நிலம் என்னும் சமூக சொத்து
நிலம் நமது கலாசாரத்தில் தாய்
மற்றும் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறது. ஆனால் இந்த நிலத்தின்
பயன்பாடு மற்றும் நிலத்தின் மீதான சமுகத்தின் உரிமை போன்றவற்றின் மீது தனி நபர்கள்
அசுர தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். நீர், காற்று போலவே நிலமும்
சமுகத்தின் சொத்து தான் ஆனால் நிலம் தற்போது ஒரு வளம் என்ற நிலையிலிருந்து தனி
நபரின் செல்வம் என்ற நிலையை அடைந்துள்ளது.
நிலம், பணத்தை முதலீடு செய்ய
நல்ல ஒரு வாய்ப்பாக காணப்படுகிறது. தன்னிடம் உபரியாக உள்ள பணத்தில் நிலத்தை வாங்கி
அதன் பயன்பாட்டினை முடக்கி வைத்திருப்பதன் மூலம் நிலத்திற்கான தேவையை
அதிகரிக்கிறது. இதனை சந்தைபடுத்தும் போது உயர்ந்து நிற்கின்ற தேவை நிலத்தை நல்ல
விலைக்கு விற்க ஏதுவாகிறது. நல்ல விலை கிடைப்பதனால் ஏற்கனவே உபரி வருமானம் உள்ளவர்
மேலும் அதிக வருமானத்தை பெறுகிறார், அவருடைய உபரி வருமானம் அதிகரிக்கிறது. எனவே
தொடர்ச்சியாக நிலத்தை அதிக விலைக்கு வாங்கி முடக்கி மேலும் அதிக விலைக்கு
விற்கிறார். இதனை சாதாரனமாக பார்க்கும் போது இதில் என்ன தவறு என்றே கேட்கத்
தோன்றும். ஆனால் இது சமூகத்தில் ஏற்படுத்தும் பொருளாதார மாற்றங்கள் ஏராளம்.
ஒருவன் தான் வசிக்க தேவையான
இடத்தை விட அதிகமாக நிலங்களை வாங்க முயற்சி செய்யும் போது நிலத்தின் சந்தை மதிப்பு
உயர்கிறது, அத்தோடு அவன் வாங்கிய நிலம் தன்னுடைய நிலப்பயன்பாட்டினை இழந்து
காலிமனையாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே அந்த நிலம் உற்பத்திக்கு துணையாக இருந்திருக்கும்.
தற்போது அந்த நிலம் காலிமனையாக பண மதிப்பு உயர்வதற்காக காத்திருக்கிறது. பின்
தொடர்ச்சியாக அந்த நிலம் விற்கப்பட்டாலும் நிலத்தின் உரிமையாளர்கள் மாறுவாரே தவிர
நிலத்தின் பயன்பாடு அதிகரிக்காது. நகரங்களை ஒட்டிய விவசாய நிலங்கள் இப்படி
காலிமனைகளாக தன் இயற்கை மதிப்பை இழந்து நிற்கின்றன. ஒரு தனி நபருக்கு சொத்தாக ஒரு
நிலம் இருப்பதனால் விவசாயம் செய்யும் விவசாயிக்கோ, அல்லது சொந்த வீட்டில்
குடியிருக்க விரும்பும் நியாயமான குடிமக்கள் எவருக்கும் இந்த நிலத்தின் சந்தை
மதிப்பு உயர்வதினால் அவர்களுக்கு நிலம் எட்டாக் கனியாகவே இருந்துவிடுகிறது.
மேய்ச்சல் நிலங்கள்,
ஆற்றுப்படுகைகள், விவசாய நிலங்கள் மற்றும் ஏர், குளங்கள் என்று பல்வகை பயன்பாடுகளை
உடைய நிலம் ஒருபுறம் மக்கள் தொகை பெருக்கத்தினால் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படுகின்றன
மறு புறம் உபரி வருமானத்தை முதலீடு செய்து அதன் மதிப்பை உயர்த்தும் செல்வமாக நிலம்
கையாளப்படுகிறது.
2011 மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி 1.73 கோடி குடும்பங்கள் வாழத்தகுதி அற்ற குடியிருப்புகளில்
வசிக்கின்றனர் என்று தெரிவிக்கிறது. இந்நிலை நிலத்தின் மீது தனிநபர்கள் தன்னுடைய
சுய நலத்திற்காக தொடுக்கும் தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனை அரசு
கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
நிலம் தனிநபர்களின் கைகளில்
தேவைக்கு அதிகமாக சிக்கும் போது அதன் பயன்பாடு மற்றும் உற்பத்தித்திறன்
முடக்கப்படுகிறது. இயற்கையாக அந்த நிலத்தின் தேவை மிகுந்தவர்களுக்கு அந்த நிலம்
அவர்களால் கையகப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறது. முதன்மையாக நிலமில்லா
விவசாயி தன் உழைப்பில் நிலத்தினை வாங்கி சொந்த நிலத்தில் விவசாயம் செய்வது என்பது
இயலாத ஒன்றாகிவிடுகிறது. அதே போல் குறைந்த வருமானம் உடைய நபர்கள் பணத்தினை
சேகரித்து நிலம் வாங்கி வீடு கட்டி சொந்த வீட்டில் வசிப்பது என்பது இப்போது குதிரை
கொம்பாகிவிட்டது. தொழில் செய்பவர்கள் தன்னுடைய தொழிலை எளிமையாக விரிவாக்க
முடியாது. இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் நிலம் தனி நபர்களின் உபரி வருமானத்தின்
பண மதிப்பை பெருக்குவதற்காக முடங்கி காலிமனையாக இருப்பது தான்.
இந்நிலையில் நிலத்தின் மீது அரசு
கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நிலம் அரசிடம் தான் விற்க
வேண்டும், அதே போல் நிலத்தை அரசிடம் தான் வாங்க வேண்டும். அரசு யாருக்கு எவ்வளவு
நிலத்தை எந்த பயன்பாட்டிற்காக விற்பது போன்றவற்றில் கொள்கைகளை வகுத்துக்கொள்ளும்
போது நிலப்பயன்பாடு முடக்கம் என்பதை தடுக்க முடியும்.
இந்த பொருப்புகளை நமது அரசு ஏற்க
வேண்டும் அத்தோடு மக்கள், நிலம் வாழ்வதற்கான வளம், அதனை ஊனப்படுத்தி செல்வத்தை
குவிப்பது அறம் சார்ந்த வாழ்விற்கு எதிரானது என்பதை மனதில் ஏற்க வேண்டும் ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment