மகிழ்ச்சிக்காக ஒரு
தீமை
அனைவரும் விரும்பும்
தீபாவளி இந்த வருடமும் வரப்போகிறது. புத்தாடை பளபளக்க
இனிப்புகளோடு மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை என வழக்கம் போல் தீபாவளியை நாம்
கொண்டாடபோகிறோம். கொஞ்சம் யோசிப்போமா?
எதற்காக மத்தாப்பு,
வெடி, வாண வேடிக்கை? இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, இது மிகவும் தேவையான ஒன்று
என்பதை இந்த கட்டுரையை வாசித்துவிட்டு சொல்லுங்கள் நான் உங்களை ஏற்றுக்கொள்கிறேன்.
தைவான் நாடு வெடிகள்
பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்துள்ளது. 2001ல் சுவீடன் நாடு மத்தாப்பு, வெடி,
வாண வேடிக்கைகளை தடை செய்துள்ளது. 2003ல் மலேசியா தடை செய்துள்ளது. 2005ல்
ஹாங்காங் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளை தடை செய்துள்ளது. 2007ல் நம்முடைய
உதாரண நாடான அமெரிக்க ஐக்கிய நாடுகள் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளை தடை
செய்துள்ளது. இதையே 2009ல் ஆஸ்திரேலியாவும் செய்துள்ளது. முன்னெறிய மேற்கத்திய
நாடுகளை பல வகைகளில் காப்பியடிக்கும் நாம் இதை காப்பியடிக்க தயாரா?
இந்திய உச்ச
நீதிமன்றம் அமைதியான உறக்கம் தனி நபரின் உரிமை என்று கூறியுள்ளது. மேலும் இரவு 10
மணி முதல் காலை 6 மணி வரை மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளை வெடிக்க கூடாது என்றும்
கூறியுள்ளது
மத்திய மாசு
கட்டுப்பாட்டு வாரியம் 125 டெசிபல் சத்தத்திற்கு மிகாமல் வெடிகளை உற்பத்தி
செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதை நாம் மதிக்க தயாரா?
தீங்கை குறைப்பதற்கு
பதில் தடை செய்வது அல்லது தானாக நிறுத்துவது தான் தீர்வாக இருக்க முடியும். ஏன்
மேற்கூறிய நாடுகள் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கைகளை தடை செய்துள்ளன தெரியுமா?
குடிப்பவர்களுக்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக குடிப்பதை சரி என்று சொல்ல முடியுமா? முடியாது
அது போலத்தான் வெடிப்பவர்களிடம் வெடி வாங்கும் அளவிற்கு வசதி இருக்கலாம்,
இந்தியாவில் சட்டப்படி வெடிப்பதற்கு உரிமை இருக்கலாம் ஆனால் குழந்தைகள்,
முதியோர்கள், உடல்நிலை குன்றியவர்கள் போன்றவர்களை பாதிக்க எந்த உரிமையும் இல்லை.
மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளின் உடலியல் சுழற்ச்சியை பாதிக்கிறது. அவைகளுக்கு
அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. அவற்றின் இனப்பெருக்கத்தை
பாதிக்கிறது.
மத்தாப்பு, வெடி, வாண
வேடிக்கைகளில் உள்ள வேதிப்பொருள்கள் பல வகைகளில் உடலை பாதிக்கிறது. இதில் உள்ள
காப்பர் நுரையிரலை பாதிக்கிறது. கேட்மியம் இரத்தசோகை மற்றும் சிறுநீரக பாதிப்பினை
ஏற்படுத்துகிறது. மெக்னிஷியம் புகை காய்ச்சலை ஏற்படுத்துகிறது. மாங்கனீசு மனநலனை
பாதிப்பதோடு உடல் பாகங்களை செயலிழக்க செய்கிறது. சோடியம் ஈரத்தோடு கலக்கும் போது
தோலினை பாதிக்கிறது. ஜிங் குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது. நைட்ரேட்
மூளையை பாதிப்பதோடு கோமா நிலைக்கும் கொண்டு செல்கிறது. இந்த வேதிப்பொருள்கள்
எல்லாம் மண்ணில் கலக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணிய உயிரிகள் அழிகிறது. மண்ணின்
சத்து குறைகிறது.
வசதி மிகுந்தவர்கள்
வெடிப்பதை பார்த்து வசதி குறைந்த குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
இதை பற்றியும் நமக்கு கவலையில்லையா?
பல்லயிரக்கணக்கான
குழந்தை தொழிலாளர்களின் வாழ்கையை கெடுத்து அவர்களின் உடல்நலனை காவு கொடுத்து
கனவுகளை சிதைத்து உருவாக்கப்பட்டது தான் மத்தாப்பு, வெடி, வாண வேடிக்கை. அந்த
குழந்தைகளின் முகங்கள் வேண்டுமானால் நமக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள்
வெடிக்கும் போது வருவது அந்த வெடியை உருவாக்கிய குழந்தையின் அழுகை தான். அந்த
குழந்தையின் கனவுகள் தான் நீங்கள் மத்தாப்பை கொளுத்தும் போது வண்ணங்களாக
விரிகிறது. நீங்கள் தூக்கியெறியும் குப்பைகளாக சிதறுவது அக்குழந்தையின் வாழ்க்கை
தான். இப்படி உருவான மத்தாப்பு, வெடி
மற்றும் வாண வேடிக்கை நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றால் நாம் இதயத்தை
இழந்துவிட்டோம் என்று தான் பொருள்.
இளம் தலைமுறைக்கு
அழிப்பதில் மகிழ்ச்சியை உண்டாக்கும் இப்படி ஒரு சடங்கு தேவையா? உங்கள் அறிவு
வெளிச்சம் மத்தாப்பு வெளிச்சத்தை கொஞ்சம் குறைத்தால் உண்மையில் உண்மையான
மகிழ்ச்சியை உணரலாம். ரெ.ஐயப்பன்