Saturday, 22 August 2015

யார் தலைவன்?




யார் தலைவன்?
இந்த மனித சமுதாயம் தலைவன், எளியவன் என்று இரு படி நிலைகளில் இருக்கவே விரும்புகிறது. யார் விரும்புகிறார்களோ இல்லையோ பதவியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். தலைவர்கள் உயர்வானவர்கள் என்ற கருத்தும், பிறர் எளியவர்கள் என்ற கருத்தும் சரி என்றே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தலைவர்களால் உலகம் இயங்குகிறதா? அல்லது எளியவர்களால் உலகம் இயங்குகிறதா? மிக எளிய பதில் எளியவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு உழைக்க வேண்டியுள்ளது. அவர்களது உழைப்பினாலேயே உலகம் இயங்குகிறது. இதில் தலைவர்களின் சிறப்பு என்ன?
பதவியில் இருப்பதனால் பலர் தலைவர்களாகி விடுகின்றனர். அத்தகு தலைவர்களை வழிகாட்டிகளாக வழிப்போக்கர்கள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம், இலட்சியவாதிகள் ஏற்பதில்லை. தலைவர்கள் வழிகாட்டிகளாக அல்ல வாழ்ந்துகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். விழ்ந்து கிடக்கும் மனித மனத்தில் எழுச்சியை எழுப்பிவிடுபவர்களாக இருக்க வேண்டும். வெற்றி பெறுபவன் தலைவனல்ல, எவரையும் தோல்வியுற விடாமல் உயர்த்தி விடுபவனே தலைவன்.
தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திற்கு உடலால் உழைப்பவர்களை விட அறிவால் உழைப்பவர்கள் எப்படி உயர்வானவர்களாக முடியும்? இருவரும் சமமானவர்கள் தானே. கூட்டத்தை வழி நடத்துபவன் தலைவன் என்றால், அவன் அந்த கூட்டத்தை மதிக்க வேண்டும். பதவியிலிருக்கும் தலைவர்கள் மக்கள் கூட்டத்தை, தனக்கு அத்தகுதியை வழங்கியவர்களை அதிகாரம் செய்வதிலே தான் மகிழ்ச்சி கொள்கிறது.   
தலைவர்களை தவிர மற்றவர்கள் எளியவர்கள் என்றால் எளியவர்களின் தலைவன், எளியவனா? உயர்ந்தவனா? மனிதர்கள் சமமானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்களை தலைவர்களாக ஏற்பது எப்படி? தன்னுடன் வேலை செய்பவர்களை தனக்கு கீழ் வேலை செய்பவர்களாக நினைப்பவர்களை எப்படி மனிதராக கருதமுடியும். நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தங்களை தலைவர்களாக கருதும் வேளையில் தன்னுடன் பணிபுரிபவர்களின் மீது செலுத்தும் அதிகாரம் தான் எளியவர்களின் ஆளுமைகளின் மீது நடத்தப்படும் அதிகார ஆணவப்போர்.
நவீன சிந்தனை ஆள்பவரையும், ஆளப்படுபவரையும் சமம் என்பதைத்தாண்டி ஆளப்படுபவருக்காகவே ஆள்பவர் என்று உரக்கச் சொல்கிறது. நமது குடும்பங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என சமுதாயத்தின் முக்கிய அமைப்புகள் இத்தகு சமத்துவத்தை வாயளவில் கூட ஏற்பதில்லை. தலைவன் என்ற தனி மனிதருக்கு எளியவர்களால் சேவகம் செய்யப்பட வைக்கப்படுவது அறத்தின் மீதான அசுர தாக்குதல் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
எளிய மக்கள் தங்கள் ஆளுமைகள் அடிமைப்படுத்தப்படுவதை பல நேரங்களில் உணருவதில்லை, அப்படி அறியும் நேரங்களில் பொருளாதார தேவைகளுக்காக தாங்கள் உணர்வு மற்றும் அற ரீதியாக சுரண்டப்படுவதை வேதனையுடன் பொறுத்துக் கொள்கிறார்கள். எழுச்சி மிக்க எளியவர்கள் தான் இன்றைய நாளின் தேவை. எழுச்சி மிக்க எளியவர்களே உண்மையான தலைவர்கள்.
தலைவர்களே நீங்கள் எளியவர்களின் பலவீனங்களில் பலனடையும் சந்தர்பவாத செயல்களில் ஈடுபடாதீர்கள். இது அறத்திற்கு புறம்பானது. தலைவர்களே நீங்கள் எளிய மனிதனின் காவலாளியாய் இருக்க வேண்டுமே தவிர ஏவலாளியாய் இருக்காதீர்கள். நாற்காலிகளில் தான் தலைவர்கள் என்று எண்ணி விடாதீர்கள், அந்த சுமைதூக்கும் நாற்காலிகளுக்காகத்தான் தலைவர்கள், அத்தகு தலைவர்களா இன்றைய தலைவர்கள்? தலைவர்களே உங்களை சுமப்பதற்காக அல்ல சமுதாயம், நீங்கள் சுமப்பதற்காகத்தான் இந்த சமுதாயம், இந்த நிறுவனம் அத்தனையும். இத்தியாகத்தை உங்களால் செய்யமுடிந்தால் நீங்கள் தலைவர்களே.  ரெ.ஐயப்பன்



No comments:

Post a Comment