எங்கே எங்கள் குழந்தைகள்
குழந்தைகள் வாழும்
தெய்வங்கள். மழலை, அன்பின் உலக மொழி. தூய்மையும், உண்மையும், கள்ளம் கபடமில்லாத
உள்ளமும் தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன. வறுமையின் கோரப்பிடியில்
உயிருக்காக போராடும் குழந்தைகள் ஒரு புறம். செல்வ மிகுதியில் கொழுத்து திளைக்கும்
குழந்தைகள் மறு புறம். இடையில் சாதாரன நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்கத்தில்
இருக்கும் குழந்தைகள் என பல நிலைகளில் குழந்தைகள் இருக்கின்றன.
இன்றைய குழந்தைகளின்
உலகம் எப்படி இருக்கிறது? அவர்களின் உலகம்
பெற்றோர்களின் நம்பிக்கை சிந்தாந்தங்களில் சிறைப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு
நல்லது கெட்டது தெரியாது என்பர் ஆனால் தற்போது பெரியவர்களுக்குத் தான் தெரியவில்லை
என்றே தோன்றுகிறது. மனிதர்களிடமிருந்து
விலகி உயிரற்ற பொருட்களின் மீது குழந்தைகளுக்கு பற்று அதிகமாவதை காண முடிகிறது.
அவர்களை சுற்றி அவை தான் அதிகமாக இருக்கிறது. மனிதர்களின் பஞ்சத்தால் கார்ட்டூன்
கதாபாத்திரங்களோடு வாழ்கிறார்கள். சற்று பெரிய குழந்தைகள் சினிமா ஊடகத்தால்
உந்தப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம்
குழந்தைகளின் கைகளில் தின்பண்டங்களை கொடுத்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு
கடைசியாக உண்ணச்சொல்வர், குழந்தையோ பகிர்ந்து கொடுக்க தெரியாமல் அனைத்தையும்
கொடுத்துவிட்டு அப்பாவியாய் நிற்கும் அப்போது தாயோ, பாட்டியோ அல்லது தாத்தாவோ தன்
பங்கை கொடுத்து சாப்பிடச் சொல்வர். இப்போது இப்படி ஒரு நிகழ்வு அரிது. குழந்தையின்
கையில் எதையும் கொடுத்து வாங்கமுடியாது என்ற நிலை தான் உள்ளது.
குழந்தை தவறு
செய்யும் பொழுது மாமா, சித்தப்பா என் யார் வேண்டுமானலும் அடித்து திருத்த
முடிந்தது. இப்போது யாருமே அடிக்க முடியாது என்ற நிலை தான். அந்த அளவுக்கு
குடும்பங்களில் நெருக்கம் குறைந்துவிட்டது.
தனிக் குடும்பங்களில் சபிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான். தனிமையில்
வாடும் குழந்தைகளை சமாதானப்படுத்த கேட்டவற்றையேல்லாம் வாங்கி கொடுத்து
விடுகின்றனர் பெற்றோர்கள். இதன் விளைவு
குழந்தையிடம் பிடிவாதகுணம். இன்றைய
குழந்தைகள் பிடிவாதம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.
கதை சொல்லிகளான தாத்தா பாட்டியை இழந்த குழந்தைகள் இரக்கம்,
அன்பு, பிறருக்கு உதவுதல், மரியாதை கொடுத்தல் போன்ற பல குணங்களை கற்க வழியில்லாமல்
போகிறது.
பல் முளைக்கும்
முன்பே பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காத்திருக்கிறது அடுத்த அதிர்ச்சி. அது வரை ஒலித்த தாய் மொழிக்கு தடை. கருவில்
உணர்ந்த மொழியை உருவில் உணரும் முன் வணிக மொழிக்கு தயார் படுத்தப்படும் கொடுமை. மூன்று
வயதிலேயே சந்தைக்கு தயாராக வேண்டிய நிலை.
புத்தக
மூட்டைகளுக்குள் முடக்கும் முயற்சி, அதையே கல்வி என்று பறைசாற்றும் நிறுவனங்கள்,
சுதந்திர சிந்தனையில்லாத ஆசிரியர்களின் உபதேசங்கள், பத்தரமா வைச்சுக்கோ யாருக்கும்
கொடுக்காதே என்னும் அரிய பொன் மொழி, எப்படியாவது முதல் ஆளாகவே இருக்க வேண்டும்
என்ற சிந்தனை, பாதைகளை மறந்து விட்டு இலக்குகளை நோக்கிய பயணம் என்று எங்கோ
போய்க்கொண்டிருக்கிறது நம் குழந்தைகளின் உலகம்.
தோல்விகளே காணவிடாது
எந்த விலை கொடுத்தாவது வெற்றியை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் தான் தன்னுடைய
குழந்தையை பலவீனமாக்குகிறோம் என்பதை அறிவதில்லை.
தன்னுடைய குழந்தை என்பதாலேயே அதன் தகுதியை மீறி உயர்த்துவதால் விளையும்
இன்னல்களை பற்றி யாரும் யோசிப்பதாய் தெரியவில்லை.
பள்ளியில் அடிபடாத
குழந்தை எதையும் அப்பருவத்தில் சாதிப்பதில்லை மாறாக ஒரு தவறு செய்யும் போது
ஆசிரியரால் தரப்படும் சிறிய தண்டனை மாணவர்களை பக்குவப்படுத்துகிறது. தோல்வி, அவமானங்களை பொறுத்துக் கொண்டு
முன்னேறும் பண்பினை கற்றுத்தருகிறது.
வெள்ளித்திரையின் மாயவலை
நம் குழந்தைகளை கடத்திக்கொண்டு போய்விட்டது. இப்போது அவர்களின் ஆதர்ச நாயகர்கள்
கதாநாயகர்கள் தான். மற்ற துறை சார்ந்தவர்களின் மதிப்பு அவர்களிடம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கான திரைப்படங்கள், இலக்கியங்கள்
மிகக்குறைவாக உள்ளன.
குழந்தைகளை
செயல்களில் பெரியவர்களாக்கி விட்டோம் உள்ளத்தில் வறியவர்களாக்கி விட்டோம்.
கார்ட்டூன்களையும், சினிமாவின் மாய ம்னிதர்களையும் பார்த்து வளரும் இந்த தலைமுறை
அடுத்த 25 ஆண்டுகளில் மக்களை எப்படி கையாளப்போகிறதோ? அறிவாளிகளாக வளரும்
இத்தலைமுறை இரக்கம், மனிதநேயம் உள்ள உணர்வாளர்களாக உருவானால் அனைவருக்கும்
மகிழ்ச்சியே.
ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment