Sunday, 11 January 2015

விவேகானந்தன்



விவேகானந்தன்
விவேகானந்தன், இவன் அகன்ற பாரதத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பிய ஞானகுரு. இவன் வார்த்தை விதைகளால் நம்பிக்கை விருட்ஷம் பெற்றோர் ஏராளம், ஏராளம். இவன் ஞானவாள் அறியாமை இருளை கூறுபோட்டது. பகலவனின் பால் வண்ண கிரணங்களாய் இவன் பேச்சு அறிவொளியை கேட்போர் ஏற்றியது. இவன் மனிதம் பிடித்த மதவாதி. தன் ஞானத்தால் அறியாமை இரவுகளை கடந்தவன்.உலகத்தையே சகோதர சகோதரிகளே என்ற இரு வார்த்தை உறவுகளால் சுமந்தவன். கடவுளை தேடிய மனிதர்களுக்கிடையே மனிதனுக்குள்ளே கடவுளை தேடியவன். மனிதனை கடவுள் நிலைக்கு மாற்ற போராடியவன். எண்ணத்தை கொண்டு எண்ணியதை அடையமுடியும் என்று எளிமையாய் சொல்லியவன். வலிமையான எண்ணங்களால் வாழ்க்கையை வளப்படுத்தியவன். எண்ணத்தின் தூய்மையை எல்லா இடத்திலும் சொல்லி வைத்தான். கங்கைக்குள் ஒளித்துவைத்த சூரிய பொறியாய் ஈரமும், வீரமும் உன் இதயத்தில் வழிந்தது. அமைதிப்புறாக்களை அனைவர் நெஞ்சிலும் பறக்கவைத்தவன். தன் சிந்தனை சீறல்களால் பலரின் வாழ்க்கையை சிறக்க வைத்தவன்.காலம் சுமந்துவந்த கற்பக விருட்ஷம் விவேகானந்தன். கேள்விக்குறிகளை ஆச்சரிய குறிகளாக்கும் வித்தை அறிந்தவன் விவேகானந்தன்.துரும்பு மனிதர்களின் நாடி நரம்புகளில் தன் கரும்பு கருத்துக்களால் இரும்பின் உறுதியை ஏற்றியவன் விவேகானந்தன். வெள்ளை தேசங்களில் வெற்றிக்கொடியை கட்டியவன் விவேகானந்தன். மனிதகுலத்தின் எழுச்சி நாயகனாக தேசங்களை கடந்தவன் விவேகானந்தன். சடங்குகளில் மூழ்கியிருந்த மக்களின் அறியாமை எண்ண கிடங்குகளை கொளுத்தியவன் விவேகானந்தன். பஞ்சையாய், பராரியாய் இருந்த பாரத மக்களின் பக்கம் தன் பார்வையை செலுத்தியவன் விவேகானந்தன்.வேதங்களின் சாரத்தை சாதாரன மக்களின் மனவயலில் கொட்டியவன் விவேகானந்தன்.வர்ண பேதத்தை வசைமாறி திட்டியவன் விவேகானந்தன்.மனிதட்நேயத்தை அங்கிகேனாதபடி உலகெங்கும் கொட்டியவன் விவேகனந்தன். ஆற்றல் மிகுந்த அமைதி, வலிமையான அன்பு என புதிய சிந்தனைகளை பூக்க வைத்தவன் விவேகானந்தன். மதங்களை காக்க மடம் வைத்தோர் பலருண்டு, ஆனால் மனிதனை காக்க ஸ்ரீராமகிருஷ்ண மடம் வைத்தான் விவேகானந்தன். அவன் புகழ் இந்த பிறை நிலா உலா வரும் வரை இந்த மனிதர்களின் எண்ண வயல்களில் நம்பிக்கை விருட்ஷங்களை வளர்த்துக்கொண்டுதான் இருக்கும். வாழ்க விவேகானந்தரின் சிந்தனைகள், வளர்க அவர் புகழ்.

Sunday, 21 December 2014

Food carving by IX B 20/12/2014



Dr.GSK.Memorial School (CBSE)
Chozhan Maaligai
Food carving by IX B 20/12/2014























Friday, 19 December 2014

ஆட்சியாளர்கள்

ஆட்சியாளர்கள்

முடியரசு காலம் முதல்
குடியரசு காலம் வரை
ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை
ஆம்
எளியோர் நலம் காக்கவேயில்லை
உழைப்போர் இல்லம் உயரவில்லை
இங்கே
பிழைக்க வழி இல்லாதோர் உழைக்கின்றார்
உழைக்க இடம் உள்ளவரோ
ஊழலிலே திளைக்கின்றார்
ஆள்பவரே
உங்கள் அதிகாரம்
தகுதியினால் வந்ததல்ல
செல்வாக்கு மிகுதியினால் வந்தது
தரமற்றோர் தந்ததினால் வந்தது
விந்தை விந்தை
பூனைகள் ஆனையிட
யானைகள் ஆடுது
தவளைகள் ஓலமிட
மயிலகள் ஆடுது
தட்டான் பூச்சிகளின் சிறகுகளை
பட்டாம் பூச்சிகள் வாழ்த்தின
கொசுக்களின் சத்தத்தை
தேசிய கீதமென
குயில்கள் கூவின
வறுமையின் வெறுமையை
செழுமையென்றாக்கிட
எத்தனை நடிப்புகள்
உழைப்போரே
எங்கே போனது
உன் உண்மை துடிப்புகள்
நீங்கள் அயர்ந்ததினால்
உயர்ந்தவர்கள் அவர்கள்
அவர்கள் உயர்ந்ததினால்
தாழ்ந்தோர் நீங்கள்
வேடங்களே முகங்களென்று
ஆன பிறகு
முகத்திரை இல்லை
முகங்களை கிழிப்பதில் தவறில்லை
ஆட்சியாளர்கள் – இவர்கள்
பொய்யினை விதைத்து
பொய்யினை வளர்த்து
பொய்யெனும் பொய்கையில்
தினம் குளிப்பவர்கள்
அரிதாரங்கள் இல்லாமலேயே
அமர்களமாய் நடிப்பவர்கள்
அரிதாரம் பூசிவிட்டால்
ஆஸ்காருக்கே நெருக்கடிதான்
அதிகாரம் செலுத்துவோர்
அழுக்கு நகத்தையே
பிறை நிலா என்பார்கள்
ஆனைகளை கொண்டு
ஆசாரிவேலை செய்வார்கள்
பூனைகளை தளபதி ஆக்குவார்கள்
அறம் கூறுவோரை
அவசரமாய் தாக்குவார்கள்
நரிகளை மந்திரிகளாக்கி
நாட்டாமை செய்வார்கள்
தலையாட்டி பொம்மைகளிடம்
செங்கோலை வாடகைக்கு விடுவார்கள்
ஏளன அம்புகளால்
எளியேரை தாக்குவார்கள்
தலைமுறை தவறுகளை
தவறாமல் செய்வார்கள்
தவறி கொய்யா கடித்த
அணிலை தூக்கிலேற்றுவார்கள்
பெருச்சாளிகளுக்கு பெரிதாய்
விளம்பரம் கொடுப்பார்கள்
நிலவினை புகழ்ந்து, வானத்தையே
ஓர் இரவில் திருடிவிடுவார்கள்
கதிரவனை இகழ்ந்து
காரிளை வெளிச்சமென்பார்கள்
குப்பை மேடுகளில்
ஊதுபத்தி ஏற்றிவிட்டு
அத்தர் காடு என்பார்கள்
நம்பாதவர்களை
நாட்டை விட்டு ஓடு என்பார்கள்
இவர்கள் சாட்டைகளை
மரவட்டைகளின் மீதுதான் பிரயோகிப்பார்கள்
மதயானைகளை மன்னித்து விடுவார்கள்
நாய்களின் ஆட்சியில்
நன்றியவது இருக்கும்
இது
பேய்களின் ஆட்சி
பித்தலாட்டங்களே சாட்சி
உழைப்போரே மாறுமா
உம்மால் இந்த காட்சி
உழைப்போரே
உங்கள் நா
உண்மையை உரைக்கட்டும்
உங்கள் செவி
அநீதிக்கு மறுக்கட்டும்
உங்கள் கைகள்
ஒற்றுமையை பிணைக்கட்டும்
உங்கள் வீரத்தால்
உழைப்போர் நிலை உயரட்டும்
ரெ.ஐயப்பன்