தமிழக
அரசின் கடன் சுமையை குறைக்க, வருமானத்தை உயர்த்த சில வழிமுறைகள்
தமிழகத்தின் கடன் சுமை சுமார் மூன்று லட்சம் கோடி என்ற செய்தி
கண்டிப்பாக வருத்தப்பட செய்யும் செய்தியாகும். இந்த கடன்சுமையிலிருந்து தமிழகம்
விடுபட வேண்டும் என்று விரும்பும் உங்களை போன்றே நானும் விரும்புகிறேன். எப்படி
மக்களை அதிகம் பாதிக்காத வகையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பது என்று நான்
சிந்தித்ததை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அரசு சாதாரன மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும்
பல வகை பொருள்கள் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன,
மேலும் அவை தமிழக சந்தையில் மிகச்சிறந்த இலாபத்தை ஈட்டி வருகின்றன. அத்தோடு
இல்லாமல் சில பொருள்களின் தரம் குறித்தும் கடும் சர்ச்சைகள் எழுகின்றன.
சில பொருள்களை பற்றி இங்கு காண்போம்.
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பால் பவுடர் நெஸ்லே நிறுவனத்தால்
தயாரிக்கப்படுகிறது. 400 கிராம்கள் பால் பவுடர் சுமார் 300 ரூபாய் முதல் 515
ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது. மாதம் ஒன்றிற்கு ஒரு குழந்தை உள்ள குடும்பம்
சுமார் 1000 முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது ஒரு
அத்தியவசியமான ஒரு பொருள். கண்டிப்பாக இப்பொருளில் நெஸ்லே பன்னாட்டு நிறுவனம்
கொள்ளை இலாபத்தை சம்பாதிக்கிறது. இந்த நுகர் பொருளை அரசு தயாரித்து விற்கும் போது
பால் உற்பத்தியாளர்கள், பால் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் சந்தைபடுத்தும்
முகவர்கள் என மிக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பினை அளிக்க முடியும். மக்கள்
நியாயமான விலையில் இப்பொருளை வாங்கமுடியும்.
பற்பசை, குளியல் சோப்பு, சலவை சோப்பு, தரை மற்றும் கழிவறைகளை
சுத்தப்படுத்தும் அமிலங்கள் போன்ற அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால்
தயாரிக்கப்படும் பிராண்டுகளே தமிழக சந்தையில் முன்னிலையில் உள்ளன. இந்த பொருள்களை
அரசு உற்பத்தி செய்யும் போது கண்டிப்பாக விலை குறையும் அதே நேரத்தில்
குடும்பத்தின் செலவினங்களும் குறையும். பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
இயற்கை முறையில் வேதி உரங்களை பயன்படுத்தாமல் விளைவிக்கப்பட்ட
வேளாண் பொருள்களுக்கு தற்போது சந்தை அதிகரித்துள்ளது. தமிழக அரசு தோட்டக்கலை துறை
மூலம் நிலங்களை ஒருங்கினைத்து இயற்கை முறையில் வேதி உரங்களை பயன்படுத்தாமல்
காய்கறிகள், பழங்கள், அரிசி, சிறு தானியங்கள் போன்றவற்றை தயாரித்து
சந்தைபடுத்துதலின் மூலம் தன்னுடைய வருமானத்தை உயர்த்திக்கொள்ள முடியும். வேளாண்
பொருள்களில் மதிப்பு கூட்டி உற்பத்தி செய்யும் போது மேலும் அதிக இலாபத்தை பெற
முடியும்.
மாத்திரைகள், சிரப்கள் போன்றவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை
இலாபம் ஈட்டுகின்றன். குறைந்த பட்சம் சாதாரன தலைவலி, சளி, காய்ச்சல், வலி
நிவாரனிகள் போன்றவற்றை அரசு தயாரிக்கும் பொழுது அரசும் வருமானத்தை உயர்த்திக்கொள்ள
முடியும் மக்களுக்கும் சேமிப்பு அதிகரிக்கும்.
தமிழக அரசு நுகர் பொருள் உற்பத்தியில் கால்பதித்தால் அரசின்
வருமானம் உயருவதோடு, தரமான பொருள்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யமுடியும்.
உற்பத்தி மற்றும் சந்தைப்படுதலில் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
ஆடம்பர திருமணங்கள், மிகப் பெரிய பொது கூட்டங்கள், பொது இடங்களில்
உள்ள கட்சிகளின் கொடிகம்பங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு சிறிய
அளவிலாவது வரி விதிக்கலாம். செகுசு கார்கள் போன்றவற்றிற்கு விற்கப்படும் பெட்ரோல்,
டிசலுக்கு அதிக வரி விதிக்கலாம். இதனால் சாதாரன மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
அரசு என்பது இலட்சம் கரங்கள் இலட்சம் மூளைகளால் செயல்படும்
அமைப்பு. மேற்கண்ட வழிமுறைகளை தாண்டி அரசால் சிந்திக்க முடியும். தீவிரமாக
இதைப்பற்றி சிந்திக்கும்போது மிகச்சிறந்த உபாயங்களை கண்டறிய முடியும். தமிழகம்
முழுவதும் கல்லூரிகளில் இருக்கக்கூடிய பொருளாதாரம்
மற்றும் வணிகவியல் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களை ஆய்வுகளில் ஈடுபடுத்தும்
போது நிச்சயம் பல யோசனைகள் கிடைக்கும்.
மக்களை கேட்கும் அரசு, பல்லாயிரம் ஊதியம் பெறும்
பேராசிரியர்கள் நிலையான வேலைவாய்ப்பும்,
சமூக அந்தஸ்து மிகுந்த அரசு ஊழியர்கள் போன்றவர்களை இயக்கும் அளவிற்கு தமிழக மக்கள்
தீரம் மிக்கவர்கள் ஆகும் போது தான் மக்களாட்சி மலரும், தமிழகத்தின் பொருளாதாரம்
உயரும். ரெ.ஐயப்பன்