Wednesday 19 April 2017

நீர் வளம் காப்போம்

நீர் வளம் காப்போம்
திரு.பிரபாகர் என்பவர் தாமிரபரணி ஆற்றில் பெப்சி மற்றும் கொக்கோகோலா குளிர்பாண நிறுவனங்கள் நீர் உறிஞ்சுவதை தடை செய்ய வேண்டும்  பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் தடைக்காக குறிப்பிட்டுள்ள காரணங்களை காண்போம்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் நீர்பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இருப்பது தாமிரபரணி மற்றும் அதன் துணை மற்றும் கிளை ஆறுகள் தான்.
தினந்தோறும் சுமார் 12.5 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக குடிநீர் வாரியத்தால் உறிஞ்சப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அங்கு உள்ள சிப்காட்டில் உள்ள 73 தொழிற்சாலைகளுக்கு 1.8 கோடி லிட்டர் நீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள பெப்சி கோலா ஆலைக்கு நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் என்ற அளவில் 99 ஆண்டுகளுக்கு உறிஞ்சிக்கொள்வதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
1000 லிட்டர் நீருக்கு 37.50 பைசா அரசுக்கு பெப்சி கோலா நிறுவனம் செலுத்தினால் போதுமானது. அவர்கள் அதை குளிர்பானமாக பல மடங்கு அதிக விலைக்கு விற்கிறார்கள்.
பெப்சி கோலா ஆலை மான் பூங்காவிற்கு 4 கி.மீ மட்டுமே தொலைவில் உள்ளது. மான்களின் நீர் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதி மன்ற கிளையின் நீதியரசர்கள் திரு.நாகமுத்து மற்றும் திரு.முரளிதரன் கொண்ட அமர்வு பொது நலன் கருதி பெப்சி கோலா நிறுவனம் தாமிரபரணி ஆற்றில் நீர் உறிஞ்ச 22/11/16ல் இடைக்கால தடை விதித்தது. இது பெரு நிறுவனங்களுக்கு எதிரான பெரு வெற்றியாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மார்ச் 02 2017ல் இவவழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகியது. நீதியரசர்கள் திரு.கலையரசன் மற்றும் திரு.செல்வம் கொண்ட அமர்வு இடைகால தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த பிராபாகர் கூறுகையில் இந்த நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட 15 லட்சம் லிட்டர் அளவை தாண்டி 30 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சிகொண்டிருக்கின்றன. இது நீர் வளத்தை கடுமையாக பாதித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வளங்களை காப்பதில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பனின் காலநிலை வகைப்பாட்டில் ஏஎஸ் அதாவது வெப்ப மண்டல் சவானா வகைக்குள் தமிழ் நாடு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வறண்ட காலநிலை முதல் அரை பாலைவன கால நிலை ஆகும். தமிழகத்தின் சராசரி மழையளவு வெறும் 94.5 செ.மீ மட்டுமே. வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் நமக்கு கிடைக்கவேண்டிய சராசரி மழையளவு 44 செ.மீ ஆனால் நமக்கு 2016 இப்பருவத்தில் கிடைத்தது 16 செ.மீ மட்டுமே. தமிழகத்தின் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பெரு வறட்சியில் உள்ளதாகவும் 11 மாவட்டங்கள் பற்றாக்குறையில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. என்ன செய்ய போகிறோம் நாம்? ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment