இதோ ஓர் உண்மைத் தலைவன்
இந்த காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் நம்மால் எளிமையாக்க் காணமுடிவது ஆடம்பரமான வாழ்க்கைமுறைதான். சாதாரண மனிதன் தொட்டு தலைவர்கள் வரை அனைவரும் ஆடம்பர வாழ்கையின் தூதுவர்களாகவே இருக்கிறார்கள். தேவையான ஆசை என்ற எல்லையைத் தாண்டி தகுதிக்குட்பட்ட ஆசை, தகுதியை மீறிய ஆசை, கற்பனைக்கெட்டாத ஆசை என்று வாழ்க்கை பாரத்தை ஏற்று ஆசை என்ற பொதியை மகிழ்ச்சியாக சுமக்கும் அறியா கழுதைகளாக இருக்கும் சமுதாயத்தில் எளிமையான மனிதர்களைப் பார்ப்பதே பெரிய விஷயம். அதிலும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் எளிய மனிதர்களாக வாழும் பொழுது அவர்கள் எளிமை, நேர்மை போன்ற மிகப் பெரிய தத்துவங்களின் அடையாளமாக இருக்கிறார்கள். அவர்களின் மீது ஒளி பாய்ச்சி மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமை ஆகிறது.
சுகங்களுக்குப் பழகிப்போன நம் தலைவர்களுக்கு மத்தியில் எளிய வாழ்க்கையின் அடையாளமாய் ஒரு தலைவன் இந்த பரந்த தேசத்தின் கிழக்கு மூலையில் நம்பிக்கை நாற்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தான் திரு.மாணிக் சர்கார் அவர்கள். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் முதல்வர். 64 வயது நிரம்பிய திரு.மாணிக் சர்கார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய தலைவராகவும், அக்கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரகவும் உள்ளார். 1949 சனவரி 22 ல் பிறந்த இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் பயின்றவர். இளம் வயதில் கம்யூனிஸ்ட் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர் சாதாரண தொண்டராக இந்த இயக்கத்தில் சேர்ந்து முதல்வராக உயர்ந்துள்ளார். 1998 முதல் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்று நான்காவது முறையாக திரிபுராவின் முதல்வர் ஆகியுள்ளார். இதற்கு இவரது நேர்மை, எளிமை, பொது வாழ்வில் தூய்மை மற்றும் வள்ர்ச்சிப் பணிகளே காரணம் ஆகும்.
தன்னுடைய சம்பளத்தை அப்படியே கட்சிக்கு கொடுத்துவிட்டு மாதம் வெறும் 5000 ரூபாய் மட்டுமே கட்சியிலிருந்து பெறுகிறார். இவரது மனைவி மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். எந்த சூழலிலும் தனது கணவரின் அரசு வாகனத்தை பயன்படுத்துவதில்லை. 2008 ல் இவரது வங்கி மற்றும் கையில் வைத்திருந்த தொகை 16,800 ரூபாய்கள் மட்டுமே, அதுவும் 2013 ல் 10,800 ரூபாய்களாக குறைத்துக்கொண்டுள்ளார். அவரது மனைவியின் இரு வங்கிக்கணக்குகளில் சுமார் 24,52,395 ரூபாய்கள் உள்ளது. இது அவரது நீண்ட நாள் சேமிப்பு மற்றும் ஓய்வூதிய பலன்களாகும். தனது தாயாரின் இறப்பிற்குப் பிறகு வாங்கிய சிறு வீட்டையும் வறிய உறவினர்களுக்குக் கொடுத்து விட்டார்.
அரசியல் ரீதியாக இவரை எதிர்ப்பவர்கள் கூட இவரை நேர்மையானவர், எளிமையானவர் என்று ஒத்துக்கொள்கின்றனர். தி இந்து, டெக்கான் ஹெரால்டு, டையம்ஸ் ஆப் இந்தியா போன்ற நாளேடுகள் கூட இந்தியாவின் வறிய முதல்வர் என்று புகழாரம் சூட்டுகின்றன.
காமராஜர், கக்கன், பெரியார் என்று எளிமையின் சிகரங்கள் வாழ்ந்த நம் தமிழகத்திலோ அவர்களது இலட்சிய ஆட்சி நடத்துவதாக விளம்பரப்படுத்தும் தலைவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தமே மிஞ்சும். தமிழகமே இருளில் இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் வசிக்கும் சென்னைக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துக்கொண்டு மீதி தான் தமிழக மக்களுக்கு என்று சொல்பவர்களை என்னவென்றுசொல்ல? தாய்ப்பாலை தானே குடித்து மிஞ்சுவதை குழந்தைக்கு கொடுக்கும் தாய் போன்றவர்கள் தான் இவர்கள். அப்படி ஒரு தாய் உலகில் இல்லை, ஆனால் அப்படிப்பட்ட தலைவர்களைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். சாதாரண மக்களின் தலைவர்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை வாழ வேண்டாமா? மக்களின் பணத்தில் தரப்படும் திட்டங்களில் தன் பெயரையும் தனது உருவத்தையும் மக்களின் பணத்திலேயே பொறிக்கும் கேவலங்களுக்கு மத்தியில் மாணிக் சர்கார் போன்றவர்களைக் காணும் பொழுது இதோ ஓர் உண்மை தலைவன் என்று உரக்கச் சொல்லத்தான் தோன்றுகிறது. ரெ.ஐயப்பன்
excellent essay
ReplyDeleteby gopika