும்
ஆசிரிய சமூகமே ஒன்றுபடு
பரிதியின் பால் வெள்ளிக் கிரணங்கள்
இருள் கிழிக்கும் ஓர் நாளில்
ஓர் சரித்திரம் நிகழ வேண்டும்
அரிதாரங்கள் அரசாண்டது போதும் - இனி
ஆசிரியன் அரசாளட்டும், ஆம்
அரசு ஓர் ஆசிரியன் கையில் வரவேண்டும்
அறிவை சொல்பவன் அரசாளட்டும்
நேர்மையாய் வாழ்பவன் தேசம் காக்கட்டும்
வகுப்பறை தேசங்களை ஆண்டவன்
புவியியல் தேசங்களை ஆளட்டும்
சுண்ணக்கட்டிகளை செங்கோலாக்குவோம்
எழுதுகோல்களே எழுந்து வாருங்கள்
அடுத்த புரட்சி நம்முடையதாய் இருக்கட்டும்
ரெ.ஐயப்பன்