குடியரசு தினம்
இன்று நாம் உரிமை பெற்ற தினம்
நாம் உரிமை பெற்றவர்கள்
ஆம் உரிமையை
விற்பதற்கு
சிந்தையை விற்றோம்,
சினிமா சந்தைக்கு.
கல்வியை விற்றோம் - காசுக்கு
மொழியை விற்றோம்,
அரசியல் பிழைப்புக்கு.
கடமையை விற்றோம்,
லஞ்ச காசுக்கு.
நாம் உரிமை பெற்றவர்கள்
ஆம் உரிமையை
விற்பதற்கு
கொள்கையை விற்றோம் கொள்ளைக்கு
அன்பை விற்றோம் ஆசைக்கு
பன்பை விற்றோம் பதவிக்கு
குணத்தை விற்றோம் மது குடிப்பதற்கு
நடிகனை தொடரும் மக்கள்
சிந்தனையில்லா சிக்கல்
எளிமையானது ஏளனம்
ஆசையானது காரணம்
கனவுகள் ஆனது தோரணம்
நாம் உரிமை பெற்றவர்கள்
ஆம் உரிமையை
விற்பதற்கு
அடிமையாவதையே உரிமை என்றோம்
சிந்திப்பதே நிந்திப்பதென்றோம்
காட்டு தர்பார்
நடத்தும் கோட்டான்களை
காண குயில்கள் என்றோம்
அடிவருடிகளாய் அடிபிடித்தோம்
அடிமையாய் தான் இருப்போம் என
அடம் பிடித்தோம்
குறுக்கு வழிகளிலே
நன்றாய் தடம் பதித்தோம்
தவறினால் தான் வெல்வோம்
என தினம் நினைத்தோம்
நண்பர்களே
சடை பிடித்த முடிகளை
தடை செய்ய மாட்டோமா?
அரியணை அசுத்தத்தை
சுத்தமாக்க மாட்டோமா?
கூண் விழுந்த முதுகெலும்பை
கூர்வாளாக்கமாட்டோமா?
பகுக்கும் கேள்விகளால்
யாகம் செய்யமாட்டோமா?
தீயன மிரட்டும் போது
பேயன சிலிர்க்க மாட்டோமா?
தோல்விகள் துளைத்த போதும்
நம்பிக்கையால் துளிர்க்கமாட்டோமா?
வளைந்த பாதைகளில்
தொலைந்த வெளிச்சத்தை
நுழைந்து தேடமாட்டோமா?
உணர்வுகளால் உரிமைச்சங்கை
உயர்த்தி ஊதமாட்டோமா?
நாம் உரிமை பெற்றவர்கள்
உரிமையை
விற்பதற்கல்ல
உரிமையை கற்பதற்கு
நாம் உரிமை பெற்றவர்கள்
கனவுகள் கட்டுவதற்கு
நாம் உரிமை பெற்றவர்கள்
கடமைகள் செய்வதற்கு
நாம் உரிமை பெற்றவர்கள்
உண்மையாய் வாழ்வதற்கு
ஆம் நாம் உரிமை பெற்றவர்கள்.
ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment