ஊமையான செவிட்டு அரசாங்கம்
ஜனநாயக அரசு என்று சொல்லிக் கொள்ள தமிழக அரசுக்கு உள்ள
தகுதியை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. சாதாரன மக்கள் முதல் காந்தியவாதி சசிபெருமாள் வரை,
பத்திரிக்கைகள் முதல் இரட்டை வேடம் போடும் அரசியல் கட்சிகள் வரை மது விலக்கினை
கோரி போராட்டங்களை தொடரும் நிலையில் தமிழக அரசு மக்களின் கோரிக்கைக்கு செவி
சாய்க்காமல் இருப்பது வேதனைக்குரியது. ஒரு படி மேலே போய் வெளிநாட்டு மது வகைகளை
தமிழகத்தில் விற்க எலைட் மது அருந்தகங்களை கொண்டுவரவுள்ளதாக வெளியாகும்
பத்திரிக்கைச் செய்திகள் இந்த அரசு மக்களை எந்த அளவுக்கு கேவலமாக எண்ணியுள்ளது என்பதை
நமக்கு எடுத்துரைக்கிறது.
சசி பெருமாள் செத்தாலும் அரசு பணியாது, நந்தினி போன்ற
மாணவர்கள் போராடினாலும் அரசு செவி சாய்க்காது, தன்னார்வ அமைப்புகள், தனி நபர்
போராட்டங்கள், மக்கள் கூட்டம் என்று யாருடைய கருத்தையும் அரசு ஏற்காது, பதில் அளிக்காத
இந்த அரசை ஊமையான செவிட்டு அரசாங்கம் என்றே சொல்லவேண்டியுள்ளது. மக்களின்
பலவீனங்களின் மீது அரசு நடத்திவரும் தமிழக அரசு அதிகார போதையில் முறை தவறிய அரசு
என்றே கருத வேண்டியுள்ளது. அம்மா அரசு அதிகார போதையிலிருந்து விடுபடுமா? மக்களின்
உணர்விற்கு மதிப்பளிக்குமா? சாராயத்தை தயாரித்து விற்கும் கேவலத்தை கைவிடுமா?
அதிமுக தொண்டர்களே மது விலக்கு வேண்டாமா? உங்கள்
வீட்டுப்பிள்ளைகள் மதுவால் சீரழிந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு அம்மா புகழ்
பாடுவது தான் முக்கியமா? தமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை என்பது அதிமுகவின்
கொள்கையானால், அதிமுக தலைமையிலான அரசு ஏன் பதவி விலக கூடாது? நன்மையை முன்னெடுக்க,
முயற்சிக்க கூட ஒரு கட்சியினால் முடியாது எனில் ஏன் உங்கள் கட்சியை கலைத்துவிடக்
கூடாது. இதை விட ஒரு நன்மையை நீங்கள் தமிழகத்திற்கு செய்து விட முடியாது. சாராயம்
விற்பதை சரி என்று சொல்லுபவர்கள் தான் எங்கள் மாநிலத்தின் தலைவர்கள் என்பதை எந்த
ஒழுக்கமான தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். சமூக நல திட்டங்கள் என்ற பெயரில் இலவச
வீட்டுப்பொருள்களை அளிக்கும் தலைவர்களை எந்த சுயமரியாதை உள்ள தமிழனும் ஏற்றுக்
கொள்ளமாட்டான்.
நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் உங்கள்
அயோக்கியத்தனங்களை மக்கள் ஏற்கிறார்கள் என்று அதிமுக நினைக்கிறதா? மக்கள் தவறான
பாதையில் செல்லும் போது அவர்களை நல்வழிப்படுத்துவது தான் ஒரு நல்ல தலைமைக்கு
அடையாளம். மக்களுடைய பலவீனங்களை லாபமாக்கி அவர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்வது
தான் தேசத் துரோகம். இந்த தேசத்து மக்களின் சிந்திக்கும் ஆற்றலை மட்டுப்படுத்தி
சீரழிக்கும் அரசு, மக்கள் நல அரசு அல்ல, தூக்கியேறிய வேண்டிய அரசு. இது மட்டுமே
இப்போதுள்ள ஆளும் கட்சிக்கும், வரவிருக்கும் ஆளும் கட்சிகளுக்கும் பாடமாய்
அமையும். ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment