விளம்பரமாகும் பக்தி
என்னே கடவுளுக்கு வந்த சோதனை? ஏற்கனவே கோயில்கள் எல்லாம்
பக்தியைச் சந்தைப்பொருளாக்கி விற்கும் கடைகளாகிவிட்டது. இந்தத் துரித உணவுக்காலத்தில் கடவுளையும்
துரிதமாகத் தரிசிக்கக் கோயில்களில் குறுக்கு வழி மன்னிக்கவும் சிறப்பு வழிக்கான
கட்டணங்கள், கோயில்களின் கேண்டீன்களாகிவிட்ட பிராசாத கடைகள், ஆன் லைன் தரிசன
வழிமுறைகள், மொட்டை அடித்தல், காது குத்துதல், தங்க ரதம் இழுத்தல், காவடி
எடுத்தல், திருமணம் செய்தல் என்று கோயில்கள் விற்பனை மையங்களாகிவிட்ட நிலையில்
வினாயக சதுர்த்தி கொண்டாட்டம் என்ற பெயரில் கடவுளரை தெருவில் கொண்டுவந்து
வைத்துவிட்டோம். காசு இருந்தால் மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும் அதிலும் எந்த
அளவு அதிகமாக வசதி உள்ளதோ அந்த அளவு வசதியாக தரிசிக்க முடியும் என்ற நிலை. மனிதர்களிடையே
உள்ள ஏற்றத்தாழ்வுகளை கடவுள்களிடையேயும் கொண்டுவந்துவிட்டோம். பணக்கார பக்தர்களின்
இந்த சதியையும், அதை ஏற்றுக்கொண்டுவிட்ட சமுதாயத்தையும், என்ன கொடுமை சார் இது
என்று சொல்வதைத் தவிர வேறு இல்லை.
சரி சொல்லவந்த விஷயத்திற்கு
வருவோம். வினாயக சதுர்த்தியை ஒட்டி பக்த கேடிகள் மன்னிக்கவும் பக்த கோடிகளின் ஆர்ப்பாட்ட
ஆன்மீக வெளிப்பாடுகள் அவர்களின் அறியாமை, பொறுப்பின்மையை வெளிச்சம் போட்டு
காட்டுகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எற்படுத்தும் பிளாஸ்ட்ர் ஆஃப் பாரிஸ்
கொண்டு செய்யப்பட்ட வினாயகர் சிலைகள், சாலை நடைபாதைகளை ஆக்கிரமித்து
நிறுத்தப்படுகிறது. உண்டியல் வசூல், மிகுந்த சத்தத்துடன் ஒலிக்கும் ஒலிபெருக்கி என கலைகட்டுகிறது
வினாயகர் சதுர்த்தி விழா. குழந்தைகள், வயதுமுதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டோர் என
எவரையும் பற்றி இவர்கள் யோசிப்பதில்லை. இவர்களின் பக்தி பரவசத்தில்
பாதிக்கப்படவேண்டியதுதான். அடுத்து
வினாயகர் ஊர்வலம், இது பக்தியை அல்ல படாடோபத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான்
நடைபெறுகிறது. மத நல்லிணக்கத்திற்கு
அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதை
காணமுடிகிறது. இந்த விளம்பர பக்தி தேவையா?
உள்ளம் பெருங்கோயில் என்றார் திருமூலர். பேசா துறவியாய் சேவையையே
பக்தி என வாழ்ந்து காட்டினார் ரமணர். மக்கள் சேவையையே பக்தி என்று பசிப்பிணி
போக்கினார் வள்ளலார். இந்த வழியில் வந்த நாம் பக்தியின் புனிதத்தை வீண் அமர்க்களத்தால் கெடுக்காமலிருந்தால் நம்
மதம் மனிதநேயத்தின் வெளிப்பாடாய் அமையும். அதைத்தான் இறைவனும் விரும்புவார். இதை
நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்? எல்லாம் வல்ல அந்த வினாயகர் தான் நம்மைக்
காப்பாற்ற வேண்டும்.
ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment