Saturday 12 August 2017

இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் மீதான சவுக்கடி



இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் மீதான சவுக்கடி
ஜிஎஸ்டியினால் எந்த பொருள்கள் விலை உயர்ந்துள்ளது எந்த பொருள்களின் விலை குறைந்துள்ளது என்று ஆராயும் வேலையில், இந்த ஜிஎஸ்டியினால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை யார் மக்களுக்கு எடுத்துச்சொல்வது?
அரசியல் சாசன விவாதங்களில் விற்பனை வரிக்கு உச்ச வரம்பினை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்ற வாதத்திற்கு பதிலளித்த அம்பேத்கார் “நாட்டின் பல வளங்கள், வருமானங்கள் மத்திய அரசுக்கு உள்ளது. மாநில அரசுகள் சுயமாக செயல்பட ஒரு முக்கியமான வருமானத்தையாவது அவர்கள் உரிமைக்கு கொடுக்க வேண்டும் எனவே விற்பனை வரிக்கு மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயிக்க கூடாது என்றார். இதிலிருந்து நாம் அறிவது என்ன? இப்போது நடப்பது என்ன? உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
மாநில அரசுகள் வரி விதிப்பதில் உள்ள உரிமைகளை இழந்து விட்டது. இனி மாநில அரசுகள் வரி உயர்த்த, குறைக்க அல்லது வரி விலக்கு கொடுக்க ஜிஎஸ்டி கவுன்சிலிடம் போய் நிற்க வேண்டும். தனக்கு சாதகமான முடிவை எடுக்க வைக்க 4கில் 3பங்கு அதாவது 75% ஓட்டுகளை பெற வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஓட்டு உண்டு. அனைத்து மாநிலங்களின் ஓட்டு மதிப்பும் 3ல் 2 பங்கு அதாவது 66.6%. மத்திய அரசுக்கு 3ல் 1 பங்கு ஓட்டு மதிப்பு உள்ளது. அதாவது மத்திய அரசு செலுத்தும் ஒரு ஓட்டிற்கு 33.3% ஓட்டு மதிப்பு உள்ளது. மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் ஒரு மாநிலம் தனக்கான வரியை நிர்ணயம் செய்ய முடியாது.
முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடிக்கும் அமெரிக்காவில் ஜிஎஸ்டி இல்லை. அமெரிக்க மாகாணங்களுக்கு வரியை தீர்மானிக்கும் உரிமை உண்டு. மாகாணத்திற்கு மாகாணம் அமெரிக்காவில் வரிகள் வித்தியாசப் படுகின்றன. அமெரிக்க கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதையெல்லாம் நாம் அவர்களிடமிருந்து கற்க தயாராக இல்லை.
இந்திய அரசியல் சாசனம் இந்தியாவை ஒரு யூனியன் என்கிறது. தேசங்களின் கூட்டமைப்பு தான் யூனியன். இந்திய பன்மை தனத்திற்கு உரிய மரியாதை கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஜிஎஸ்டி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டெலிகிரப் போன்ற பத்திரிக்கைகள் விமர்சித்துள்ளது. ஒற்றுமைபடுத்துகிறேன் என்ற போர்வையில் இந்திய பன்முகத்தன்மையை ஒருமைபடுத்துவது நாசிசம், பாசிசம், ராஜபக்சேயிசம் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?
ரெ.ஐயப்பன் கழக ஆசிரியர்

No comments:

Post a Comment