வறுமை ஒழிப்பிற்கு எதிரான முதலாளிகளின்
போர்
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுகளின்
நோக்கமும், பாதையும் மக்களின் நலன் என்ற ஒன்றாகத் தான் இருக்க முடியும். இங்கு மக்கள் என்ற
சொல் சமூகத்தில் அதிகம் செல்வாக்குள்ள வசதி படைத்த மக்கள் மட்டுமின்றி நடுத்தர
மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் குறிக்கிறது.
அவ்வப்போது அரசாங்கங்கள் இதை மறந்து விடுக்கின்றன.
வளரும் நாடுகளில் காணப்படும் பொருளாதார
சமச்சீரற்ற தன்மை இந்தியாவிலும் காணப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு அறிவார்ந்த
தீர்வு என்பது அரசு கருவூலத்தின் மீது மக்களுக்கு உள்ள உரிமை, அதை தொடர்ந்த
பற்றாக்குறை பொருளாதாரம் சார்ந்ததாகவே இருக்கிறது. எளிமையாக சொன்னால் அரசு என்பது
இலாபத்தில் இயங்கும் நிறுவனமாக இருக்கக்கூடாது மாறாக எதிர்பார்கின்ற வருமானத்தை
விட அதிகமாக திட்டச்செலவுகள் செய்யும் பற்றாக்குறை கொண்ட பொருளாதாரத்தை ஏற்று
மக்கள் நலனுக்காக இயங்குகின்ற சேவை அமைப்பாக இருக்க வேண்டும்.
ஒரு அரசு நலத்திட்டங்களுக்கு அதிகமாக செலவு
செய்வதையே நாம் பற்றாக்குறை பொருளாதாரம் என்கிறோம். இதை துண்டு விழும் பட்ஜெட்
என்று நாம் கேலி பேசினாலும், உண்மையாக எளிய மக்களின் உயிருக்கு உத்திரவாதம் தந்து
அவர்களின் உழைப்பை நாட்டுக்கு உறுதி செய்யும் இத்தகு நலத்திட்டங்கள் தான் ஒரு அரசை
அனைத்து மக்களின் அரசாக்குகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது மகாத்மா
ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் 2005. இது உலகின் மிகப் பெரிய பொது வேலை அளிக்கும்
அரசுத்திட்டமாகும். வறுமைக்கோட்டினை கடக்க முடியாமல் இருக்கும் அடித்தட்டு
மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதன் மூலம் பல இலட்சம் மக்களை
வறுமையின் கோரப்பிடிலிருந்து காப்பாற்றுவதோடு, அவர்கள் கெளரவமாக சமூகத்தில் வாழ
வழி செய்கிறது. இவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயராமல் இந்தியாவின் வளர்ச்சிக் குறியீடுகளை உயர்த்த முடியாது.
உலக வங்கி தன்னுடைய உலக வளர்ச்சி அறிக்கை
2014ல் இத்திட்டத்தை மிகச்சிறந்த ஊரக வளர்ச்சிக்கான உதாரண திட்டம் என கைத்தட்டி
பாராட்டியது. ஆனால் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தற்போது ஆளும்
பிஜேபி அரசால் மாற்றான் தோட்டத்து மல்லிகையாக பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை
தோல்வியுறச் செய்வதற்கான தெளிவான சமிஞ்ஞைகளை ஆளும் பிஜேபி அரசு அனுப்பிக்
கொண்டிருப்பது வறுமையில் வாழும் கோடானு கோடி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பிஜேபி ஆளும்
மாநிலங்களில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்திட்ட வெற்றி
உருவாக்கியுள்ள ஓட்டுவங்கி, இத்திட்டத்தை உருவாக்கிய காங்கிரஸ் மட்டுமில்லாமல்
பிஜேபி பலனடைந்துள்ள நிலையில் எதற்காக இத்திட்டத்தை இந்த அரசு நீர்த்துப்போக செய்ய
முயல்கிறது. கிட்டத்தட்ட வேலைவாய்பு தேவையில் 40% இத்திட்டம் பூர்த்தி செய்கிறது
என்பது நாம் அறிய வேண்டிய செய்தி ஆகும்.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு இதுவரை 9
