Tuesday 18 November 2014

உலக கழிவறைகள் தினம்



உலக கழிவறைகள் தினம்
நவம்பர் 19 இந்த நாள் உலக கழிவறைகள் தினம். வீடே இல்லாதவர்கள் திறந்தவெளியில் வசிக்கின்றனர், அவர்களுக்கும் அத்தியாவசியமாவது கழிவறைகள். 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ நாகரீகங்களில் இருந்த குளியலறைகள், உடைமாற்றும் அறைகள் பற்றி பெருமையாக பேசும் நாம் இப்போதும் இந்த வசதிகள் இல்லாமல் பெருவாரியான மக்கள் இருப்பது நம்மை சிந்திக்க வைக்கிறது. உலகில் 250 கோடி மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆய்வு இந்தியாவில் சுமார் 53% வீடுகள் கழிவறை வசதியின்றி இருப்பதாக கூறுகின்றது. கிராமப்பகுதிகளில் சுமார் 69% குடும்பங்களும் நகரப்பகுதிகளில் சுமார் 19% குடும்பங்களும் கழிவறை வசதியின்றி இருக்கின்றன. அதிகபட்சமாக ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் 78% குடும்பங்கள் இவ்வசதியின்றி இருக்கின்றன. முறையே மத்தியபிரதேசம் 71% சத்திஸ்கர் 75% பீகார் 77% உத்திரபிரதேசம் 64% இராஜஸ்த்தான் 65% மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் கழிவறை வசதியின்றி இருப்பதாக கூறுகின்றது. நமது தமிழகத்தில் 51.7% குடும்பங்கள் கழிவறை வசதியின்றி இருக்கின்றனர். தமிழகத்தின் 76.8% கிராமப்புற குடும்பங்கள் 24.9% நகர்புற குடும்பங்கள் கழிவறைகள் இன்றி இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 கூறியுள்ளது. பிரதமர் திரு.மோடியின் சொந்த மாநிலத்திலே 42.7% குடும்பங்கள் கழிவறைகள் இல்லமல் இருக்கின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் நாம் வெட்கபடுவதற்காக மட்டுமல்ல சிந்திப்பதற்காகவும் தான். ஒரு முதல்வரோ அல்லது பிரதமரோ வருகிறார் என்றால் உடனடியாக வேகத்தடைகளை அகற்றுவது, ஹெலிபேட் அமைப்பது என்று வீண் செலவுகளை விரைந்து செய்யும் அரசு இயந்திரம் இத்தனை ஆண்டுகளில் ஏன் கழிவறைகளை கூட 100% மக்களுக்கு கொடுக்கவில்லை? 2011 புள்ளிவிவரத்திற்கு பிறகு இந்த மூன்று ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? இது மக்களுக்கான ஆட்சி, சுட்டிக்காட்டும் தவறுகளை பணிந்து ஏற்றுக்கொண்டு சரி செய்து மக்களின் நன் மதிப்பை பெற முயல்வதே நல்ல அரசியல் கட்சியின் அல்லது அரசின் நிலைப்பாடாக இருக்க முடியும் அதை தவிர்த்து முந்தைய ஆட்சியை குறைகூறுவது என்று லாவனி அரசியல் செய்யும் கட்சிகள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள், புறக்கணிக்கப்படவேண்டும். வாழ்க ஜனநாயகம்.
ரெ.ஐயப்பன்

   

No comments:

Post a Comment