Tuesday 19 May 2015

மக்களின் முதல்வருக்கு மக்களில் ஒருவனின் ஒர் கடிதம்



மக்களின் முதல்வருக்கு மக்களில் ஒருவனின் ஒர் கடிதம்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு
    இந்த ஜனநாயகம் மக்களுக்கு கருத்தை தெரிவிப்பதற்கும், அரசை கேள்வி கேட்பதற்கும், விமர்சிப்பதற்கும் எல்லா உரிமைகளையும் கொடுத்துள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
    செல்வி.ஜெயலலிதா அவர்களே நீங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எப்படியோ சில சர்சைகள், சந்தேகங்கள் இருந்தாலும் நீங்கள் விடுவிக்கப்பட்டது சுமார் 46% வாக்குகளை அளித்த அதிமுக ஆதரவாளர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி தான். அதற்காக தமிழகமெங்கும் வெடி வெடித்து சாலைகளை குப்பையாக்கினர். உங்கள் ஆதரவாளர்களிடம் இந்த செயலை தவறு, ஏன் இப்படி பொது இடத்தை அசுத்தமாக்கினீர்கள் என்று கோபித்துக்கொண்டிர்களா? இப்படி ஒரு கருத்து உங்களிடம் இல்லை என்று தான் நினைக்கிறேன், ஏனென்றால் நீங்கள் வழக்கிலிருந்து தப்பிக்கும் போதோ அல்லது தேர்தலில் வெற்றி பெறும் போதெல்லாம் உங்கள் கட்சியினர் இப்படித்தான் தெருக்களை குப்பையாக்கியுள்ளனர். ஏன் நீங்கள் இந்த கலாசாரத்தை ஆதரிக்கிறீர்கள்?
சட்டமன்ற முதல்வர் திரு.பன்னீர் செல்வத்தின் ஆட்சி உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? ஆம் எனில் அவரை முதல்வராக தொடரச்செய்து ஜனநாயகத்தை செழுமையுறச்செய்யலாமே, உங்கள் பிரதான எதிர்கட்சியான திமுக விற்கு உதாரணமாக திகழும் வாய்பை ஏன் தவறவிடுகிறீர்கள்? காமராஜருக்கு பிறகு பதவியை உதறிய பெருமை உங்களுக்கு கிட்டுமே. இதற்காக நீங்கள் திரு.பன்னீர் செல்வத்தின் ஆட்சி சரியாக இல்லை என்று சொல்லிவிடாதீர்கள் ஏனெனில் உங்களின் வழிகாட்டுதலின் பெரில் தான் அவர் ஆட்சி நடைபெற்றுள்ளது.
நீங்கள் வழக்கிலிருந்து தப்பிக்க உங்கள் கட்சியினர், மண் சோறு சாப்பிடுதல், யாகங்கள் செய்தல், பூஜைகள் செய்துள்ளனர். அது அவர்களின் நம்பிக்கை ஆனால் பெரியாரின் பாசறையிலிருந்து வந்த அண்ணாவின் பெயரை இனியும் நீங்கள் கட்சியின் பெயரில் வைக்கலாமா?  உங்கள் கட்சியின் கொள்கையிலிருந்து வெளியேற்றிய அண்ணாவை கொடியிருந்தும், கட்சியின் பெயரிலிருந்து வெளியேற்றுவதில் சிரமம் இல்லை. செய்வீர்களா?
மது விலக்கு தமிழகத்தில் சாத்தியமில்லை என்று கூறுகிறது உங்கள் தலைமையிலான அரசு, நல்லதை உங்களால் செய்யமுடியாத போது அடுத்தவர்களுக்கு வழிவிடுவது தானே முறையான செயல். மதுவை அகற்றமுடியாத, முயலாத நீங்கள் தேர்தல் அரசியலை விட்டு ஏன் விலகக்கூடாது. மற்றவர்கள் முயற்சி செய்வதை ஆதரிக்கலாமே. ஏன் இந்த ஜனநாயக போக்கு உங்களிடம் இல்லை?
தமிழகத்தில் பொறியியல் பெரிதாக வளர்ச்சியுறாத காலகட்டத்தில் கூட எண்ணற்ற அணைகள், நீர் தேக்கங்கள், தொழிற்சாலைகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டியது. பொதுப்பணித்துறை என்ற ஒரு துறையை வைத்துக்கொண்டு சாலை அமைத்தல், பாலம் அமைத்தல் என அனைத்திற்கும் ஒப்பந்த புள்ளிகளை தனியார் கட்டுமான அமைப்புகளிடம் கோருவது ஏன்? உங்கள் அரசின் பொதுப்பணித்துறையினால் சாலைகள், பாலங்களை கட்டமுடியாதா? அல்லது உங்கள் கட்சியினர் பயனடைவதற்காக பொதுப்பணித்துறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளதா?
அம்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் பயன்படுத்தப்படும் அம்மா என்ற சொல் உங்களை தான் குறிக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா? மக்கள் வரிப்பணத்தில் உங்களை விளம்பரம் செய்து கொள்வது ஜனநாயக நாட்டில் என்ன நியாயம்? அடுத்தவர் மொய் பணத்தை தன் பெயரில் பரிசளிக்கும் கள்ளத்தனம் தானே?  

