பொதுவுடைமையை நோக்கி நகர வேண்டிய இந்திய
சமுகம்
நல்ல வேளை டெல்லி தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தை காப்பாற்றிவிட்டது. ஆம்
ஆத்மி வெற்றி பெற்று விட்டதற்காக அல்ல. ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று
ஆட்சியாளர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, அவர்களின் செயல்பாடு சிறப்பாக
இல்லாத நிலையில் மாற்று சிந்தாந்தங்களை உடையவர்களை ஆட்சியில் அமர்த்துவது தான். ஜனநாயகம்
மாற்று சிந்தனைகளை தான் நம்பியுள்ளது. ஆனால் இந்தியாவில் ஆட்சியாளர்களை மக்கள்
நிராகரிக்கும் போது, மாற்று சிந்தனையுடையவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் முன்பு
நிராகரித்தவர்களையே மீண்டும் தேர்தெடுக்கும் நகைச்சுவை தொடர்ச்சியாக அரங்கேறி
வருகிறது. நல்ல வேளையாக தில்லி வாக்களார்கள் இரு தேசிய கட்சியையும் நிராகரித்து
மாற்று சிந்தாந்தங்களை முன் வைத்துள்ள ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்து நாடு முழுவதும்
உள்ள வாக்காளர்களுக்கு முன் மாதிரியாகிவிட்டனர். இந்திய ஜனநாயகத்தையும்
அர்த்தமுள்ளதாக்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் நிகழுமா? நிகழ வேண்டும் என்பதே நம்
ஆசை. இதற்கு ஆம் ஆத்மி இந்தியா முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல நம் நோக்கம்.
மக்கள் மாற்று சிந்தாந்தங்களை உடையவர்கள் எவ்வளவு எளியவர்களாக இருந்தாலும் ஆதரிக்க
வேண்டும் என்பது தான்.
பொதுவாகவே குற்றவாளிகளுக்கு ஆதராவாக வாக்களிக்கும் மனோபாவம் இந்திய
வாக்காளர்களுக்கு உள்ளது. அதனால் தான் பல
பெரிய தவறுகளை செய்தவர்களும் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். நியாயத்தின்
பக்கம் தான் மக்கள் நிற்க வேண்டும் என்ற அறத்தை எப்படியோ எளிமையாக
புறந்தள்ளிவிட்டனர். இத்தகு சூழலில் தான் ஆம் ஆத்மியின் வெற்றி முக்கியத்துவம்
வாய்ந்ததாகிறது.
ஊழல், மதவாதம் மற்றும் சாதி பல தேசிய மற்றும் மாநில கட்சியின்
அடையாளமாகிவிட்ட நிலையில் இவற்றிலிருந்து தண்ணிருக்குள் இருக்கும் தாமரை இலையாய்
தேசமேங்கும் அறிமுகமாகியிள்ள பொதுவுடைமை இயக்கங்கள் மேற்கு வங்கம், கேரளா மற்றும்
திரிபுரா தவிர தேசிய அளவிலோ மாநில அளவிலோ வெற்றி பெறவில்லை. பெரிய அளவில் எந்த
ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத பொதுவுடைமை இயக்கங்களை மக்கள் ஆதரிக்கதது
ஜனநாயகத்தில் ஆச்சர்யமே. விவசாயிகள், தொழிலாளர்கள் என இந்தியாவின் பெரும்பான்மை
சமூகத்திற்கான பாதுகாவலனாக போராடும் பொதுவுடைமை இயக்கங்களை மக்கள் ஏன் நம்பவில்லை?
உயர் சாதியினரின் சாதிக்கொடுமைகள், ஜமீன் தாரர்களின் சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட
இந்திய சமுகம், உயர் சாதியினர் மற்றும் பெரு முதலாளிகள் செல்வாக்கு பெற்றுள்ள
கட்சிகளை மீண்டும் மீண்டும் ஆதரிப்பது ஏன்? இது வெட்டும் கோடாலிக்கு சாணை
பிடிக்கும் செயல் அல்லவா? மீண்டும் மீண்டும் தங்களை சுரண்டுபவர்களிடமே தேர்தலில்
சரணடையும் அளவிற்கு உள்ள இந்திய வாக்காளர்கள் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது?
எளிமையும், நேர்மையும் அரசியலில் மிகவும் முக்கியமானது. இன்னமும்
பொதுவுடைமை இயக்க தலைவர்களிடம் மட்டும் தான் இதனை நாம் காண முடிகிறது. ஆம் ஆத்மி
இப்போது இதனைத்தான் முன் வைத்துள்ளது, நல்ல வேளை தில்லிவாசிகள் இதனை
ஏற்றுக்கொண்டுவிட்டனர். மற்ற மாநிலத்தினர் எப்போது இது போன்ற மாற்றத்திற்கு
ஆதரவளிக்கப் போகின்றனர்?
தமிழகத்தில் உள்ள இரு பலம் வாய்ந்த கட்சிகளுமே சுயநல, சந்தர்பவாத,
ஊழல் மிகுந்த, நேர்மையற்ற, ஆடம்பரமான, சுயமரியாதையற்ற, ஜனநாயகமில்லாத கட்சிகள்
என்பதில் தமிழக மக்கள் யாருக்கு ஐயமில்லை. ஆனாலும் தமிழக வாக்காளர்கள் இந்த
கட்சிகளுக்கு மாற்றாக உள்ள இயக்கங்களை ஆதரிக்காதது வியப்புக்குரியதே! பொதுவுடைமை
இயக்கங்கள் மாநில கட்சிகளின் மீது சவாரி செய்தது அவர்களின் மீது நம்பிக்கையின்மையை
மக்களிடையே ஏற்படுத்தியதை மறுக்கமுடியாது. இருப்பினும் இரு திராவிட கட்சிகளை
மீண்டும் மீண்டும் மன்னித்ததை போல ஒரு முறை கூட ஆதரவினை தராதது ஜனநாயக குறைவான
போக்கு தான்.
திருவரங்கம் தேர்தல் முடிவுகள் தமிழக் மக்கள் எந்த அளவிற்கு ஜனநாயக
சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர் என்பதை பறை சாற்றிவிட்டது. பொதுவுடைமை இயக்கம்
ஒரு சதவிகித வாக்குகளை கூட பெறவில்லை. பத்து சதவிகித அளவிற்கு கூட மாற்று
சிந்தாந்தங்களை மக்கள் ஆதரிக்கவில்லையென்றால் இந்த வாக்காளர்களை ஜனநாயகவாதிகள்
என்று எப்படிச் சொல்வது?
அடிமை எண்ணம் ஊறிப்போன, ஊழலுக்கு துணை போவதை கனவிலும் தவறேன்று
நினைக்காத, விளமபரங்களில் சிந்தனையை இழந்த தமிழக வாக்காளர்கள், தில்லிவாசிகள்
போன்ற வீரச்செயலினை அரங்கேற்றுவார்கள் என்பது ஐயமே. கம்யூனிஸ்ட் இயக்கங்கள்
நிரப்பவேண்டிய இடத்தை தில்லியில் ஆம் ஆத்மி நிரப்பி விட்டது. தமிழகத்தில்
பொதுவுடைமை இயக்கங்களை தவிர வேறு எந்த கட்சிக்கு அந்த தகுதி இருப்பதாக
தெரியவில்லை. தமிழக பொதுவுடைமை இயக்கங்கள் ஆம் ஆத்மி போல் எழுச்சி பெறுமா? எளிய
பொதுவுடைமை இயக்க வேட்பாளர்கள் விளம்பரத்தால் உந்தப்படும் தமிழக வாக்காளர்களை
கவர்வார்களா? எளியவர்களை அரியனையில் அமர்த்தும் அளவிற்கு தமிழக வாக்காளர்கள் அற
சிந்தனையுள்ளவர்களாக மாறுவது எப்போது?
முதலாளித்துவமும், தனியார்மயமும் மிகுந்து வரும் இக்காலத்தில் இதற்கு
எதிர் சக்தியான பொதுவுடைமை சிந்தாந்தம் பலம் பெறுவதே மக்கள் சுரண்டப்படாமல் காக்கும்.
இல்லையேனில் 15ம் முதல் 19 ஆம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பா, சீனா, இரஷ்யா முதல்
உலகெங்கும் காணப்பட்ட பிரபுக்கள், மன்னர்களின் சுரண்டல்கள் வேறு வடிவங்களில்
அரங்கேறும். வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டியது கற்றறிந்த சமுதாயத்திற்கு
அழகு. தமிழகம் மட்டுமல்லமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆம் ஆத்மியைத்தாண்டி
பொதுவுடைமை இயக்கங்களின் தேவை உருவாகிக்கொண்டு வருகிறது. பெரும்பான்மையாக உள்ள
விவசாயிகள், தொழிலார்கள் ஜனநாயக தேர்தல்கள் வழியாக தன் சிந்தனை திறன் கொண்டு
கவர்ச்சித்திட்டங்களுக்கு அடிமையாகிவிடாமல் மாற்று சிந்தாந்தங்களை ஆதரிக்கும்
பொழுது மக்கள் தங்களை பலப்படுத்திக் கொள்வதோடு தவறாக செயல்படும் கட்சிகளை ஒழுங்கு
படுத்தவும் செய்கிறார்கள். அறத்தின் வழி நிற்கும் எளிய கட்சிகளை, வேட்பாளர்களை
ஆதரிக்கும் நல் ஒழுக்கத்தை விரைவில் வாக்களர்கள் கற்க வேண்டும் என்பதே தில்லி
தந்திருக்கும் பாடம்.
ரெ.ஐயப்பன்