கடவுள்களை விடுதலை செய்வோம்
வெகு
நாட்களாகவே தெய்வங்களை உயர்வாக நினைக்கும் மனம் மதங்களை சற்று நெருடலுடன் பயணித்துகொண்டிருந்தது.
விளக்கங்கள் கிடைக்கவில்லை. ஒன்று பக்தி மார்க்கத்தை முழுமையாக ஏற்ற பக்திமான்கள் அல்லது நாத்திகத்தை
ஏற்ற சிந்தனையாளர்கள். இதற்கு மையத்தில் உள்ள சிந்தனைகள் நிந்தனைக்குறியதாக எனக்கு
தெரியவில்லை. அதுவும் மதிக்கத்தக்கது தான்.
கடவுள்
நிலையானவர், மதங்கள் நிலையாதா? அழிந்து போன மதங்கள் உண்டு, உருமாறிய மதங்கள் உண்டு,
புதிய மதங்கள் உண்டு, இனி புதிதாக பிறக்ககூடிய மதங்களும் உண்டு. நிலையான கடவுளுக்கு
இத்தனை விதமானமதங்கள் எப்படி? எப்படி தேசியவாதம்
மனித சமூகத்தின் இடையே குறுக்கும் நெடுக்குமாய் எல்லைக்கோடுகளை கிழித்து வன்மத்தை பரப்பி
போர் ஆயுதங்களை தயார் செய்ய வைத்ததோ அதே போல் தான் மதங்களும் இயங்குகின்றன. ஒரு படி
மேலே சென்று ஒரு தேசத்திற்குள்ளேயே மக்களை பிரித்து வன்மத்தை விதைத்துக்கொண்டிருக்கிறது.
அர்த்தமற்ற சடங்குகளுக்குள் மக்களை ஆழ்த்தி முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறது.
மிகவும் முக்கியமாக மனிதநேய சிந்தனைகளை புறம் தள்ளுகிறது. ஆங்காங்கே அமைதியை விரும்பும்
பெரியோர்கள் மதநல்லிணக்கத்திற்காக பல்வேறு முயற்சிகள், சடங்குகள் போன்றவற்றை எடுக்கவேண்டிய
கட்டாயம் ஏற்படுகிறது. எங்கெல்லாம் மதம் அரசியல்வாதிகள் கைகளில் சிக்குகிறதோ அங்கெல்லாம்
மதவெறி மக்கள் மனதில் விளைய ஆரம்பிக்கிறது.
அஞ்ஞாணவாத
இறையியல் (Agnosticism) அதாவது கடவுளுடைய இருப்பு குறித்து மனித அறிவினால் அறிய முடியாது
என்னும் இந்த வாதம் கூட சரியாகத்தான் தோன்றுகிறது. பரிணாமவாதத்தை முன்வைத்த சார்லஸ் டார்வின் கூட இந்த
அறிவின்மைவாத இறையியலை ஏற்றவர் தான். இவர் பைபிளை தெய்வீக வெளிப்பாடாக ஏற்கவில்லை.
ஆனால் முழுமையான நாத்திகராகவும் அவர் இருக்கவில்லை. டார்வினின் பரிணாம கொள்கையை ஏற்கும்
நாம் ஏன் இந்த கொள்கையை பரிசீலிக்க கூடாது.
ஜெர்மானிய
தத்துவ அறிஞர் இமானுவேல காண்ட் கூட புலன்களால இறைவனை அறியமுடியாது, அதே நேரத்தில் மனித
சமுதாயத்தில் ஒழுக்கத்தை ஏற்படுத்த கடவுள் தேவை என்கிறார். மத நிறுவனங்கள் மூட நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின்
கூடாரமாக இருப்பதை விமர்சிக்கிறார்.
”மதமெனும்
பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்கிறார் ஜீவகாருண்ய சீலர் வள்ளலார். இன்னும் ஒரு படி
மேலே சென்று “பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே” என்கிறார்.