Annual Status of Education Report -2014 ல் உள்ளதுபடி 31% தமிழக அரசுப்பள்ளிகள் பெண்குழந்தைகளுக்கான கழிவறை வசதி இல்லாமலும், அப்படி இருந்தால் பயன்படுத்தமுடியாத நிலையிலும் இருக்கிறது. உங்களால் காமராஜர் உருவாக்கியது போல் பொதுத்துறை தொழிலகங்களைத்தான் கட்டமுடியவில்லை, பள்ளிகளில் கழிப்பறைகளைக் கூட 100% கட்ட முடியவில்லை என்பது உங்களுக்கு அவமானமாக இல்லையா?
நீங்கள் ஊழல் செய்வதும், தண்டனை பெறுவதும், பதவி விலகுவதுமாகத்தான் உங்கள் அரசியல் பயணம் உள்ளது. நீங்கள் பதவி நீங்கள் தண்டனை பெறும் போதும், தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதனால் எவ்வளவு பொருள் விரயம், உழைப்பு விரயம் ஏற்படுகிறது. இதனை உணர்ந்து நீங்கள் ஏன் மக்களின் முதல்வராகவே இருக்கக்கூடாது, உங்கள் வழிகாட்டுதலின் பெயரில் உங்கள் கட்சியின் ஒரு தன்மான சிங்கம் ஆட்சி நடத்தும் அவலத்தை இடைத்தேர்தல் வீண் செலவுக்காக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்ன சொல்கிறீர்கள்?
உங்களுக்காக தீக்குளிக்கும் அளவிற்கு விசுவாசமான தொண்டர் படை உங்களுக்கு உள்ளது வாழ்த்துக்கள், ஆனால் ஒரு டீ குடிக்கக்கூட முடியாத சூழலில் இருக்கும் மக்களுக்கு, நீங்கள் திமுகவுடன் போட்டி போட்டுக்கொண்டு போலி இலவசங்களை வழங்கியதை தவிர தன்மானத்துடன் வாழ என்ன செய்துள்ளீர்கள்?
மின்சார தட்டுபாடும் உங்கள் தேர்தல் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். இந்த நான்காண்டுகளில் எத்தனை காற்றாலைகளை தமிழக அரசு நிறுவியுள்ளது? எத்தனை சூரிய மின் சக்தி பூங்காக்களை தமிழக அரசு அமைத்துள்ளது?
பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பத்திரப் பதிவு, வாகன உரிமம் என அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடியிருப்பது உங்களுக்கு தெரியாதா? லஞ்சத்தை நீக்க இதுவரை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? அதில் நானே பங்குதாரர் என்கிறீர்களா?
உங்களிடம் கேட்க இன்னமும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், அந்த பண்பு உங்களிடமும் இல்லை என்ன செய்வது?
ஒரு கைப்பையை பேருந்தில் திருடுபவனை அந்த பேருந்தில் உள்ள அனைவரும் சேர்ந்து அடித்து துவைக்கும் அளவுக்கு கோபமான தமிழர் இனம், நீங்கள் எத்தனை முறை தவறு செய்தாலும் உங்களை மன்னித்து மன்னித்து பதவி வழங்குகிறது. நீதிமன்றமும் உங்களை மன்னிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இப்படி ஆசிர்வதிக்கப்பட்ட நீங்கள் ஆணவத்துடன், ஜனநாயக மாண்புகளை குப்பைத்தொட்டியில் தூக்கியேறிவதில் எந்த வியப்பும் இல்லை. வாழ்க ஜனநாயகம். ரெ.ஐயப்பன் 
    

No comments:

Post a Comment