ஆண்டுகளில் 2,68,800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 33,000
கோடிகள் ஒதுக்கப்படுகிறது. ஏழைகளை கெளரவமாக வாழ வைக்கும் இந்த செலவு தான் தற்போதைய
மத்திய அரசின் கண்ணை உறுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு ஆகும் செலவை பிற வருமானம்
தரக்கூடிய திட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டுமென்றும், இத்திட்டத்தினால்
முதாலாளிகளின் பொருளாதாரம் பாதிக்கும் என்றும் கூறி வருகிறது. ஆனால் இந்திய
ரிசர்வு வங்கியின் ஆய்வு ஆளும் முதாளித்துவ ஆதரவு அரசின் எண்ணத்தை முற்றிலும்
அர்த்தமற்றதாக்கியுள்ளது. இந்திய ரிசர்வு வங்கியின் ஆய்வுப்படி உண்மையில்
இத்திட்டம் மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. இதனால் மக்களின்
நுகர்வுச் செலவுகள் அதிகரித்துள்ளன. இது பொருளாதாரத்தின் மந்த நிலையை உடைத்து,
பொருளாதாரத்தை தூண்டிவிடும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரியாக
சொல்லப்போனால், இந்நாட்டில் ஏழை மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதால் பொருள்கள்
மற்றும் சேவைகளின் தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரிப்பானது, மூலதனம் மற்றும்
உற்பத்தியை அதிகரிக்கும் என்பது மிக அடிப்படையான பொருளாதார பாடமாகும். உற்பத்தியைப்
பெருக்க செய்யும் பொழுது வேலை வாய்ப்பு போன்றவைகளும் அதிகரிப்பது நாட்டுக்கு
சாதமான ஒன்றாகும். சரியாக சொல்லப்போனால் முதலாளிகளும் லாபம் பெறுவர் என்பது தான்
உண்மை. வலது சாரி சிந்தனை கொண்ட இவ்வரசு வர்க்க ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தவே
இத்திட்டத்தை சீர்குலைக்கிறதோ? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களுக்கு வருவதை தவிர்க்க
இயலாது.
இத்திட்டம் முட்டாள்களின் திட்டமல்ல மாறாக
இந்தியாவில் சுமார் 22% குடும்பங்களை வறுமையின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்றும்
திட்டத்தை போல இதுவரை எந்த ஒரு திட்டமும் இவ்வளவு அதிகமான மக்களுக்கு
வாழ்வளிக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியதில்லை. இத்திட்டம் இந்தியாவில்
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சதவிகித்ததை 36 லிருந்து 28 ஆக
குறைத்துள்ளது. இத்திட்டம் முடக்கப்பட்டால் இதை நம்பியுள்ள 22% குடும்பங்களின்
நிலை என்னவாகும்?
மக்கள் நலத்திட்டங்களில் விஷம் பாய்ச்சி
மெல்ல கொல்லும் போக்குடன் செயல் புரியும் இந்த முதலாளித்துவ ஆதரவு அரசு பொது
சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, இரயில் போக்குவரத்து என முக்கிய மக்கள் நல
துறைகளிலும் தனியார் முதலாளிகளை பலனடைய வைக்க முயலும் போது எளிய மனிதர்களின் சிறிய
மூளையில் எழும் இவ்வினா இதயத்தை கணக்க வைக்கிறது – இது யாருக்கான அரசு? இது
முதலாளிகளால், முதலாளிகளுக்காக, முதலாளிகளே ஏற்று நடத்தும் முதாலாளித்துவ அரசா?
அ.ஆதர்ஷ்
மிட்டல், பொருளியல் ஆசிரியர்
தமிழில்:- ரெ.ஐயப்பன், சமூக அறிவியல் ஆசிரியர்
டாக்டர்.
ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் நினைவுப் பள்ளி
சோழன்
மாளிகை
கும்பகோணம்
No comments:
Post a Comment