Wednesday, 4 June 2014

வெப்பத் தீவுகள்

வெப்பத் தீவுகள்
நாம் வாழும் இந்த புவி மிகவும் அரிதானது. நம் அறிவிற்கு எட்டிய வரை இந்தப்புவியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மனித இனத்தின் அதிகரிப்பு, மிகுந்து வரும் பொருளாதார செயல்முறைகள் மற்றும் அதிகரித்து வரும் நுகர்வுக்கலாசாரம் புவியின் இயற்கையை அச்சுறுத்துகின்றன. நம் புவியின் காலநிலை, மாற்றத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையை காலநிலை தொடர்பான பல்வேறு ஆய்வுகள் நிருபித்துக் கொண்டிருக்கின்றன. இக்கட்டுரையும் அதன் ஓர் துளி தான்.
இன்று நம் வளர்ச்சியின் அடையாளமாய் உள்ள நகரகங்கள், காலநிலை மாற்றத்தின் முதல் பலியாகியுள்ளன.  இந்தியாவின் தலைநகரம் தில்லி ஒரு வெப்பத்தீவாக மாறிக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை இந்தியன் இன்ஸிடியுட் ஆப் டிராபிகல் மீட்ராலஜி  என்ற வளி ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இந்த ஆய்வில் தில்லியின் 11 வானிலை ஆய்வு மையங்களில் 7 ஆய்வு மையங்கள் தில்லியின் வெப்பநிலை உயர்வை பதிவுசெய்துள்ளன. 2010 – 2011 ல் உள்ள வானிலை பதிவுகளின்படி வட தில்லியில் உள்ள தில்லி பல்கலைகழகத்தில் உள்ள வானிலை மையம் பிற பகுதிகளை விட சுமார் 3.5 செல்சியஸ் அதிக வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. மத்திய தில்லி 30 செல்சியஸ் மற்றும் தென் தில்லி பகுதி சுற்றியுள்ள மற்ற பகுதிகளை விட சுமார் 10 செல்சியஸ் அளவிற்கு வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று ஆய்வாளர் திலிப் சேட் கூறுகிறார்.

இந்திய வளி அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மையத்தின் பேராசிரியர் மஞ்சு மோகன் தில்லியில் உள்ள கன்னாட் பகுதி, சீத்தாராம் பஜார் பகுதிகளில் வெப்பநிலை பெருமளவு மாறியுள்ளதாக கூறுகிறார். இதற்கு தில்லியின் உயர்ந்து வரும் மக்கள் தொகை, வாகனங்கள் மற்றும் மாசுகள் தான் முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார். 1991ல் 9.42 மில்லியனாக இருந்த தில்லியின் மக்கள் தொகை 2011ல் 16.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. தில்லியின் நிலப்பயன்பாடு பெருமளவு மாறியுள்ளது. தார்சாலைகள், கான்கீரிட் கட்டிடங்கள் ஆகியவற்றால் தில்லியின் பகல் வெப்பநிலை உயர்கிறது. ஏனென்றால் தார் மற்றும் கான்கீரிட் அதிக வெப்பத்தை ஈர்த்து வெப்பநிலையை உயர்த்துகிறது. இரவு நேரத்தில் நீண்ட அலைநீளம் கொண்ட கதிர்களாக வெளியிடுவதை இந்த கான்கீரிட் கட்டிடங்கள் தடை செய்கின்றன. இதனால் இரவில் வெப்பம் வெளியேறாமல் நகரத்தின் வெப்பநிலையை உயர்த்துகிறது.  மேலும் தரைப்பகுதி வெப்பம் மிகுந்து  இருக்கும் போது வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் உள்ள ஓசோன் கீழ் நோக்கி இறங்குகிறது. ஓசோன் வெப்பத்தை பிடித்து வைக்கும் தன்மையுள்ளது. கீழ் அடுக்கில் ஓசோன் அதிகரிக்கும் போது தரைப்பகுதியின் வெப்பநிலை மிகுதலை தடுக்க இயலாமல் போகிறது. 
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் மாசுக்களும் வெப்பத்தை உட்கிரக்கின்றன. இதன் காரணமாகவும் நகரமானது பிற இடங்களை விட வெப்பம் மிகுந்து காணப்படுகிறது. தில்லியின் காற்றில் 2.5 பி.எம் என்ற அளவில் காற்றில் மிதக்கும் தூசுக்கள் உள்ளன. இவை தில்லியின் வெப்பநிலையை உயர்த்துவதோடு நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்களை உண்டாக்க வல்லது என்கிறார் பெய்க் என்னும் அறிஞர்.
நகரங்கள் வெப்பத்தீவாக மாறும் பொழுது வெப்பம் மிகுந்த காற்று பச்சிளம் குழந்தைகள், கர்பிணிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் உடல் நலத்தை குன்றச்செய்து மரணத்தையும் விளைவிக்கிறது. வறண்ட வெப்பம் மிகுந்த காற்று புழுதிப் புயல்களை ஏற்படுத்தி உயிர்களை பலி வாங்குகிறது. மாறும் புதிய காலநிலை சூழல் புதிய வகை கிருமிகள் உண்டாக சாதகமான சூழலை உருவாக்குகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு, சூழல் மற்றும் உடல் நலம் பலியாகாதவாறு பார்த்துக்கொள்வதே சிறந்த வளர்ச்சியாக இருக்க முடியும். சில கற்பனை சுகங்களுக்காக வாழ வைக்கும் நிஜங்களை கொல்லுவதாக பொருளாதார வளர்ச்சி இருந்துவிடக்கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை. எப்படியோ புவியின் காலநிலை வகைப்பாட்டில் நாம் உருவாக்கிய வெப்பத்தீவுகளும் இடம் பெற்றுவிட்டன. இவை நகரங்களை தாண்டி பரவும் போது மொத்த புவியும் வெப்பத்தால் மூழ்கிப்போகும். நம் மனித இனம் தன் சுகங்களுக்கும், வளர்ச்சிக்கும் கொடுத்த விலையாய் நம் உடல்கள் எச்சங்களாய் படிமங்களாகும் என்ற உண்மையை உணரும் நேரமிது. ரெ.ஐயப்பன்


 






  

No comments:

Post a Comment