பாரதியே உனை தேடி
அலைகின்றேன்
காற்று வெளியினிலே
கவிதை பாடிய தமிழ் நிலா
இந்த மண்ணில் வந்தது உலா
இல்லாத பொழுதென்று உண்டா சொல்?
பாரதி சொல்லாத சொல்லொன்று
தமிழில் உண்டா சொல்?
முக்காலம் உணர்ந்திட்ட ஞாணி அவன்
ஆணாக பிறந்திட்ட கலை வாணி அவன்
சொற்கோலம் போடும் அவன் பாட்டு
பன் மொழி சாத்திரமே
அவனுக்கு சாப்பாடு
தமிழ் அரசே! அவன் முகத்தினையே
தமிழ் நாட்டின் இலச்சினையாய், நீ போடு
வகையாக பாட்டெழுத
தொகை வாங்கும் காலமிது
முறையான பாட்டெழுதி – வெறும்
முண்டாசுடன் போனவனே
உயர் குடியில் பிறந்தாலும்
துயர் நெடிய கண்டவனே
முடி சூடும் மன்னரும்
உன் அடி வருடி நின்றனரே
இலக்கணத்தை உடைத்தவனே
புது கவிதை படைத்தவனே
உன் தலைக்கணத்தை குறைக்காமல்
தமிழில் புது இலக்கியத்தை நிறைத்தவனே
அரியணை வாசம் உதறியவன் நீ
சுதந்திர வெளியில் அலைந்தவன் நீ
படைக்கு அஞ்ஞாத பரங்கிய அரசு
உன் பாட்டு நடைக்கு அஞ்சியது
உனை சிறைபடுத்த கெஞ்சியது
அரசனென்று எவனையும் ஏற்றதில்லை
அதிகாரமுள்ள எவரையும் போற்றியதில்லை
துதி பாடியவர் மத்தியில்
மதி பாடியவன் நீ
இது விதி இது விதி என்றவரிடம்
இது சதி இது சதி என்றவன் நீ
கவி அரசே, வரி எழுதும் உனக்கு
வருமானம் இல்லாதது விந்தை தான்
சந்தைக்காக பாட்டெழுதாமல்
மக்கள் மந்தைக்காக பாட்டெழுதினாய்
அவர் தம் சிந்தையை திருத்தினாய்
உன் மெய் வருத்தினாய்
தமிழ் திமிர் இருந்ததினால்
தலை நிமிர் என்றாய்
தலை குனிவென்றால்
சமர் சமர் என நின்றாய்
காக்கை குருவி எங்கள் சாதி என்றாய்
இதுவே இங்கு சம நீதி என்றாய்
பாரதியே
அயல் மொழிகள் ஆள்கிறது,
தமிழ் மண்ணை
தமிழ் பிள்ளைகள் மறக்கிறது,
உன் தமிழ் பண்ணை
தமிழ் பாடி வந்த குயிலே
உனை தேடி அலைகின்றேன்
உனை போல் சீற்றம்
கொள்ள உரமில்லை
பன் பாட திறமில்லை
அரசாளும் மன்னவருக்கு
தமிழ் மேலே உணர்வில்லை
கற்றோரும், சான்றோரும்
தவிக்க விட்ட தமிழ் தனையே
மீட்டெடுக்க வருவாயோ?
இளைய நாவுகளில்
தமிழ் கவியை தருவாயோ?
தமிழ் பாடி வந்த நிலவே
உனை தேடி அலைகின்றேன்.
ரெ.ஐயப்பன்