மக்களின் மன்னராட்சி
முடியாட்சியை நாம்
விரட்டிவிட்டோம் என்று யார் சொன்னது? இன்னமும் தனிமனிதர்களையும்,
தகுதியில்லாத நபர்களைத் தூக்கிப்பிடிப்பதும், புகழ்பாடுவதும் நம் பரம்பரை
குணங்களாக தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. ஐயா புகழ்பாடிகள், அம்மா புகழ்பாடிகள்
என்று தமிழகத்தில் இருக்க, தேசிய அளவிலும் இந்த புகழ்பாடிகள் தொடர்வதுதான் கொடுமை.
ஜனநாயகத்தில்
மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்த வேண்டிய எதிர்க்கட்சிகள் மாற்று நபர்களை முன்னிறுத்துகின்றன.
இது தான் கொள்கைப் பஞ்சம் போலும். சொல்ல வந்த செய்தி இது தான். மோடியை முன்னிறுத்தும்
பா.ஜ.க போன்ற பெரிய எதிர்க்கட்சிகள் மாற்றுக் கொள்கைகளை முன்னிறுத்தத்
தவறிவிட்டதோடு, ஜனநாயகத்தில் தவறான
முன்னுதாரணங்களை உருவாக்கிவிட்டன.
சில மாற்றுக்
கொள்கைகளை முன் வைக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களோ பலவீனமாகவும், சந்தர்ப்ப
அரசியலையும் செய்கின்றனர். மோடியை விட பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர்
என்ற தா.பாண்டியனின் கருத்து அவரின் அடிமை குணத்தையும், கூட்டணி எண்ணத்தையும்தான்
வெளிப்படுத்துகிறது. அயலுறவுக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கை, ஏற்றுமதி,
இறக்குமதிக் கொள்கைகள், சுற்றுச்சூழல் கொள்கைகள் போன்றவற்றில் பா.ஜ.க, ஆளும்
காங்கிரஸிலிருந்து எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கைகளை வைத்துக்கொள்ளவில்லை.
மக்களுடைய ஆட்சி
என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் ஆட்சி என்பதல்ல மாறாக மக்களால்
தேர்தெடுக்கப்படும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சிதான்.
ஒரு எதிர்கட்சி
ஆளும்கட்சியிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை கூட முன்னிறுத்த முடியவில்லை என்றால் இது
ஜனநாயகத்தின் பலவீனத்தைதான் காட்டுகிறது. இது ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைகிறது.
மக்களுக்கு ஒரு எதிர்கட்சியினால் கொடுக்கப்பட வேண்டிய வாய்ப்பை அக்கட்சியினால்
தரமுடியாத நிலையில் அது ஜனநாயகத்தின் அடிப்படை நம்பிக்கைகளை நசுக்குகிறது.
கட்சிகள் பல்வேறு விஷயங்களில் தங்களுடைய கொள்கை நிலைப்பாடுகளை முன்னிறுத்தும் போது
தான் மக்களால் தெளிவாகத் தேர்ந்தெடுக்கமுடியும். ஜனநாயகம் என்பது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் ஆட்சி அல்ல, மாறாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
கொள்கைளின் ஆட்சி என்பதை கட்சிகளும், மக்களும் உணரும் பொழுது தான் உண்மையான
ஜனநாயகம் மலரும்.
எங்கள் கட்சியில்
யார் நாற்காலியில் அமர்ந்தாலும் இந்த கொள்கைகளின் அடிப்படையில் தான் முடிவுகள்
எடுக்கப்படும் என்று சொல்லும் அளவிற்கு இந்த ஜனநாயக நாட்டை ஆள முயற்சிக்கும்
கட்சிகள் ஜனநாயகம் மிக்கவைகளா? ஜால்ராக்களின் சத்தத்தில் கொள்ளைகளே கொள்கைகள் என
ஆகிய பிறகு, அவற்றை மக்கள் இதெல்லாம் சகஜம் என ஏற்கும் பொழுதும், நேர்மை தனிமைப்பட்டு
சிறுபான்மையாக ஒதுங்கி நிற்பது ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல் இல்லையா?
நம்மிடம் நல்ல
மாற்றங்களை உண்டாக்கும் அளவிற்கு சக்தி இல்லாத பொழுது நல்ல மாற்றங்களை நோக்கிச்
சிந்திப்பதும், அவற்றிற்காகத் துணை நிற்பதும் நம் கடமையாகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்காவது நாம்
அறியாமையிலிருந்து விடுபட்டு இருக்கிறோமா? என்பதுதான் நம் கேள்வி.
ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment