Saturday 23 August 2014

என் தேசம் என் மக்கள்


என் தேசம் என் மக்கள்
(வலிமையான ஆசிரியர்கள் தேவை)
        சுமார் 20 அடி நீளம், 20 அடி அகலம் இது தான் என் இராஜ்ஜியம். 30லிருந்து 40 பேர் தான் என் குடி மக்கள். இப்படி சொல்லும் போது கூட லேசாக வலிக்கிறது ஏனென்றால் அரசாட்சி தத்துவத்திலிருந்து நாம் பரிணாம வளர்ச்சியடைந்து வெகு நாட்கள் ஆகிறது.  எப்படியோ நான் சொல்லவந்தது என் வகுப்பறைகள் தான். இது தான் என் தேசம், மாணவச்செல்வங்கள் தான் என் மக்கள்.
நான் ஆசிரியனா? அரசனா? என் தேசத்திற்கு? பதில் அதை நான் முடிசெய்வதில்லை என் மாணவ மாணவிகள் தான்.  நான் உணருவது என்னவென்றால் நான் ஆசிரியானாக இருக்க முயற்சிசெய்தாலே என்னை அரசனாகவே ஆக்கிவிடுகிறது இந்த மாணவ சமுதாயம். ஆனால் அரசனாக/அரசியாக ஆசிரியர் நடந்து கொண்டால் அவரை மாணவர்கள் எதாகவும் மதிப்பதில்லை. ஆனால் இந்த விவாதத்தில் உள்ள தவறு எது என்றால், ஏன் வகுப்பறையில் ஒருவர் வயது, அறிவு அல்லது ஆற்றல் காரணமாக ஆதிக்கம் செல்லுத்தவேண்டும். வகுப்பறைகளில் நடக்கவேண்டியது ஆதிக்க போட்டியல்ல. ஒரு மூத்த குடிமகன் இளைய குடிமக்களுக்கு அறிவையும், ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக தான் வகுப்பறைகள் இருக்கவேண்டும் என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
பெரும்பாலான வகுப்பறைகளில் நடப்பது என்ன?
பாதிக்கும் மேற்பட்ட நேரம் தேர்வுக்கான கேள்வி பதில் தயாரிப்பது மற்றும் அதை பதிவு செய்வதிலேயே போய்விடுகிறது. மீதி நேரத்தில் குறு தேர்வுகள், விசாரணைகள், குறுக்கீடுகள் போக ஆசிரியர் – மாணவர் கலந்துரையாடல், விவாதம் கருத்து உருவாக்கம், புதிய மாற்றங்களை நோக்கிய சிந்தனைகள், கலாசாரத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், புதிய அறிவியல் தேடல்கள், பரிசோதனைகள், சுய பரிசோதனை முயற்சிகள், விழுமங்கள் மீதான பார்வை, சமூக பிரச்சனைகளில் நிலைப்படுகள் எடுத்தல், ஜனநாயக போக்கு, அடக்குமுறை, அதிகாரத்திற்கு கீழ்படியாமை, பலவீனமானவர்களிடம் பரிவு, சான்றோர்கள், பெரியவர்களை மதித்தல், நாட்டுப்பற்று மற்றும் மனிதநேய சிந்தனைகள் போன்றவற்றிற்கு வகுப்பறைகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்ற கொடும் பொய்யை சொல்லும் தைரியம் நமக்கு உள்ளதா என்ன?
நேரமில்லை என்பது எளிய பதிலாகதான் அமைந்து விடுகிறது. என் கேள்வி என்னவென்றால் மேற்கூறியவற்றில் பள்ளிகளை நடத்துவோர், அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் கொள்கை என்ன?  இவற்றையெல்லாம் போதிக்கும் தகுதி இவர்கள் எல்லோருக்கும் இருக்கிறதா? சாராயம் விற்கும் அரசு, பணம் வாங்கி வேலைதரும் உதவி பெறும் பள்ளிகள், கல்வியை வியாபாரமாக்கிவிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள், சுதந்திர சிந்தனையில்லா அடிமை தனியார் ஆசிரியர்கள், சுயநல சிந்தனை கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், மதிப்பெண்களை குறிவைக்கும் பெற்றோர் என என் தேசத்தின் மக்களான மாணவச்செல்வங்கள் மீது இந்த சமுதாயம் தாக்குதல் நடத்துகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
ஒன்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக மாணவர்களை ஆக்குவது அல்லது கீழ்படிதல் என்ற பெயரில் மாணவர்களின் சுதந்திர சிந்தனைகளை ஒடுக்கி நிர்வாகம் அல்லது ஆசிரியரின் போக்கில் வேலை வாங்குவது அதாவது தன்னை போலவே மற்றுறொறு அடிமையை உருவாக்குவது என்ற வகையில் தான் பணிகள் நடக்கின்றன வகுப்பறைகளில்.
எல்லா மாணவர்களும் ஒரே விதமாக கற்பதில்லை எனவே எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமாக தேர்வு நடத்துவதும் சரியல்ல. நாம் இன்னமும் எழுத்து தேர்வு முறையை மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறொம். சோழர்கள் எந்த எழுத்துதேர்வு வைத்து பொறியாளர்களை உருவாக்கி தஞ்சை பெரிய கோயிலை கட்டினார்கள்?
முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தோல்வி அடையும் மாணவனுக்கு எந்த முக்கியத்துவமும் தராமல் அடுத்த பருவத்திற்கு கொண்டு செல்லுதல் என்ன கல்வியியல் சிந்தனை என்று எனக்கு தெரியவில்லை.
    எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது மாணவ சமுதயத்தை வீணாக்கும் செயல் என்பதை இந்த அரசு உணராதா?
மாணவர்கள் தேர்வுகளில் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது தவறு ஆனால் ஆசிரியர் நோட்ஸ் பயன்படுத்துவார், பயன்படுத்த அறிவுறுத்துவார் அது மட்டும் சரி, என்ன நியாயம்? ஆசிரியரே வினாவாகவும், விடையாகவும் இருக்க வேண்டாமா? அதற்கு ஆசிரியர் துறை சார்ந்த புத்தகங்களை படிக்கவேண்டாமா? எத்தனை ஆசிரியர்களிடம் துறை சார்ந்த மூலப்புத்தகங்கள் இருக்கின்றன?
கட்டாயம் ஒரு வகுப்பறையில் மெல்லக்கற்போர் என சிறு எண்ணிக்கையில் இருக்கும் மாணவர்களுக்கு என்று நமது கல்வி அமைப்பு முறை என்ன செய்கிறது?  சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளை மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சிதான் நடைபெறுகிறது. 
ஒரு சிறிய ஆசிரிய குழு அல்லது ஒரு சில ஆசிரியர்கள் ஒட்டுமொத்த பள்ளியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கும் சர்வாதிகார போக்கு இல்லை என்று பொய் சொல்லும் அளவிற்கு நம் மனசாட்சி அழுகிப்போய்விட்டதா என்ன? தலைமை ஆசிரியர்கள் தலையாக அல்ல பலருக்கு வாலாக இருக்கிறார்கள் என்பது தான் உன்மை.  பதவிக்காகவும் அதிக சம்பளத்திற்காக மட்டுமே அவர்கள் அந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்திற்கே தெரிந்த விஷயம்.
எத்தனை அரசு ஆசிரியர்கள் பணி ஒய்வு பெற்ற உடனும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர், ஏன்? இளையோருக்கு வழிவிட்டால் என்ன? 35 ஆண்டுகாலம் தன் சிறந்த பணிக்காக சமுகத்திலிருந்து ஊழியம் பெற்றவர்கள் ஓய்வுக்கு பிறக்காவது இலவசமாக கிராம பள்ளிகளுக்கு ஏதாவது செய்யக்கூடாதா?

