Tuesday 15 November 2016

பணம் பதுக்கிய முதலைகளை காண முடியவில்லை



பணம் பதுக்கிய முதலைகளை காண முடியவில்லை
இந்தியாவில் இருந்து கருப்பு பணம் ஒழியப்போகிறது என்ற வாதமும், ஒரு மிக நல்ல காரியத்தை பிரதமர் மோடி அவர்கள் செய்து விட்டார், இப்போது என்ன சொல்கிறீர்கள் என்று சவால் விடுவதையும் பார்கிறேன். 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது என அறிவிப்பதால் பதுக்கி வைக்கப்பட்ட பணம் முழுவது வெளியே வரும் என்பதை நம்ப முடியவில்லை. ஆற்றின் மாசுகளை துணியில் வடிகட்டுவது போன்றது தான் இது. கருப்பு பணத்தின் ஊற்றுக்கண், அடைபடும் வரை நதி தூய்மையடைய போவதில்லை. இது விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படலாம். கருப்பு பணம் உருவாவதை தடுக்காமல் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது.
இந்த அறிவிப்பால் வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம் வெளியே வராது, சொத்துக்களாக மாற்றப்பட்ட கருப்பு பணம் வெளியே வராது, தங்கமாக மாற்றப்பட்ட கருப்பு பணம் வெளியே வராது. பணத்தை கட்டு கட்டாக பதுக்கி வைத்திருப்பவர்கள் அதை பினாமிகள் வழியே ஓரளவு கருப்பு பணத்தை காப்பாற்றிவிடுவர். ஓரளவு பணம் வேண்டுமானால் எரிக்கப்படலாம், கிழிக்கப்படலாம், அரசுக்கு சற்று வரி வருமானம் உயரலாம். ஆனால் இது நிரந்தரமா? முன்னாள் நிதியமைச்சர் திரு.சிதம்பரம் சொல்வது போல் இதன் பயன் சொற்பமாக தான் இருக்கும் என தோன்றுகிறது. நாட்டின் பொது நலன் கருதி என்ற போர்வையில் மோடி விளம்பரம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு புரம் கார்பரேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பாரதத்தின் பிரதமருக்கு யார் சொல்வது அவர் கைகுலுக்குபவர்களிடம் கருப்பு பணம் தஞ்சமடைந்துள்ளது என்று?
ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் வைத்திருந்தாலே அது கருப்பு பணம் என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டது இந்த அரசு. எங்கள் உழைப்பில் துளிர்த்த அந்த சொற்ப பணத்தை சந்தேகித்து விட்டது இந்த அரசு. ராகுல் காந்தியும் அரவிந் கெஜ்ரிவாலும் சொல்வது போல் வங்கியின் முன் நிற்கும் நீண்ட வரிசையில் பணம் பதுக்கிய முதலைகளை காண முடியவில்லை.
வருமானம் இல்லாதவர்கள் பேரில் சொத்து வாங்ககூடாது என்ற சட்டத்தை அரசு கொண்டுவரமுடியுமா?
தங்கம் வாங்குவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் எனறு ஒரு சட்டத்தை அரசால் உருவாக்க முடியுமா?
நிலம் அரசின், மக்களின் சொத்து, நிலத்தை அரசிடம் மட்டுமே விற்கவோ வாங்கவோ முடியும் என்ற நடைமுறையை அரசால் கொண்டுவரமுடியுமா?
பொருள்களின் உயர்ந்த பட்ச விலையை அரசின் ஒப்புதலோடு தான் நிர்ணயிக்கமுடியும் என்ற நடைமுறையை இந்த அரசால் உருவாக்க முடியுமா?
இதையேல்லாம் செய்யும் அளவிற்கு இந்த அரசு நியாமான அரசா? இவ்வளவு ஏன் பிரதமர் மோடியின் டிஜிடல் இந்தியா கனவை நினைவாக்கும் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ எப்படி 6 மாதங்களுக்கு அளவில்லா இணையத்தை வாடிக்கையாளர்களுக்கு தரமுடிகிறது? இந்த கேள்வியை அரசால் 4ஜி ஏலத்தை நேரடியாக எடுக்க இயலாத இந்த நிறுவன உரிமையாளரிடம் கேட்க முடியுமா?
பஞ்சாபை சார்ந்த பாஜக நிர்வாகி 6/11 அன்றே 2000 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து முகநூலில் வெளியிட்டதை ஆம் ஆத்மி வெளிகொண்டுவந்துள்ளது. இதற்கு பாஜகவின் பதில் என்ன? கருப்பு பணத்தை ஒழிக்க உண்மையில் இந்த அரசுக்கு அக்கறையிருந்தால் அரசியல் கட்சிகளிடம் குவிந்துள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர என்ன திட்டம் வைத்துள்ளது? சுமார் பத்து மாதங்களாக இதற்காக வேலை செய்கிறோம் என்று பிரதமர் சொல்வது உண்மையானால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழைகள் உள்ளது புகைப்படத்துடன் வெளியாகும் செய்திகளுக்கு அரசின் பதில் என்ன?