Friday, 22 August 2014

இந்தியாவை தாக்குமா எல்நினோ?



             இந்தியாவை தாக்குமா எல்நினோ?           
                                


இந்தியா ஒரு வெப்பமண்டல பருவக்காற்று நாடு. நம் நாட்டின் நீர் தேவையை பருவக்காற்றுகள் தான் தருகின்றன. பருவக்காற்றுகள் பாதிப்படையும் போது இந்திய விவசாயம் மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. உணவு தானிய உற்பத்திக்குறைவில் தொடங்கி, விலையேற்றம் என கடைசியில் பசி, பட்டினி வரை கொண்டுசெல்கிறது இந்த பருவக்காற்றின் பாதிப்புகள். இத்தகு பருவக்காற்றுகளை பற்றி அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
 பருவக்காற்றுகள் ஆண்டுதோறும் ஒரே சீராக வீசுவதில்லை. இவற்றை பல காரணிகள் கட்டுப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று தான் எல்நினோ. இந்த ஆண்டு எல்நினோ வலுப்பெற்று இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். என்ன இந்த எல்நினோ? இது எவ்வாறு இந்திய பருவக்காற்றுகளை பாதிக்கிறது என்று இக்கட்டுரையில் பார்போம்.
     இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள பருவக்காற்று நாடுகளை எல்நினோ பாதிக்க வாயப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இருக்க உலக வானியல் கழகத்தின் பொது செயலர் மைக்கெல் ஜெரால்ட் எச்சரித்துள்ளார். இந்த எல்நினொவால் வட மற்றும் தென் அமெரிக்காவில் கடும் மழைப்பொழிவும் தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சியும் ஏற்படலாம். இந்திய வானியல் துறையும் இந்தியாவில் பருவக்காற்றுகள் எல்நினோவால் பாதிக்கப்படும், அதனால் சராசரி மழையளவை விட குறைந்த மழையே இந்த ஆண்டு இருக்கும் என எச்சரித்துள்ளது.

பொதுவாக இந்தியாவில் 85% மழை தரும் பருவக்காற்றான தென்மேற்கு பருவக்காற்றுகள் ஜீன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை வீசுகின்றன. இதற்கு காரணம் மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் வட கோளார்த்தத்தில் உள்ள இந்திய நிலபரப்பு முழுவதையும் சூடாக்கி வளிமண்டலத்தில் உள்ள காற்றை சூடாக்கி, லேசாக்கி நகர்த்திவிடுகிறது.  உப அயன மண்டல ஜெட் காற்றொடைகளும் இமயமலைக்கு வடக்காக நகர்ந்து திபெத் பீடபூமியில் வலுப்பெறுகிறது. இதனால் இந்தியாவின் வளிமண்டலம் முழுவதும் காற்று குறைந்து குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது.  இதை நிறைவுசெய்ய தென் கோளார்த்தத்திலிருந்து காற்றுகள் தென் கிழக்காக வீசத்தொடங்கி பூமத்திய ரேகையை கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விலகு விசையால் திசை திருப்பப்பட்டு இந்தியாவின் தென் மேற்கிலிருந்து இந்திய நிலப்பரப்பை நோக்கி வீசுகிறது. இந்த ஈரம் மிகுந்த காற்று இந்திய நிலத்திற்கு மழையை தருகிறது. இது சாதாரன வழக்கமான நிகழ்வு ஆகும்.

தென்கோளார்த்தத்திற்கு  காற்றுகள் பசுபிக்கிலிருந்து வருகிறது. அவையே பருவக்காற்றாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு நுழைகிறது. பசுபிக்கிலிருந்து காற்று ஆசிய பகுதிக்கு வரவேண்டுமானால் தென் கிழக்கு பசுபிக் அதாவது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளிலிருந்து காற்று மேற்காக வீசி ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பகுதிக்குள் வரவேண்டும்.  அண்டார்டிகாவிலிருந்து பாயும் கடும் குளிர் நீரோட்டமான பெரு குளிர் நீரோட்டம் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் வெப்பநிலையை குறைத்து காற்றை சுருங்க செய்து அதிக காற்றழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் காற்று கிழக்கு பசுபிக்கிலிருந்து மேற்கு பசுபிக் நோக்கி நகர்கிறது. அதுவே ஆசியாவின் பருவக்காற்றாக அமைந்து விடுகிறது. இந்த வழக்கமான நிகழ்வு எல்நினோ ஆண்டுகளில் பாதிக்கப்படுகிறது அல்லது மாற்றியமைக்கப்படுகிறது.
     எல்நினோ ஆண்டுகளில் பெரு குளிர் நீரோட்டத்தின் வெப்பநிலை உயர்கிறது.  தென் கிழக்கு பசுபிக்கின் கடல் வெப்ப உயர்விற்கு சராசரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை, இருப்பினும் 4 முதல் 6 ஆண்டு இடைவெளிகளில் ஏற்படும் இந்த வெப்ப உயர்வு தென் கிழக்கு பசுபிக்கின் காலநிலையை மாற்றி அமைக்கிறது. வெப்ப உயர்வால் காற்று சூடாகி, லேசாகி குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  இதனால் கிழக்கு பசுபிக்கிலிருந்து மேற்கு பசுபிக் அல்லது ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பகுதிகளுக்கு வழக்கமாக செல்ல வேண்டிய காற்றுகள் பலமிழக்கின்றன. இவை ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய பருவக்காற்றுகளை பலவீனமாக்கி மழைக்குறைவு மற்றும் வறட்சியை ஏற்படுத்துகின்றன.  அதே நேரத்தில் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் கடும் மழைப் பொழிவையும் வெள்ளத்தையும் ஏற்படுத்துகின்றன.   
இந்த ஆண்டு எல்நினோ ஆண்டாக அமைந்து விட்டதால் அதை தற்போது நிலவும் மழைப்பொழிவிலிருந்து உணர முடிகிறது.  ஜீன் முதல் தேதியிலிருந்து ஜூலை 15 ஆம் தேதி வரை பெய்த தென்மேற்கு பருவ மழை வழக்கமான மழையளவிலிருந்து 24% குறைவு என்று இந்திய வானியல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில்  எல்நினோ  நிகழ்வு இருமடங்கு அதிகரித்துள்ளது. இதே அளவுகளில் புவி வெப்பமடைதல் தொடர்ந்தால் எல்நினோ நிகழ்வுகள் 2090 மிக கடுமையாக இருக்கும். 2002 எல்நினோ ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 56% மழையளவு வழக்கமான அளவிலிருந்து குறைந்தது.  2009 எல்நினோ ஆண்டில் இந்தியாவில் 23% மழையளவு குறைந்தது. அதன் விளைவாக வறட்சி, உணவு தானியங்களின் விலை உயர்ந்தது.
உலக வெப்பமாதலால் எல்நினோக்கள் உந்தப்படுகின்றன. உலக வெப்பமடைதலுக்கு பணக்கார நாடுகளும், வளரும் நாடுகளில் உள்ள சிறிய பணக்கார வர்கமும் தூபம் போடும் போது எல்நினோக்களின் அதிகரிப்பு தவிர்க்கமுடியாததாகிறது. ஆனால் எல்நினோவால் பருவக்காற்று பாதிக்கப்படும்போது வேளாண்மை பாதிப்பு, வருமானக்குறைவு மற்றும் விலைவாசி உயர்வு என்று ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பணக்கார வர்கத்தின் பாவத்திற்கு ஏழை மக்கள் தண்டனை அனுபவிப்பதா? இந்த காலநிலை அநீதிக்கு பொருப்பாளர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? வாழ்க்கையை மாற்றிக்கொள்ளப் போகிறார்களா? அல்லது நஷ்ட ஈடு கொடுக்கப்போகிறார்களா? ரெ.ஐயப்பன்
சமுக அறிவியல் ஆசிரியர்










No comments:

Post a Comment