பாடத்திட்ட்த்தில் சமசீர் தன்மையை கொண்டுவந்துள்ள அரசு ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனையான ஊதியம் வழங்க தனியார் பள்ளி நிர்வாகங்ளை கட்டாயப்படுத்தவில்லை? 
திறன் மிகுந்த மாணவர்களை ஊக்குவிக்க அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? சிந்திக்க மறுக்கிறதா அரசு?
அடிமை அமைச்சர்களை வைத்துக்கொண்டு சுதந்திரமான கல்விதுறை சாத்தியமா?
ஆசிரியரை வெறும் எழுத்து தேர்வு மட்டும் வைத்து தேர்வு செய்வது சரியா? தினம்தோறும் அவர் கற்பித்தல் பணியை செய்ய போகிறார், அவருடைய கற்பித்தலை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வெறும் எழுத்துதேர்வை மட்டுமே வைத்து பணிக்கு அரசு தேர்ந்தெடுக்கிறது. ஒரு சமையல்காரரை தேர்thetheதெடுக்கும் போது அவர் சமையலை சாப்பிட்டுவிட்டு தான் அவரை தேர்தெடுக்கிறோம் ஆனால் ஆசிரிய பணிக்கு அவ்வாறு செய்வதில்லை என்பது முட்டாள்தனத்தின் உச்சாணி என்பது அரசுக்கோ? கல்வியாளர்களுகோ தெரியவில்லையா?
அனைத்தும் கற்றறிந்த சான்றோர் கூட்டம் சம்பளத்தை தவிர எதற்காகவும் குரல் உயர்த்தவோ? போராடவோ தயாரக இல்லை, அந்த சம்பளத்திற்காக கூட தனியார் பள்ளி ஆசிரியர்கள் குரல் உயர்த்த குரல்வளை அற்ற ஊமைகளாக இருக்கிறார்கள். இந்த ஊமைகள் தான் தனியார் பள்ளி மாணவர்களின் ஆசிரியர்கள். வாழ்க நம் கல்வி.

கொள்கையற்ற ஆசிரியன், கோட்பாடு அற்ற ஆசிரியன், துணிவு இல்லாத ஆசிரியன், புரட்சியை போதிக்காத ஆசிரியன், மாற்றங்களை ஏற்காத ஆசிரியன், மாற்று சமுதாயத்தை நம்மால் உருக்கமுடியும் என்ற நம்பிக்கை கூட இல்லாத ஆசிரியன் ஆசிரிய இலக்கணத்தை கேவலப்படுத்துவதோடு மோசமான சமுதாயத்தை கட்டமைக்கும் பாவத்தை செய்கிறான். இது போன்ற ஆசிரியர்களால் மாணவ சமுதாயம் எளிதாக ஆசிரியர்களை புறந்தள்ளிவிட்டு சினிமா நாயகர்களை ஆசிரிய்ர்களாக்கிகொண்டுவிட்டது.

வீரம், விவேகம், ஆற்றல், தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான பணிவு, அஞ்சாமை, தலைமைப்பண்பு கொண்ட ஆசிரியர்கள் அருகிவிட்டார்கள் என்ற உண்மை நெஞ்சை சுடுகிறது. வலிமையான ஆசிரியர்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை தமிழகமேங்கும் உள்ள பள்ளிகளில் தொங்கவிடவேண்டிய அவசியம் வந்து விட்டது என்பதை கோபத்துடன் பதிவு செய்கிறேன்.  
 



 

No comments:

Post a Comment