Sunday, 14 July 2013

கர்ம வீரர் காமராஜ்



கர்ம வீரர் காமராஜ்

விருதுப்பட்டி தந்த
தங்கக் கட்டி நீ
விடுதலை போரில் சீறிப்பாய்ந்த சிங்கக் குட்டி நீ
காந்தி வழி நின்று 
கதராடை கொண்டாய்
காலனி ஆட்சியை எதிர்த்து
9 ஆண்டு சிறையில் நின்றாய்
மக்கள் பணி செய்வதற்கு 
இல்லம் துறந்தாய்
பாரதியின் வரிகளுக்கு
உயிர் கொடுத்தாய்
வீதி தோறும் பள்ளிகளை 
கட்டி வைத்தாய்
அங்கு மதிய உணவு உண்டு என சொல்லி வைத்தாய்
தமிழ் நாட்டிற்க்கு கிடைத்திடாத அறியவன் நீ
வறியவரின் துயர் துடைத்த பெரியவன் நீ
எத்தனையோ அணைகள் கட்டி நீரை தேக்கினாய்
தமிழகத்தின் வயல்களையே பசுமை ஆக்கினாய்
அத்தனையும் இழந்ததினால் வென்றவன் நீ
எளிமையையே ஏராளமாய் அணிந்தவன் நீ
மகுடத்தை உதறிவிட்ட மன்னவன் நீ
தமிழர் நெஞ்சில் என்றும் நிரந்தர முதல்வன் நீ  
ரெ.ஐயப்பன்


Wednesday, 10 July 2013

உலக மக்கள் தொகை தினம்



உலக மக்கள் தொகை தினம்
குபு குபு குபு குபுவென போகும்
மக்கள் தொகையின் வேகம்
விறு விறு விறுவென ஏறும்
தலைகளின் எண் நாள் தோறும்
சாலையெங்கும் மக்கள் கூட்டம்
புவியெங்கும் மனிதனின் ஆட்டம்
சிக்கித் திணறுது பூமி – இதை
யார் வந்து காப்பது சாமி
மண்ணை நிறைக்கும் கூட்டம்
கடல் அலைகள் கூட வெட்கும்
தின்றே அழிக்கும் கூட்டம் – இயற்கையை
கொன்றே புவியில் வாழும்
மண்ணை கொன்றே சோறாக்கும்
காற்றை கொன்றே நஞ்சாக்கும்
இது எத்தனை தூரம் போகும்
புவி புழுக்கத்தில் வெந்தே நோகும்
சிக்கித் திணறுது பூமி – இதை
யார் வந்து காப்பது சாமி
உடல்களின் கணக்கு கூடுகையில்
உயிருக்கு பிணக்கு வருகிறதே
கூட்டம் சேர்த்தது போதுமய்யா –இது
புவியை காக்கும் நேரமய்யா
உறவை எண்ணி வாழ்கையிலே
புது உயிர்கள் புவியை நிறைக்கிறதே
உறவாய் எண்ணி வாழ்கையிலே
மனிதம் புவியில் மலர்கிறதே
உடல்களின் கணக்கை குறைப்போமே
உணர்வுகளால், உரிமைகளால், உறவுகளால்
புவியை நல் குணத்தால் நிறைப்போமே.   ரெ.ஐயப்பன்