ஆட்சியாளர்கள்
முடியரசு காலம் முதல்
குடியரசு காலம் வரை
ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறவில்லை
ஆம்
எளியோர் நலம் காக்கவேயில்லை
உழைப்போர் இல்லம் உயரவில்லை
இங்கே
பிழைக்க வழி இல்லாதோர்
உழைக்கின்றார்
உழைக்க இடம் உள்ளவரோ
ஊழலிலே திளைக்கின்றார்
ஆள்பவரே
உங்கள் அதிகாரம்
தகுதியினால் வந்ததல்ல
செல்வாக்கு மிகுதியினால் வந்தது
தரமற்றோர் தந்ததினால் வந்தது
விந்தை விந்தை
பூனைகள் ஆனையிட
யானைகள் ஆடுது
தவளைகள் ஓலமிட
மயிலகள் ஆடுது
தட்டான் பூச்சிகளின் சிறகுகளை
பட்டாம் பூச்சிகள் வாழ்த்தின
கொசுக்களின் சத்தத்தை
தேசிய கீதமென
குயில்கள் கூவின
வறுமையின் வெறுமையை
செழுமையென்றாக்கிட
எத்தனை நடிப்புகள்
உழைப்போரே
எங்கே போனது
உன் உண்மை துடிப்புகள்
நீங்கள் அயர்ந்ததினால்
உயர்ந்தவர்கள் அவர்கள்
அவர்கள் உயர்ந்ததினால்
தாழ்ந்தோர் நீங்கள்
வேடங்களே முகங்களென்று
ஆன பிறகு
முகத்திரை இல்லை
முகங்களை கிழிப்பதில் தவறில்லை
ஆட்சியாளர்கள் – இவர்கள்
பொய்யினை விதைத்து
பொய்யினை வளர்த்து
பொய்யெனும் பொய்கையில்
தினம் குளிப்பவர்கள்
அரிதாரங்கள் இல்லாமலேயே
அமர்களமாய் நடிப்பவர்கள்
அரிதாரம் பூசிவிட்டால்
ஆஸ்காருக்கே நெருக்கடிதான்
அதிகாரம் செலுத்துவோர்
அழுக்கு நகத்தையே
பிறை நிலா என்பார்கள்
ஆனைகளை கொண்டு
ஆசாரிவேலை செய்வார்கள்
பூனைகளை தளபதி ஆக்குவார்கள்
அறம் கூறுவோரை
அவசரமாய் தாக்குவார்கள்
நரிகளை மந்திரிகளாக்கி
நாட்டாமை செய்வார்கள்
தலையாட்டி பொம்மைகளிடம்
செங்கோலை வாடகைக்கு விடுவார்கள்
ஏளன அம்புகளால்
எளியேரை தாக்குவார்கள்
தலைமுறை தவறுகளை
தவறாமல் செய்வார்கள்
தவறி கொய்யா கடித்த
அணிலை தூக்கிலேற்றுவார்கள்
பெருச்சாளிகளுக்கு பெரிதாய்
விளம்பரம் கொடுப்பார்கள்
நிலவினை புகழ்ந்து, வானத்தையே
ஓர் இரவில் திருடிவிடுவார்கள்
கதிரவனை இகழ்ந்து
காரிளை வெளிச்சமென்பார்கள்
குப்பை மேடுகளில்
ஊதுபத்தி ஏற்றிவிட்டு
அத்தர் காடு என்பார்கள்
நம்பாதவர்களை
நாட்டை விட்டு ஓடு என்பார்கள்
இவர்கள் சாட்டைகளை
மரவட்டைகளின் மீதுதான்
பிரயோகிப்பார்கள்
மதயானைகளை மன்னித்து விடுவார்கள்
நாய்களின் ஆட்சியில்
நன்றியவது இருக்கும்
இது
பேய்களின் ஆட்சி
பித்தலாட்டங்களே சாட்சி
உழைப்போரே மாறுமா
உம்மால் இந்த காட்சி
உழைப்போரே
உங்கள் நா
உண்மையை உரைக்கட்டும்
உங்கள் செவி
அநீதிக்கு மறுக்கட்டும்
உங்கள் கைகள்
ஒற்றுமையை பிணைக்கட்டும்
உங்கள் வீரத்தால்
உழைப்போர் நிலை உயரட்டும்
ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment