Friday, 14 June 2013

காவிரியே வா வா


காவிரியே வா வா
வானின் அமிர்தம்
வழிந்து வந்த காவிரி ஆறே
உன்னிடத்தில் வாழ்வதுவே பெரும் பேறே
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் வழி
பாய்ந்து வந்த பாலை நதியோ?
நீர் கொணரா மணற்சாலை
என்பது தான் உன் விதியோ?
உன் நன்னீர் பாயாததால்
எம் கண்ணீர் பாய்ந்தது
ஆறுகளாய் தானே ஓடச்சொன்னோம்
வெறும் மணற்கோடுகளாய் நின்றதேன்?
நீ சங்கம் தொட்டு பாய்ந்ததால்
பங்கம் ஆனாயோ?
சுங்கம் கட்ட சொல்வோமென்று
சுணங்கி நின்றாயோ?
ஆடியில் வருவாய் என்றார்கள்
தேடியே நின்றிருந்தேன்
நீ ஆடியிலும் வரவில்லை
தேடி அருள் தரவில்லை
நாங்கள் தண்ணீர் வேண்டும் என்பதை
தவறாய் புரிந்தது தமிழக அரசு - அதனால்
பல குடும்பங்கள் ஆனது தரிசு
நாங்கள் கேட்டது டாஸ்மார்க் தண்ணீர் அல்ல
பயிர்களைப் பாஸ்மார்க் வாங்க வைக்கும் தண்ணீர்
காவிரியே நீ வறண்டு போனதால் – எம்
விவசாயியின் வாழ்க்கை இருண்டு போனது
நிலத்தடி நீர் குறைந்து போனதால்
தமிழகமே அரண்டு போனது
என் வயல்களின் இரத்தமே
நீ வராமலிருப்பது குத்தமே
உன்னில் கடவுளரைக் கரைத்ததால்
கவலை கொண்டாயோ?
குப்பைகளைக் கொட்டியதால்
Good buy சொன்னாயோ?
கழிவுகளைக் கலக்கியதால்
கலங்கியே நின்றாயோ?
நீ நீர் மறுத்த சேதி கேட்டு – என்
வயல் தாயின் இதயம் வெடித்தது
பயிர் சேயோ உதிக்காமலேயே
தன் விதியை முடித்தது.
உன் மண் மேனி
பொன் மேனி என நினைத்தனரோ?
கயவர் கூட்டம், லாரிகள் போடுது ஆட்டம்
நிதம் உனை பதம் பார்க்கின்றனரே
உன் காயங்கள் பார்த்து
கோபங்கள் தான் வருகிறது
விடையில்லா வினாக்களாய்
காலங்கள் தான் கழிகிறது
உனை கரை நடுவே காணுகையில்
கொள்ளையின்பம் கொண்டோமே
எமை மறுத்து நின்றதனால்
கொள்ளை துன்பம் கொண்டோமே
உயரத்தில் பிறந்ததினால்
உயர் குடி என நினைத்தாயோ
தாழ்ந்து வர மறுப்பது தான்
உயர் குடியின் இலக்கணமோ?
அயலார் உனை பதுக்கி வைத்தாலும்
உனை பிதுக்கி மின்சாரம் எடுத்தாலும்
காவிரியே
பாய்ந்து நீ வர வேண்டும்
நல் வாழ்வு தர வேண்டும்
அகத்தியனின் குடுவையிலே
அடைபட்ட காவிரியை
காகமொன்று மீட்ட்தாக கதையுண்டு
அப்பொழுது காகங்களால் கூட
காவிரியை மீட்க முடிந்த்து – இன்று
காவிரியை மீட்க முடியவில்லை – ஏன்
ஒரு சொட்டு நீர் கேட்க முடியவில்லை.
கன்னடத்து மலையிடுக்கில்
சிறைபட்ட காவிரியே
உனை மீட்கும் காகங்கள் இங்கில்லை
உனை மீட்கும் வேகங்கள் எமக்கில்லை
தாகங்கள் தான் இருக்கிறது
காவிரியே
மேகமாய் மாறிவிடு
எம் நதியில் மழை நீராய் வந்துவிடு
எம் பயிர்களுக்கும், உயிர்களுக்கும்
வாழ்க்கை தன்னை தந்துவிடு
காவிரியே வந்துவிடு,
காவிரியே வந்துவிடு,
காவிரியே வந்துவிடு.


ரெ.ஐயப்பன்

1 comment:

  1. சார் கவிதை அமர்க்களம்.காவிரி ஆற்றை மீட்க வழி வகுப்போம்.

    வெ.அனிருத் சாரங்

    ReplyDelete