சாயம் வெளுக்கும் வலதுசாரி
வல்லாதிக்கம்
நன்றாக நினைவிருக்கிறது முன்னாள்
பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் தனது பிரிவு உபசார உரையில் தனது பணியினை
வரலாறு நினைவு கூறும், தன்னை இப்போது எதிர்பவர்கள் காலம் செல்ல செல்ல புரிந்து
கொள்வார்கள் என்று கூறினார். அதே போல் நமது கழக அமைப்பாளர் இந்த பத்திரிக்கைகள்
மோடி என்னும் தவறான நபரை உயர்த்தி பிடிக்கிறார்கள், இது தவறு என்று அவர்கள்
வருத்தப்படுவார்கள் என்று எழுதியிருந்தார். இந்த இரண்டும் தீர்க்க தரிசனங்களாகவே
எனக்கு படுகிறது.
இன்று வரை பணமதிப்பிழக்கம் எதற்காக
கொண்டுவரப்பட்டது, அது சாதித்தது என்ன? யாராவது சொல்ல முடியுமா? இடதுசாரிகள்,
சோசலிசவாதிகள் பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் தவறு என்று கூறிய போது அவர்களை
ஒட்டு மொத்தமாக தேச விரோதிகள் என்றனர் இந்த ஆட்சியாளர்கள். இப்போது ரிசர்வு
வங்கியின் அறிக்கை மூலம் இந்த பணமதிப்பிழப்பு எந்த பலனையும் தரவில்லை என்பது
உறுதியாகிவிட்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% லிருந்து 5.7% ஆக குறைந்து விட்டது.
அதுவும் மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகளினால், பழைய முறைப்படி கணக்கிட்டால் வெறும் 3.7% மட்டுமே என்கிறார்
பாஜக வின் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வன்ந் சின்கா.
இந்த மோடி அரசு வேலைவாய்ப்பு
உருவாக்குவதிலும் கடந்த மன் மோகன் சிங் அரசை விட பின் தங்கியுள்ளது. உற்பத்தி,
வர்த்தகம், கட்டுமானம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில்
காங்கிரஸ் அரசு ஜீலை 2011 மற்றும் டிசம்பர் 2013 காலகட்டத்தில் 12.8 லட்சம் வேலை
வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால் தற்போது ஆளும் பாஜக ஜீலை 2014 மற்றும்
டிசம்பர் 2016 வருடங்களில் 6.41 லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தற்போது இந்திய மக்கள் தொகையில் 65% 35
வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்கள்
நிறைந்துள்ள இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு தவறிவிட்டது.
காங்கிரஸ் அரசின் ஆட்சியின் கடைசி ஆண்டில்
அதாவது 2013 -14 ல் கல்விக்கு அரசின் மொத்த செலவில் 4.57% ஒதுக்கப்பட்டது. தற்போது
பாஜக அரசு 2017-18 அரசின் மொத்த செலவில் 3.71% மட்டுமே கல்விக்காக ஒதுக்கியுள்ளது.
கல்விக்கு 6% ஒதுக்கப்படவேண்டும் என்று கூறிவரும் நிலையில் இந்த அரசு காங்கிரசை விட
குறைவாக ஒதுக்கியுள்ளதை என்னவென்று சொல்வது.
2008 – 2011 காலகட்டத்தில் தூய்மை
இந்தியா திட்டத்திற்கு முன்னமேயே இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான
கழிப்பறைகள் கட்டப்பட்டன. இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் தற்போது 80 லட்சம்
கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் ஆய்வின் படி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் 10ல் 6 கழிப்பறைகளில்
நீர் வசதி இல்லை. நீர் வசதி இல்லாத கழிவறைகளை என்னசெய்வது?
சுமார் 100 மில்லியன் அதாவது 10
கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை தரும் இந்திய நெசவு
தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2015 – 16ல் 40 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி
செய்த இத்துறை 2016-17ல் 38.6 பில்லியன் டாலர் அளவுக்கு தான் ஏற்றுமதி
செய்துள்ளது. இந்த ஆண்டின் இலக்கான 45 பில்லியன்
டாலர் அளவை நெருங்கமுடியவில்லை என்று அதற்கான அமைச்சர் ஸ்மிருதி இராணி
தெரிவித்துள்ளார்.
பாஜக அரசில் தலித்துகள் மற்றும்
மலைவாழ் பழங்குடியினத்தவருக்கு எதிரான
குற்றங்கள் பெருகியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறது அம்னிஸ்டி என்னும் சர்வதேச
மனித உரிமை அமைப்பு. 2015ல் மட்டும் 45000 குற்றங்கள் தலித்துக்களுக்கு எதிராகவும்
11000 குற்றங்கள் மலைவாழ் பழங்குடியினத்தவருக்கு எதிராகவும் நடந்துள்ளன.
இப்போது இந்த அரசு பொருளாதார அறிவு
அற்றது, அற நெறியிலிருந்து விலகி விட்டது என்று அம்பலமாகிவிட்டது. யார் கொடுப்பது
தண்டனை? நாட்டை சரிவுப்பாதைக்கு கொண்டுசென்ற ஆட்சியாளர்கள் தேச விரோதிகள்
இல்லையா?
ரெ.ஐயப்பன்
கழக ஆசிரியர்.