Saturday 8 June 2013

கசக்கும் மீத்தேன்


கசக்கும் மீத்தேன்
நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்படும் மிகப் பெரிய செயல் திட்டங்கள் தற்போது கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன.  கூடங்குளம், எரிவாயு குழாய் பதிப்பு, என்று இந்த பட்டியல் நீள்கிறது.  இந்தத் திட்டங்கள் பொருளாதார மேம்பாட்டுக்கானவை என்று எடுத்துக்கொண்டாலும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் போது சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மக்கள் போர்க்கொடி உயர்த்துவது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.
இப்பொழுதும் காவேரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. 29 ஜுலை 2010 ல் கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் நம் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.   பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரகமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
காவேரிப் படுகையில் புதுச்சேரியை அடுத்து பாகூரில் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார் குடிக்கு தெற்கு பகுதி வரை நிலக்கரி, மீத்தேன் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த படிமங்கள் பேலியோஸின் காலத்தவை, அதாவது சுமார் 56 முதல் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உருவானவை. இந்த மீத்தேனை இராட்சத குழாய் கிணறுகள் மூலம் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ள்து. இந்த படிமங்கள் 500 முதல் 1650 அடி ஆழத்தில் கானப்படுகின்றன. இவற்றை எடுக்க தஞ்சை மாவட்ட்த்தில் திருவிடைமருதுர், கும்பகோணம், ஒரத்த நாடு, பாபநாசம் பகுதிகளில் சுமார் 12 கிணறுகளும், திருவாருர் மாவட்ட்த்தில் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் 38 கிணறுகளும் துளையிடப்படவுள்ளன.
மீத்தேன் படிமங்களை நீரானது அழுத்தி புவியாழத்தில் நிலை நிறுத்தி வைத்துள்ளது.  இந்த மீத்தேனை வெளிக்கொணர அவற்றை அழுத்தியிருக்கும் நீரினை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு வெளியேற்றப்படும் பொழுது நிலத்தடி நீர் மட்டம் சுமார் 500 அடிகளுக்கும் கீழே செல்கிறது. உலகில் மீத்தேன் எடுக்கப்படும் பல இடங்களில் நிலத்தடி நீர் ம்ட்டம் தாழ்வு கண்டறியப்பட்டுள்ளது.
இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான காவேரி நீர் படுகை ஏற்கனவே காவேரி நீர் பிரச்சனையால் கடும் வரட்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஒரளவு விவசாயிகளை காப்பாற்றுவது நிலத்தடி நீர் மட்டுமே, அதையும் மீத்தேன் என்ற பெயரில் வெளியேற்றிவிட்டால் சோழ மண்டலம் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது.
இந்த படுகைகள் கடலோர பகுதியில் உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் பொழுது நீர் உறிஞ்சு பாறைகளின் வழியாக கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை உப்புத்தன்மை மிக்கதாக மாற்றிவிடும் என்று இயற்கை  வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரித்துள்ளார். ஏன் இப்படிப்பட்ட் திட்டங்களை அரசு கையிலெடுக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது.  வாழ்வாதரங்களை அழித்துவிட்டு யாரை வாழ வைக்க இந்த திட்டங்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ரெ.ஐயப்பன்



2 comments:

  1. ஏன்னெனில் இந்த தேசம் என்பது முதாலியத்தின் நலனை பெரிதும் போற்றி பாதுகாக்கின்ற தேசம், அது காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ச.க வாக இருந்தாலும் சரி, இவை இரண்டுமே முதலாலியத்தின் கைக்கூலியாகவே நேரடியாக செயல்படுவதை நம்மால் காணமுடிகிறது அதனுடைய தொடர்ச்சிதான் இத்தகு மக்கள் எதிர்ப்பு திட்டங்கள் அனைத்தும். ஏனவே இத்தகு பாசிச, ஏகதிபத்திய அரசை நாம் மாற்ற வேண்டும் என்று ஒரு எண்ணம் நம் மனதில் தோன்றினால், அதற்கு ஒரே தீர்வு மொழி வழி மாநிலங்களை சுய அதிகாரம் படைத்த ஒரு தேசமாகவும், இந்தியாவை ஒன்றியமாகவும் மாற்றினால் ம்ட்டுமே அந்த தந்த வளங்கள் பாதுகாக்கப்படும். இல்லை மந்திய அரசுக்கு இன்னும் அதிகாரம் கூடுதலாக வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய தீவிரவாத தடுப்பு படை என்ற பெயரில் காவல் துறையை மாநிலங்களில் இறங்கிவிட்டு திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற எண்ணம் அரசுக்கு இருக்குமேயானல் அது சோவியத்து ரசியா போன்றதொறு முடிவை இந்தியத்துனைகண்டம் காண நேரிடும், இது தவிர்க்க முடியாதது தோழர்.

    ReplyDelete
  2. கருத்துக்கள் மிகவும் அற்புதமாக உள்ளன.சோழ மண்டலம் பாலைவனமாவதை தடுக்க முயற்ச்சிப்போம்.

    வெ. அனிருத் சாரங்

    ReplyDelete