Wednesday 12 April 2017

இது தான் பிஜேபி



இது தான் பிஜேபி
உத்திரபிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தீவிர இந்துத்வா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இவரை பிஜேபி முதல்வராக்கியுள்ளது. இவரை பற்றி சற்று அறிந்துகொள்வது நம் கடமையாகிறது.
44 வயதான இவர் கோரக்பூர் மக்களவை தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கோரக்னாத் மடத்தின் தலைமை பீடாதிபதியாகவும் உள்ளார். இவர் இந்து யுவ வாகினி என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார். 2005ல் கிருஸ்துவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டுவர தீவிர முயற்சி எடுத்தார். உத்திரபிரதேசத்தில் உள்ள இடா என்னும் நகரில் 1800 கிருஸ்துவர்களை இந்துக்களாக மாற்றினார். உத்திரபிரதேசம் மற்றும் இந்தியா முழுமைக்கும் மற்ற மதத்தவரை இந்துக்களாக மாற்றி இந்தியாவை இந்து தேசமாக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார்
2005ல். 2007ல் கோரக்பூரில் முகரம் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் ராஜ் குமார் அக்ரஹாரி என்ற இந்து வாலிபர் உயிரிழந்தார். இதை தொடர்ந்த கலவரங்களால் மாவட்ட நீதிமன்றம் யோகி ஆதித்யநாத் கலவர பகுதிக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்தது. ஆனால் தடையை மீறிய யோகி ஆதித்யநாத் கலவர பகுதிக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து முஸ்லீம்களின் புனித வழிபாட்டு தலமொன்று இவருடைய ஆதரவாளர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பொது அமைதிக்கு இடையூரு செய்ததற்காக   இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 151 ஏ, 146, 147, 279, 506 களில் கைது செய்யப்பட்டார். இவருடைய கைது இவருடைய ஆதரவாளர்களை ஆத்திரமூட்டியது. இவருடைய அமைப்பான இந்து யுவ வாகினியை சேர்ந்தவர்கள் மும்பை – கோரக்பூர் இரயில் வண்டிக்கு தீ வைத்தனர்.
அஸம்கார் என்னும் இடத்தில் பொது மக்களிடையே பேசிய யோகி ஆதித்யநாத் ஒரு முஸ்லிம் ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நாம் இந்துக்கள் 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆகஸ்டு 2014ல் பேசியுள்ளார். இதே பேச்சில் முஸ்லிம்கள் ஒரு இந்துவை கொன்றுவிட்டால் நாம் 100 முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று முழங்கியுள்ளார்.
ஜீன் 2015 அவர் பேசிய இன்னொரு பேச்சில் சூரிய நமஸ்காரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், சூரிய கடவுளை ஏற்காதவர்களை கடலில் மூழ்கடித்து கொல்ல வேண்டும் அல்லது அவர்களது வாழ்கை முழுவதும் இருட்டறையில் தள்ள வேண்டும்.
தெரஸா சேவை செய்வது என்ற போர்வையில் கிருஸ்துவத்தை இந்தியாவில் பரப்பினார் என்று அன்னை தெரஸாவையும் விட்டு வைக்கவில்லை இந்த யோகி ஆதித்யநாத்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் 7 முஸ்லிம் நாடுகளை சார்ந்தவ்ர்கள் அமெரிக்கவில் நுழைய தடை விதித்ததை யோகி ஆதித்யநாத் ஆதரித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் டிரம்ப் செய்தது போல இந்தியாவும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கவேண்டும் என்று பேசியுள்ளார்.
இப்படிப்பட்ட ஒருவரைத்தான் பிஜேபி முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது. சற்றும் மதசகிப்புத்தன்மை அற்ற ஒருவரை முதல்வராக பிஜேபி தேர்ந்தெடுத்துள்ளதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இது தான் பிஜேபியின் நிஜ முகம். துறவிகளுக்கு பதவி அரசியலில் என்ன வேலை? ஐரோப்பாவில் சர்ச்சுகள் செல்வாக்கு பெற்று அரசியலில் நுழைந்ததால் சுரண்டல்களும், வர்க்க வேறுபாடுகளும் அதிகரித்தன. இறுதியில் மக்கள் புரட்சியில் அதிகாரம் தூளாக்கப்பட்டது. இந்தியாவில் இப்போது துறவிகளும், மடங்களும் அரசாட்சியில் செல்வாக்கு பெறுகிறது. இது நமது நாட்டிற்கு நல்ல செய்தி இல்லை.  ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment