மழுங்கிய எழுதுகோல்கள்
(ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை)
நம் குழந்தைகள் ஊரில்
மிகப்பெரிய, சிறந்த வசதிகள் கொண்ட பள்ளியில் கல்வி கற்கிறார்கள் என்று பெற்றோர்களே
மகிழ்ந்து விடாதீர்கள், உங்கள் குழந்தைகள் அடிமைகளைத்தான் ஆசிரியர்களாகக்
கொண்டிருக்கிறார்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், என்பது முன்னோர் வாக்கு.
ஆனால் இன்றோ, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் எழுத்தறிவிப்பவன் ஆசிரியன் அல்ல.
வாழ்க்கைச் சூழலில் கட்டுண்டு, முதலாளித்துவ எஜமானர்களின் முன்னே, முழங்கால் போடும்
மிகச் சிறந்த அடிமைகளாகவே திகழ்கின்றனர்.
பள்ளிக்கட்டணம், பாடத்திட்டம்,
உள்கட்டமைப்பு வசதிகள், ஆங்கிலச் சூழல் என தனியார் பள்ளிகளின் பல கூறுகளைப் பேசும்
சமூகம் ஏன் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையைப் பற்றி இதுவரை பெரிதாகப்
பேசவில்லை.
கல்லும், மண்ணும்,
கரன்சி நோட்டுகளும் கல்விக்கூடத்தை அமைத்திடுமா? கண்டிப்பாக இல்லை. ஆசிரியர்களின்
எடுத்தியம்பும் ஆற்றல், அர்ப்பணிப்பு உணர்வு இவையே கல்விக்கூடங்களைத்
தட்டியெழுப்பும். ஒரு சில வகுப்புகளையும், மிகக் குறைந்த மாணவர்களையும் கொண்டு
துவங்கிய பள்ளிகள் இன்று மிகப்பெரிய கட்டிடங்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும்
கொண்டிருப்பது எதனால்? தனியார் பள்ளி முதலாளிகள் என்றாவது யோசித்திருப்பார்களா?
இல்லை........ இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஆசிரியர்கள் தான் என்று ஏற்றுக்
கொளவார்களா? இரண்டையுமே அவர்கள் ஏற்கவில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
கொடுத்த வாக்கைக்
காக்க, தன் மனைவியையும் மகனையும் விற்ற அரிச்சந்திரன் போல, தாய், தந்தையின் பல்லாண்டு
உழைப்பினால் வந்த பணத்தைக் கொண்டு கண்விழித்து, வறுமைமிகக் கடந்து, படித்து பெற்ற
பட்டத்தை... அடகுக் கடையில் அடமானம் வைப்பதைப் போல் தனியார் பள்ளி
நிர்வாகத்தினரிடம் அடகு வைத்துவிட்டுத்தான் பள்ளிக்குள் ஒர் அடிமையாக வலம்
வரமுடியும். அவனுக்கு ஆசிரியன் என்ற பெயர்
எப்படிப் பொருந்தும்? மேலும் பல குடும்பங்களின் சொத்து பிள்ளைகளின் கல்வி ஒன்றே.
அப்படிப்பட்ட குடும்ப சொத்தாகிய கல்விச்சான்றிதழை அடமானமாக வைக்காமல் சில ஆயிரம்
ரூபாய்களைக் கூட ஊதியமாக பெறமுடியாது. இப்படியொரு கொடுமை வேறு எதாவது ஒரு தொழிலில்
நடைபெறுகிறதா?
விரல் விட்டு
எண்ணக்கூடிய பள்ளிகளைத் தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளுமே ஆசிரியர்களின்
சான்றிதழை சிறைப்படுத்திய பின்பே பணி ஆணை வழங்குகின்றன. சிறைப்பட்ட சான்றிதழை
ஜாமீனில் கூட மீட்டெடுக்கமுடியாத அடிமைகளாய், இஸ்திரி செய்த மேல் சட்டை,
கழுத்துக்கு டை, காலுக்கு ஷு, நுனி நாக்கு ஆங்கிலம் என்று திரிந்து கொண்டு
வேலைக்காகவும், சம்பளத்திற்காகவும், குடும்ப சூழலுக்காகவும் இருக்கும் தனியார்
பள்ளி ஆசிரியர்கள் பரிதாபத்திற்குரியவர்களாகத் தெரியவில்லையா இந்த சமுகத்திற்கு?
இத்தோடு முடியவில்லை
இந்த அடிமைச் சாசனம். சில பள்ளிகளில் வைப்பு நிதியாக மூன்று மாதச்சம்பளம்,
கல்வியாண்டின் இடையில் வேலையை விட நேர்ந்தால் வைப்புநிதி மறுப்பு, அதே நேரத்தில்
நிர்வாகம் எப்பொழுது வேண்டுமானலும் பணி நீக்கம் செய்யும். சொற்ப ஊதிய உயர்வு, சில
நேரங்களில் ஊதிய உயர்வு மறுப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு தொகுப்பூதியம் என்று
சுரண்டல் பலவகைகளில் தொடர்கிறது. பொதுவாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி,
பொங்கல் போனஸ் கூட கிடையாது. விடுப்பு எடுக்காமல் சேர்த்த ஈட்டுறுதி கூட அடுத்த ஆண்டு
பணியில் தொடர்ந்தால் மட்டுமே பெற முடியும் என்று அடிமை சாசனப் பட்டியல் சீனப் பெருஞ்சுவராய் நீள்கிறது. இத்தனை
நிபந்தனைகளுடன் நியமனம் பெறும் ஆசிரியர்களின் பணிச்சூழல் எப்படி?
விட்டு வைக்குமா
முதாலாளித்துவம்? சில பள்ளிகளில ஆசிரியர்களுக்கென்று தனியறை கிடையாது. இருந்தால்
மிகக் குறைந்த வசதிகளுடன் தான். வகுப்பறைகளில் நாற்காலி கிடையாது, வெறும் மேஜை
மட்டும் தான், அப்படியே நாற்காலி இருந்தாலும் அதில் அமரக்கூடாது என வாய்மொழி
உத்தரவு வேறு. கூடுதலாக சிறப்பு
வகுப்புகளுக்கு எந்த ஊதியமும் தரப்படுவதில்லை. வேலைக்கு அமர்த்திய முதல்
வருடத்தின் மே மாதத்தில் ஆசிரியரின் பணி பறிக்கப்பட்டு ஊதியம் மறுக்கப்படுகிறது.
ஆசிரியரும் ஜுன் மாத வேலைக்காக உடன்படுகிறார். சாதாரண விடுப்பு தவிர வேறு எந்த
விடுப்புகளும் கிடையாது. ஊரில், உறவுகளில் நடக்கும் எந்த நல்லது, கெட்டது என
எதற்கும் செல்ல முடியாத சூழல், விடுப்பு என்று ஒன்று எடுத்தால் சம்பளத்தை இழக்க
வேண்டிய நிலை.
ஆசிரியர்கள் என்ன உடை
அணியவேண்டும்? எப்படி அணியவேண்டும்? அரை கையா? முழு கையா? என்ன மொழி பேசவேண்டும்? எவரிடம் பேசவேண்டும்? என்று பல
விதிமுறைகள். இது போதாதென்று ஆசிரியர்கள் மதிய வேளையில் எங்கு அமர்ந்து
சாப்பிடவேண்டும், கையினால் சாப்பிடவேண்டுமா அல்லது கரண்டியினால் சாப்பிட வேண்டுமா?
என்று அனைத்தும் பள்ளி நிர்வாகத்தால் முடிவு செய்யப்படுகிறது. எவரேனும் பள்ளியின்
குறைகளை எடுத்தியம்பினால் அவர் ஒன்று வெளியேற்றப்படுவார் அல்லது பணிச்சுமையினால்
பழிவாங்கப்படுவார். ஆமாம்சாமிகள், ஜால்ராக்கள் மற்றும் கோள் சொல்லிகள் மட்டுமே
மகிழ்ச்சியாக காலத்தை ஓட்ட முடிகிறது. சுய சிந்தனைவாதிகளின் நிலை நரகம் தான்.
இச்சூழலில் நிர்வாகத்தின் கிடுக்கிப்பிடி ஒரு புறம், தவறு செய்யும் மாணவர்களை
தண்டிக்கவோ ஏன் கண்டிக்கவோ முடியாத சூழல் மறு புறம். பெற்றோர்களின்
எதிர்பார்ப்புகள் தம் குழந்தையின் தகுதிக்கு மீறியதாய் இருப்பது, சினிமாவால் கேலியாக
சித்தரிக்கப்படும் ஆசிரிய சமுதாயத்தை நிஜமாகவும் அப்படியே செயல் படுத்த நினைக்கும்
மாணவ சமுதாயம் என தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை படு கேவலமானதாக உள்ளது. எத்தனையோ பட்டங்களை பெற்றுள்ள தனியார் பள்ளி
ஆசிரியர்களுக்கென்று எந்த சங்கமும் இல்லாதது மிகப் பெரிய கொடுமை. பாடத்திட்டத்தில் சமநிலையை கொணர்ந்த அரசு ஏன்
தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க உத்தரவு
இடவில்லை? தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஓட்டு வங்கி பற்றி யோசிக்கவில்லையோ?
பணிப்பாதுகாப்பு இன்றி, முறைப்படுத்தப்பட்ட ஊதியமின்றி, முறையான ஊதிய உயர்வு
இன்றி, கல்விச் சான்றிதழை அடகு வைத்து எத்தனையோ மாணவர்களை ஏற்றிவிடும் தனியார்
பள்ளி ஆசிரிய ஏணிகள் அடிமைச்சேற்றில் உழன்று கொண்டிருக்கின்றன என்பது
வேதனைக்குரியது. பெரும்பாலான அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், அரசியல்வாதிகளின்
வாரிசுகள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கின்றனர். இந்த கொள்கைவாதிகளுக்கு ஏன்
தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை பற்றி சிந்தனையில்லை? இவர்கள் தனியார் பள்ளி
ஆசிரியர்களை வெறும் கூலிகளாகத்தான் பார்க்கின்றனர் என்றே எண்ணத்தோன்றுகிறது.
தனியார் பள்ளிகள் ஆசிரியர்களின் பணிநியமனத்திற்கு சான்றிதழ்களை வாங்கி வைக்கக்கூடாது
என்று அரசோ, நீதிமன்றமோ அறிவித்தால், குறைந்த சம்பளத்தில் நிறைய உழைக்கும்
ஆயிரக்கணக்கான தனியார் பள்ளி ஆசிரியர்களின் மனதில் நிம்மதி என்ற சொல் பெயரளவிலாவது
எஞ்சியிருக்கும்.
அழியாச் செல்வம் அடகு போவதோ....
அன்னை மடிக்கு அயலார் வரி விதிப்பதோ....
என்று தணியும் இந்த
சுதந்திர தாகம்....
ரெ.ஐயப்பன்