Thursday 23 May 2013

ஆசையாய் ஒரு துரோகம்


ஆசையாய் ஒரு துரோகம்
மின்னுவதெல்லாம் பொன் அல்ல. இது மூத்தோர் வாக்கு. இன்று இந்தியா பொருளாதாரத்தில் மின்னாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இந்த பொன் தான். ஆம் நம்மை விலைவாசி உட்பட பல பொருளாதார நெருக்கடிகளில் தள்ளித் தவிக்க வைத்துக்கொண்டிருப்பது தங்கம் தான்.
உலக தங்கச் சந்தையில் 30% இந்தியாவில் தான் இருக்கிறது அதாவது உலகில் 100 கிலோ தங்கம்  விற்கிறது என்றால் அதில் 30 கிலோ இந்தியாவில் தான் விற்கப்படுகிறது.  இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  இதில் தான் பிரச்சனையே.  இந்தியாவில் தங்க உற்பத்தி மிக மிகக் குறைவு.  நாம் வெளிநாடுகளிலிருந்துதான் பெருமளவு தங்கத்தை வாங்குகிறோம்.  கடந்த ஆண்டில் சுமார் 1000 டன்கள் அளவிற்குத் தங்கத்தை நாம் இறக்குமதி செய்துள்ளோம்.  இவ்வளவு தங்கத்தை இறக்குமதி செய்யப் பெருமளவு அந்நிய செலாவணியைச் செலவு செய்துள்ளோம்.
சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 27.7% அளவிற்கு மட்டுமே இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி உள்ளது.  சீனாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் வெறும் 8.81% மட்டுமே நம்மிடம் உள்ள்து.  இந்நிலையில் இந்தியர்கள் சீனர்களை விட 37.6% அளவிற்கும் அதிகமாக தங்கத்தை வாங்குகிறார்கள்.  தங்கத்தில் முதலீடு செய்யப்படும் பணம் எந்த உற்பத்தியும் செய்வதில்லை, அதனால் வேலைவாய்ப்பு, ஏழ்மை ஒழிப்பு உட்பட எந்த நல்ல விஷயங்களும் நடப்பதில்லை.  மாறாக தங்கம் விற்கும் நாடுகளின் அந்நிய செலவாணி பெருகுகிறது.  நம்முடைய் அந்நிய செலாவணி கையிருப்பு குறைகிறது.  நாம் வெளி நாடுகளின் வளர்ச்சிக்கே உதவுகிறோம்.
இந்தியாவின் இறக்குமதி செலவினங்களில் முதலிடம் பிடிப்பது பெட்ரோலியப் பொருள்கள் ஆகும்.  இது சுமார் 30% செலவினை பிடிக்கிறது.  இதை நாம் பெரிதாகக் குறை சொல்ல முடியாது.  இந்தியாவின் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு இது தேவைபடுகிறது.  இதற்கு அடுத்தபடியாக சுமார் 10.1% செலவு பிடிப்பது தங்க இறக்குமதி ஆகும். மிக முக்கியத் தேவையான நிலக்கரி இறக்குமதிக்குக் கூட நாம் 2.9% அளவிற்குதான் செலவு செய்கிறோம்.  இந்த செலவினத்தை அதிகரித்தால் கூட மின் உற்பத்தி அதிகரிக்கும், தொழில்கள் சிறக்கும், வேலைவாய்ப்பு பெருகும், தனி நபர் வருமானம் உயரும். தங்க இறக்குமதியால் தொழில்களில் முதலீடு செய்யப்பட வேண்டிய நம்முடைய சேமிப்பு அல்லது உபரி வருமானம் பெட்டிக்குள் தங்கமாய் உறங்குகிறது.
நாம் வாங்கும் ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் இந்திய உழைப்பாளிகளால் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருந்து சம்பாதிக்கப்பட்ட அந்நிய செலாவணி வீணே செலவழிக்கப்படுகிறது.  இதனால் ரூபாயின் மதிப்பு குறைகிறது. எனவே நாம் அதிக விலை கொடுத்து பொருள்களை வாங்குகிறோம். நாமே விலைவாசி உயர்விற்குக் காரணமாகிவிடுகிறோம்.  இதில் பொறுப்புடன் செயல் பட வேண்டிய வங்கிகள் தன் பங்கிற்கு தங்கம் விற்பது கேலிக்குரியது.  நமது நிதியமைச்சர் இதை உணர்ந்துள்ள போதும் வலுவான நிலைப்பாடு எடுக்கத் தயங்குவது ஏனோ?  கட்டாயம் தங்க இறக்குமதியில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். மக்களும் தங்கத்தின் மீதுள்ள மோகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தங்கம் உபரியாக வாங்கும் அளவிற்கு வசதியுடைய மக்கள் ஏற்படுத்தும் அந்நிய செலாவணி இழப்பு விலைவாசி உயர்வாக  ஏழை, எளிய மக்கள் தலையில் விழுகிறது. அத்தோடு இந்தியப் பொருளாதாரத்தையும் வலுவிழக்கச் செய்கிறது.  இதை ஆசையாய் செய்யும் துரோகம் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?
                                                  ரெ.ஐயப்பன்

2 comments:

  1. ஆய்வு சிறப்பானது, ஆனால் ஒட்டு மொத்த அனைத்துபிரச்சனைகான தீர்வை பார்த்தால் மட்டும்தான் தனி மனித முன்னேற்றம் என்பது சாத்தியம், அதற்கு ஸ்டாலின் அவர்களின் கூற்றே இதற்கு உதாரணம் ஒரு தேசம் என்பதற்கான வரைமுறை “ஒரு தேசம் தனக்கான ஒரு பொது மொழியை பெற்று இருக்க வேண்டும், ஒரு தேசம் தனக்கான பொருளாதார சூழல் அதாவது உற்பத்தியாகும் பொருட்களுக்கு வரி வசூலிப்பது அந்த அரசுக்கு உரியது, ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது தமிழ்நாட்டை பொருத்த வரை வருடத்திற்கு 90,000 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது, மானியமாக 13,000 கோடி அதிலிருந்து கொடுக்கப்படுகிறது இந்த நிலை ஏன்? ஆகவே இது ஒரு பிழையான தேசம் அனைத்து வகையிலும், தவறு செய்வதற்கான சூழல் அதிகம். புரட்சி உருவாக வேண்டுமானல் அது ஒரு தேசத்தில் தான் உருவாக முடியும் அது மொழி சார்ந்துதான். இந்திய நாடளுமன்றம் என்பது வர்ணசாதியின் பிறப்பிடம்.

    ReplyDelete
  2. i will follow you sir

    ReplyDelete