Monday, 3 June 2013

உயருமா உயர்கல்வி


உயருமா உயர்கல்வி
ஒருபுறம் மது விலக்கின்மை மறுபுறம் மருத்துவ காப்பீட்டுத்திட்டம், ஆங்கில வழி பள்ளிகள் அதிகரிப்பு, மதுரையில் 100 கோடி ரூபாயில் தமிழ்த் தாய்க்குச் சிலை. ஒரு குற்றம், ஒரு பரிகாரம் என்று தொடரும் திட்டங்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்.  ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.  கொள்கை குழப்பங்கள் தீரவில்லை. தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீங்கள் அமைக்கும் தமிழ்த் தாய்ச் சிலைக்கு வெள்ளைக்கார பெண்கள் அணியும் கவுன் அணிவித்துவிடுங்கள்.  அது தான் உங்கள் கொள்கைக்கு சரியாக இருக்கும்.  ஆங்கில வழியில் தான் கல்லூரிகளில் தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு, பிறகு அது ரத்து என்ற செய்தி எந்த ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை மாறாக மீண்டும் ஒரு முறை தாங்கள் ஒரு குழப்பவாதிகள், கொள்கையற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளது தமிழக அரசு.  
ஆங்கில வழியில் தேர்வு வைக்க முயற்சிக்கும் அரசு, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பித்தல் எவ்வாறு உள்ளது என்பதை அறியுமா?  பல ஆயிரங்களை சம்பளமாகப் பெறும் பேராசிரியர்கள் எந்த அளவிற்கு வகுப்பு எடுக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.  பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி விகிதங்களை வெளியிடும் அரசு ஏன் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை வெளியிடுவதில்லை?  மக்களின் வரிப்பணத்திலிருந்து பல்லாயிரங்களை சம்பளமாகப் பெறும் பேராசிரியர்களின் செயல்பாடுகள் எந்த கண்காணிப்புக்கும் உள்ளாவதாகத் தெரியவில்லை.  பல கல்லூரிகளில் ஆங்கில வழி வகுப்புகள் கூட தமிழில் தான் நடைபெறுகின்றன.  மேலும் பல துறைகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள் ஒன்றாகவே நடைபெறும் அவலமும் உள்ளது.  இதைத் தமிழக அரசின் ஆதரவு நாளேடான தினமணி கூட 29/05/2013 அன்று வெளியிட்ட தலையங்கத்தில் கல்லூரிகளில் கற்பித்தல் வழிமுறைகள் பற்றி விமர்சித்துள்ளது.
கேள்வித்தாள் தயார் செய்வது, தேர்வு மேற்பார்வையிடுவது, விடைத்தாள்களை திருத்துவது, செய்முறை தேர்வு நட்த்துவது போன்ற பணிகளுக்குத் தனியாக ஊதியம் வழங்கப்படுகிறது.  இந்த சலுகைகள்  கல்லூரிகளில் மட்டுமல்ல பள்ளிகளில் பணி புரிபவர்களுக்கும் தரப்படுகிறது.  இப்பணிகள் எல்லாம் ஆசிரிய பணியின் அங்கம் அல்லவா?  மேலும் இந்த பணிகள் நடைபெறும் நாட்களுக்கான சம்பளம் முறையாக வழங்கப்படும் பொழுது இந்த பணிகளுக்காக தனியாக ஊதியம் வழங்கப்படுவது ஏன்?  ஒரு வேலைக்கு இரண்டு சம்பளமா?
எல்லா பணிகளும் 8 மணி நேரம் வேலை இருக்கும் பட்சத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெறும் 3 பாடவேளைகள் வகுப்பு எடுத்தால் போதும் என்று இருப்பதே அவர்கள் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் வெகு சொற்பமானவர்களே ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்.  பல்லாயிரம் ஊதியம் பெறும் கல்லூரி ஆசிரியர்களை கண்காணிக்குமா இந்த அரசு.  விலையில்லா திட்டங்கள் போல உழைப்பில்லா ஊதியமாக மாறிக்கொண்டிருக்கும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை பெரும்பான்மையாக இருக்கும் பொறுப்பில்லா பேராசிரியர்களிடமிருந்து மாணவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஒரு சில கடமையுணர்வுள்ள, விசுவாசமான கல்லூரி ஆசிரியர்களை நம்பித்தான் கல்லூரிகள் இயங்குகின்ற்ன என்று கல்லூரி மாணவர்கள் சொல்வதை ஏற்கத்தான் வேண்டியுள்ளது.  ரெ.ஐயப்பன்


No comments:

Post a Comment