கடவுள்
பிரபஞ்சத்ததை உருவாக்கினார், ஆனால் பூமியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் அவர் பங்கேற்பதில்லை
என்கிறது டேயிசம் (Desim).பிரஞ்சு தத்துவ அறிஞர் வால்டேர், அமெரிக்க முன்னாள் அதிபர்
தாமஸ் ஜெபர்சன் மற்றும் எழுத்தாளர் தாமஸ் பெயின் போன்ற அறிஞர் பெருமக்களும் மதங்களற்ற
கடவுள் கோட்பாட்டிற்கு இசைவான கருத்துக்களை கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டின்
ஆக சிறந்த சிந்தனையாளார், எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் கூட கடவுள் நம்பிக்கை கொண்டவர்
என்றாலும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். கடவுளின் இருப்பை உணர்வின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டவர்,
ஆனால் அறிவால் அதை நிரூபிக்க முடியாது என்று கூறியவர். கடவுள் நம்பிக்கையை தனிமனித அனுபவமாகவே பார்த்தார்.
பகுப்பாய்வு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற மேற்கத்திய தத்துவ அறிஞர் பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம்
ரசல் மதமும், மதநோக்கும் அறிவு வளர்ச்சியை தடுப்பவவை, அச்சத்தையும் சுதந்திரமின்மையையும்
வளர்க்கிறது. அதனால் போர், துன்பம், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்க்கு பொறுப்பாகிறது என்கிறார். நான் ஏன் கிருஸ்துவன் இல்லை என்ற புத்தகம் கிருஸ்தவ
இறையியலை கேள்விக்குள்ளாக்கியது. சில காலம் கடவுள் ஏற்பு, சில காலம் நாத்திகர் என்று
சென்றாலும், மத நிறுவனங்களை மறுப்பு எப்போதும் கொண்டிருந்தார்.
கடவுள்
மதத்திற்கு உட்பட்டவர் என்ற சிந்தனை கடவுளை சிறுமைபடுத்தே அன்றி வேறில்லை. புதிய மதங்கள் உருவாகலாம், மதங்கள் தங்களுக்குள்
கூட்டணி அமைக்கலாம், மதங்களுக்குள் புதிய பிரிவுகள் உண்டாகலாம் போன்ற அனைத்தும் நாகரீக
குறைவை நோக்கிய நகர்வாகவே படுகிறது. கடவுள் ஏற்பு மற்றும் மத மறுப்பு மனிதநேயத்தை நோக்கிய
நகர்வாகவே கருதுகிறேன். கடவுள் பற்றிய அதிகப்படியான
சிந்தனை மற்றும் தத்துவங்கள் அவசிய குறைவானது. நாகரீகத்தின் வளர்ச்சி மனித நேயத்தை
சிகரங்களை உயர்த்திக்கொண்டிருப்பது அன்றி வேறில்லை. எல்லா சக்தியும் உடைய கடவுளை மதங்களுக்குள்
அடைப்பது மனித ஆணவத்தின் வெளிப்பாடு. சடங்குகள் அனைத்துமே அறியாமையின் வெளிப்பாடுதான்.
கடவுள் ஏற்பு என்பது நாத்திகர்களுக்கு அச்சம் மற்றும் அறியாமையின் அடையாளமாக கூட தெரியலாம்,
ஆனால் கடவுள் ஏற்பவருக்கு மத நிறுவனங்கள், சடங்குகள் மற்றும் மதம் சார்ந்த அரசியலை
மறுப்பதற்கு அதிக உரிமை உள்ளதாக தோன்றுகிறது.
“மக்களின்
உண்மையான மகிழ்ச்சிக்காக, மாயையான மகிழ்ச்சியாக திகழும் மதத்தை அழிப்பது இன்றியமையாததாகிறது.”
– காரல் மார்க்ஸ்.
ரெ.ஐயப்பன்
கழக ஆசிரியர்
No comments:
Post a Comment