Monday 22 August 2016

சுதந்திரம்



சுதந்திரம்

ஆதவன் இளங்கதிர் பரப்பும் காலையிது
முன்னோர் தியாகத்தை நினைவு
கூறும் நேரமிது.

மூவர்ண கொடி வணங்க
வந்திருக்கும் சிட்டுகளே
இந்திய தேசத்தின் மொட்டுகளே
உங்களுக்கு என் வணக்கம்

சும்மா இருப்பதல்ல சுதந்திரம்
சோம்பி படுப்பதல்ல சுதந்திரம்
தேசத்ததை மதிக்காத நீங்கள்
சுவாசிப்பதில் பயனில்லை
கல்வி வாசிப்பதில் பொருளில்லை

நீ வாழ வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்.
நீ இந்த தேசத்தை ஆள வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்.
கோயில் கருவரை முதல்
கல்லறை வரை சமத்துவம் வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்
நீதி வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்
நிதி வேண்டுமா?
சுதந்திரம் வேண்டும்
ஏன் இவ்வளவு
நிம்மதியாய் நீ வாழ வேண்டுமா- உனக்கு
சுதந்திரம் வேண்டும்.
ஏவல் செய்வதல்ல சுதந்திரம்
கண் விழித்து கடமையென்னும் காவல் செய்வது தான் சுதந்திரம்

அடுத்தவனுக்கு அடிமையாவது மட்டும் அடிமைத்தனமல்ல
உன் உடலுக்கு அடிமையாவதும் அடிமைத்தனமே
இங்கு வராதவர்களிடம் சொல்லிவிடுங்கள்
நீங்கள் அடிமைகள்
எஜமானர்கள் இல்லாத அடிமைகள்

இன்று நம் தேசத்தை நாமே ஆள்கிறோம்
உண்டு உறங்கி வசதியாக வாழ்கிறோம்
எப்படி வந்ததது இந்த வாழ்வு
சிந்தித்தோமா?

நம் முன்னோரின்
கண்ணீராலும் சென்னீராலும்
துளிர்த்தது இந்த தேசம்
தனக்காக வாழ்பவன் சாதனையாளன் என்றால்
சமூகத்திற்காக வாழ்பவனை
தனக்காக வாழாமல்
தலைமுறைகாக வாழ்பவனை
என்னவென்று சொல்வது
நான் சொல்கிறேன்
அவன் தான் தியாகி


எத்தனை தியாகிகளின்
தியாகத்தால் உருவான தேசமிது
நமக்காக சிறையில் வாடியவனை,
சிந்தித்து சிந்தித்து செத்தவனை,
தூக்கு கயிற்றை முத்தமிட்டவனை,
துப்பாக்கி துளைத்த அந்த உடல்களை
ஒரு நாள், ஒரு மணி நேரம்
நினைக்க மறுப்பவன்
மனிதனா?

தியாகிகளே
நித்தம் நித்தம்
இரத்தம் சிந்தி
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என அகிம்சை யுத்தம் செய்தீர்கள்
எங்களுக்காக சிறைபட்டீர்கள்,
செக்கிழூத்தீர்கள், பட்டினியால் வாடினீர்கள்
சிந்திக்க தடை பட்டீர்கள்
எலும்புகள் உடைபட்டீர்கள்
சொத்து இழந்தீர்கள், சுகம் இழந்தீர்கள்
நாளும் நாளும் சுதந்திரத்திற்காக
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று நடை போட்டீர்கள்
கதர் உடை போட்டீர்கள்
வீழ்ந்தது உங்கள் குடும்பம்
வீழ்ந்தது உங்கள் தேகம்
எழுந்தது எங்கள் தேசம்
சுதந்திர காற்றில் பறந்தது
எங்கள் தேசிய கொடி
அன்னியன் அகண்டான்
புண்ணிய தேசம் துளிர்த்தது

அணைகள் கட்டீனிர்கள்
தொழிற்சாலைகளின் ஆற்றல் கூட்டினிர்கள்
நிலம் பெருக்கி பயிர்கள் காட்டினிர்கள்
இப்படித்தான் ஒருவன் வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டினீர்கள்

மாணவ நண்பர்களே
நம் வீடும் நம் மாளிகையும்
தியாகிகளின் சமாதிகளின் மீது தான்
என்பதை அறிவாயா?
நம் வாழ்வும் வளமும்
தியாகிகளின் தியாகத்தால் தான்
என்பதை ஏற்பாயா?

தன்னலமற்ற தியாகிகளை
நினைவு கூறுவோம்
பொருள் கூட்டும் வாழ்வை விட
வாழ்வில் பொருள் கூட்டும்
வாழ்வை வாழ்ந்து காட்டிய
சுதந்திர போராட்ட தியாகிகளின்
வழி நடப்போம்
ரெ.ஐயப்பன்








No comments:

Post a Comment