Saturday 17 May 2014

எப்போது பாடம் கற்போம்?





எப்போது பாடம் கற்போம்?

பதவி, பட்டம், பொருள், பெருமை என்று எதுவாயினும் அதை தன் தகுதிக்கு அதிகம் என தெரிந்தாலும் மகிழ்ச்சியாக சுமக்கும் சராசரி சுமை தாங்கி மனிதர்களுக்கு மத்தியில் அதை துச்சமென மதிக்கும் மனிதர்களை பாராட்டாமல் இருப்பது மிகப் பெரிய தவறு ஆகும். எத்தனை வயது ஆனாலும், எத்தனை மோசடி வழக்குகள் நடந்தாலும் தலைவர் பதவி, முதல்வர் பதவி என்று நாற்காலிகளை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கும் தமிழக தலைவ்ர்களை பார்த்து சலித்துப்போன நமக்கு சில அரிய வட இந்திய தலைவர்களின் தற்போதைய முடிவுகள் ஜனநாயகத்தில் நமக்குள்ள நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன.
பீகார் மாநில முதல்வர் திரு. நிதிஷ் குமார் 2014 பாரளுமன்ற தேர்தல் தோல்விகளுக்காக தனது அமைச்சரவையை கலைக்குமாறு மாநில ஆளுனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையிழந்ததாலேயே மக்கள் ஓட்டளிக்கவில்லை என முடிவு செய்து தான் இந்த முடிவை எடுத்துள்ளார். இது பாராளுமன்ற தேர்தல் என்பதினால் மக்கள் தேசிய கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்றோ, பா.ஜ.க பணம் பட்டுவாடா செய்து வெற்றி பெற்றது என்றோ நொண்டிச்சாக்கு சொல்லாமல் பதவியை உதறியிருப்பது வரவேற்கத்தக்கது. இது நாடகம் என்று எதிர்கட்சிகள் சொன்னாலும், பத்திரிக்கைகள் எழுதினாலும் இந்த முடிவின் உயர்வை குறைத்துவிட முடியாது.
இது போன்ற முடிவை ஏன் சோனியா, ராகுல் எடுக்கவில்லை? தமிழகத்தில் ஏன் திரு கருணாநிதி, ஸ்டாலின் கட்சிப்பதவியை ராஜினாமா செய்யவில்லை. டான்ஸி வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை, கேவலமான சொத்து குவிப்பு வழக்கு இழுத்தடிப்புகளுக்கு சொந்தமான செல்வி. ஜெயலலிதா ஏன் பதவி விட்டு இறங்கவில்லை? ஒரு குடிமகனாக நமக்கு எது நீதியாக சொல்லப்பட்டுள்ளது? நம் மீது குற்றம் சாட்டப்பட்டவுடன் நம் பதவி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பறிக்கப்படும் ஆனால் இது தலைவர்களுக்கு பொருந்தாது. நாமும் மௌனமாகவே இருக்கவேண்டும்.
காமராஜர் தன்னுடைய கே பிளான் மூலமாக இளையவர்களிக்கு வழிவிட முதல்வர் பதவியை ராஜினாமா செய்த காமராஜர். அரியலூர் இரயில் விபத்துக்கு பொறுப்பெற்று மத்திய இரயில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த திரு.லால் பகதூர் சாஸ்த்ரி, செயல்திட்டங்களை நிறைவேற்ற முடியாததால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந் கெஜ்ரிவால் போன்றவர்களால் தான் ஜனநாயகம் தழைக்கிறது.
ஜனநாயகம் என்பது தமிழகத்தில் உள்ளது போல் தலைவர்களை பல்லாக்கு சுமப்பதல்ல மாறாக சாதாரமானவர்களின் அதிகாரங்களையும், உரிமைகளையும் அதிகமாக்குவது தான்.
தேர்தல் ஜனநாயகத்தின் எண்ணிக்கை விளையாட்டில் மக்களின் தன்மை, குணநலனுக்கேற்ப தான் தலைவர்கள் பதவியை அலங்கரிப்பர். தமிழக தலைவர்களின் தரம் தான் தமிழக மக்களின் தரம். வென்றவர் ஊழல்வாதி என்றால் மக்களும் ஊழல்வாதிகளே, வென்றவர் சர்வாதிகாரி என்றால் மக்கள் அடிமைகளே. 
தலைவர்களை நினைத்து கவலைபடவில்லை, மக்களின் தரத்தை பார்த்து தான் கவலைகொள்ள  வேண்டியுள்ளது. மக்கள் தான் சிறிய வசதிகளுக்காக குற்றவாளிகளாகும் போது குற்றவாளிகளை மன்னிக்க மட்டுமல்ல தன்னுடைய தலைவர்களாக வைத்து அழகு பார்க்கவும் தயாரக உள்ளனர் என்பது வேதனையானது தான். எப்போது தான் ஜனநாயகத்தின் நீதிகளை வளைக்காமல் பாடம் கற்போம்? ரெ.ஐயப்பன்
    

No comments:

Post a Comment