தனியார் கல்வியியல் கல்லூரிகளின் கள்ளத்தனம், கண்டுகொள்ளுமா
கல்வித்துறை?
கடந்த சில
ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் மிகப் பெரிய
முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரிகள்
மாணவ, மாணவிகளுக்கு தத்தம் கல்லூரிகளில் சேர்க்கை வழங்குகின்றன. ஆனால் அதற்கு
பிறகு அந்த மாணவ – மாணவிகள் கல்லூரிக்கு வராமலிருக்கவும் சம்மதிக்கின்றன. அதாவது
ஆசிரிய பயிர்ச்சிக்கு, கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிக்கு தினமும்
வருவதில்லை, மாறாக மாதத்திற்கு ஒரு சில ஞாயிற்று கிழமைகள் மட்டும் கல்லூரிக்கு
வந்து வருகைப்பதிவை சரிசெய்து கொள்கின்றனர். இன்னமும் சொல்லப்போனால் பல தனியார்
நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் பணி புரியும் பலர், இது போன்ற தனியார் கல்வியில்
கல்லூரிகளில் சேர்க்கை பெற்று வகுப்புகளுக்கு வராமலேயே தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிடுகின்றனர்.
பலர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கூட சேர்க்கை பெற்று அடுத்து வரும்
மார்ச் – ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதி விடுகின்றனர்.
ஓராண்டு காலம்
தினமும் கல்லூரிக்கு வந்து கற்றல் அனுபவத்தை பெற்று எழுத வேண்டிய தேர்வை
கல்லூரிக்கு வராமலேயே, முறையாக பாடங்களை கற்காமலேயே பட்டம் பெறக்கூடிய வாய்ப்பை
தனியார் கல்வியியல் கல்லூரிகள் தன் இலாபத்திற்காக வழங்குகின்றனர். இது பரவலாக
சமூகத்தில் பட்டவர்த்தனமாக தெரிந்தே தான் நடக்கிறது. அரசுக்கல்லூரிகளில் முழுமையாக
ஓராண்டும், பல்கலைக்கழகங்கள் வழங்கும் தொலை தூர கல்வி நிலையங்களில் இரு ஆண்டுகள்
முறையாக கல்வியியல் பயில்பவர்கள் இதனை வேதனையுடன் பார்க்கிறார்கள்.
ஆசிரிய பயிற்சியையே
ஊழலுடன் துவங்கும் இது போன்றவர்கள் எப்படி நல்ல ஆசிரியர்களாக திகழ முடியும்?
பணத்தை பெற்றுக்கொண்டு கல்வியே தராமல் மாணவ – மாணவிகள் தேர்வு எழுத வாய்பை
ஏற்படுத்தி தரும் கல்வியியல் கல்லூரிகளின் முதலாளிகள் ஏன் இது வரை கைது
செய்யப்படவில்லை? இந்த கள்ளத்தனம் கல்வித்துறைக்கு தெரியாமல் நடக்கிறது என்பது
ஏற்க முடியாத வாதம். இது போல போலியாக செயல்படும் தனியார் கல்வியியல் கல்லூரிகளை
அடையாளம் கண்டு அங்கு இது வரை கல்வியியல் பட்டம் பெற்றவர்களின் பட்டத்தை ரத்து
செய்வதோடு அப்பள்ளியின் முதல்வர் மற்றும் முதலாளிகளை கைது செய்து கல்லூரிகளை
இழுத்து மூடும் கடமையை கல்வித்துறை செய்யுமா? இல்லையெனில் நேர்மையாக செயல்படும்
தனியார் கல்வியியல் கல்லூரிகளும் இந்த ஊழலை செய்ய தூண்டப்படுவர்.
இந்த கல்வியாண்டில்
இது போல செயல்பட்டுவரும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவ – மாணவிகளை வரும்
மாதங்களில் தேர்வு எழுத அரசு அனுமதிக்க கூடாது, மேலும் அடுத்த கல்வியாண்டில் இந்த
கல்வி நிறுவனங்கள் கல்வியியல் கல்வி வழங்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
செய்வார்களா? தமிழக கல்வித்துறை, அல்லது தனியார் கல்வியியல் கல்லூரிகளின்
கள்ளத்தனத்தை கண்டுகொள்ளாமல் இருக்க போகிறார்களா என்பது தான் நம் கேள்வி?
ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment