Friday, 19 February 2016

ஆட்டத்தை கலைப்போம்


ஆட்டத்தை கலைப்போம்
நீங்கள் அதிமுக ஆதரவாளரா? திமுக ஆதரவாளரா? அல்லது அதிமுகவை எதிர்பதற்காக திமுகவை ஆதரிப்பவரா? இல்லை திமுகவை எதிர்பதற்காக அதிமுகவை ஆதரிப்பவரா?
நீங்கள் அதிமுக அல்லது திமுக ஆதரவாளராக இருப்பவர் என்றால், மன்னிக்கவும் உங்களை ஊழல், சுயவிளம்பரம், வெளிப்படையற்றதன்மை, சுயமரியாதையின்மை, தனிநபர் துதிபாடுவது, ஜனநாயக பண்பு இல்லமை, நேர்மையின்மை, அறத்திலிருந்து வெகு தொலைவு விலகியிருத்தல் என்பன போன்ற பல இழுக்குகளை ஆதரிப்பவர் என்று வருத்தத்துடன் முடிவு கட்டவேண்டியுள்ளது.
இந்த சமுகத்தை தவறான பாதைக்கு இட்டுச்சென்றவர்களை நீங்கள் உறுதியாக ஆதரிப்பதனால் தான் அதிமுக மற்றும் திமுக சக்தி மிகுந்தவர்களாக உள்ளனர். நீங்கள் தெரிந்தே தவறானவர்களுக்கு வாக்களிக்கும் தவறினை செய்கிறீர்கள். உங்கள் மன மாற்றத்தை சமூகம் எதிர் நோக்கியுள்ளது. நீங்கள் வாழும் சமுகத்தின் அறம் சார் விழுமியங்களை நீங்கள் ஆதரிக்கும் இயக்கங்கள் இந்த இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளில் வேட்டையாடிவிட்டது. கண்டிப்பாக உங்களின் கலாசார குறைவினை, உங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களே ஏற்க மாட்டார்கள். நீங்கள் மனசாட்சியுடன் ஒரு நேர்காணல் நடத்தினால் நீங்கள் வருத்தப்படும் கொள்கையை ஏற்று வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்.
தயவு செய்து இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும் முன் யோசித்து பாருங்கள். ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் செலவு செய்யாமல் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது. உங்கள் தெரு ஓரத்தில் உங்கள் கண் பார்வையில் இருந்த அரசுப்பள்ளிகள் ஏன் காணாமல் போயின? புதிய அரசு கல்லூரிகள் ஏன் உருவாகவில்லை?
ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் செலவு செய்யாமல் உங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை செய்ய முடியாது. உங்களின் தெரு முனைகளில் உள்ள மது அரக்கனிடமிருந்து நம் எதிர்கால சந்ததியினரை எவ்வாறு காப்பாற்றப் போகிறோம்?
சுதந்திர, ஜனநாயக உணர்வுகளை ஊட்டிய ஊடகங்களை மலினப்படுத்தி விளம்பர தட்டிகளாக்கி, இளைய சமுதாயத்தை கலை இலக்கியத்திலிருந்து தூர விலக்கி காம கடலில் மூழ்கடித்தது யார்? இந்த இரு இயக்கத்தின் தலைமைகள் அறம் சார் அரசியல் பண்புகளை திட்டமிட்டே மறந்து விட்டனர், சமுகத்திலிருந்து மறைத்து விட்டனர். இந்த பாவங்களை எந்த மகாமக குளத்திலும் கரைக்க முடியாது. திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்களே வாக்களிக்கும் முன் ஒரு கணம் யோசிப்பீர்களா?
அதிமுகவை எதிர்த்து திமுகவிற்கும், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு வாக்களிக்கும் நிலைப்பாட்டினை எடுக்கும் வாக்களர்களே, உங்களுக்கு ஓர் கேள்வி இந்த இரண்டு இயக்கங்களுக்கும், தலைமைக்கும் என்ன வித்தியாசம்? கடும் முயற்சியில் ஒரு சில காரணங்களை நீங்கள், இரண்டில் ஒன்றை ஆதரிப்பதற்கு கூறலாம். இருப்பினும் இறுதியில் அந்த காரணங்களில் உங்களுக்கே திருப்தி இருக்காது. கண்டிப்பாக நீங்கள் முழு மகிழ்ச்சியுடன் நீங்கள் ஆதரிக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
தமிழகத்தில் மட்டுமல்ல பொதுவாகவே குற்றவாளிகளுக்கு ஆதராவாக வாக்களிக்கும் மனோபாவம் இந்திய வாக்காளர்களுக்கு உள்ளது. அதனால் தான் பல  பெரிய தவறுகளை செய்தவர்களும் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். நியாயத்தின் பக்கம் தான் மக்கள் நிற்க வேண்டும் என்ற அறத்தை எப்படியோ எளிமையாக புறந்தள்ளிவிட்டனர்.
ஊழல், மதவாதம் மற்றும் சாதி போன்றவை பல கட்சிகளின் அடையாளமாகிவிட்ட நிலையில் இவற்றிலிருந்து தண்ணிருக்குள் இருக்கும் தாமரை இலையாய் தேசமேங்கும் அறிமுகமாகியிள்ள பொதுவுடைமை இயக்கங்கள் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா தவிர தேசிய அளவிலோ மாநில அளவிலோ வெற்றி பெறவில்லை. பெரிய அளவில் எந்த ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத பொதுவுடைமை இயக்கங்களை மக்கள் ஆதரிக்கதது ஜனநாயகத்தில் ஆச்சர்யமே. விவசாயிகள், தொழிலாளர்கள் என இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்திற்கான பாதுகாவலனாக போராடும் பொதுவுடைமை இயக்கங்களை மக்கள் ஏன் நம்பவில்லை?
உயர் சாதியினரின் சாதிக்கொடுமைகள், ஜமீன் தாரர்களின் சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட இந்திய சமுகம், உயர் சாதியினர் மற்றும் பெரு முதலாளிகள் செல்வாக்கு பெற்றுள்ள கட்சிகளை மீண்டும் மீண்டும் ஆதரிப்பது ஏன்? இது வெட்டும் கோடாலிக்கு சாணை பிடிக்கும் செயல் அல்லவா? மீண்டும் மீண்டும் தங்களை சுரண்டுபவர்களிடமே தேர்தலில் சரணடையும் அளவிற்கு உள்ள இந்திய வாக்காளர்களின் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது? இந்த முட்டாள் தனத்தை நீங்கள் இந்த தமிழக தேர்தலிலும் தொடரப்போகிறீர்களா?
எளிமையும், நேர்மையும் அரசியலில் மிகவும் முக்கியமானது. இன்னமும் பொதுவுடைமை இயக்க தலைவர்களிடம் மட்டும் தான் இதனை நாம் காண முடிகிறது. தமிழகத்தில் உள்ள இரு பலம் வாய்ந்த கட்சிகளுமே சுயநல, சந்தர்பவாத, ஊழல் மிகுந்த, நேர்மையற்ற, ஆடம்பரமான, சுயமரியாதையற்ற, ஜனநாயகமில்லாத கட்சிகள் என்பதில் தமிழக மக்கள் யாருக்கு ஐயமில்லை. ஆனாலும் தமிழக வாக்காளர்கள் இந்த கட்சிகளுக்கு மாற்றாக உள்ள இயக்கங்களை ஆதரிக்காதது வியப்புக்குரியதே!
பொதுவுடைமை இயக்கங்கள் மாநில கட்சிகளின் மீது சவாரி செய்தது அவர்களின் மீது நம்பிக்கையின்மையை மக்களிடையே ஏற்படுத்தியதை மறுக்கமுடியாது. இருப்பினும் இரு திராவிட கட்சிகளை மீண்டும் மீண்டும் மன்னித்ததை போல ஒரு முறை கூட பொதுவுடமை கட்சிகளுக்கு ஆதரவினை தராதது ஜனநாயக குறைவான போக்கு தான்.
பொதுவுடமை கட்சிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களை ஆதரிப்பவர்கள் ஆடம்பர அரசியல் கவர்ச்சியால் உந்தப்பட்டு ஆதரிப்பவர்கள் அல்ல, மாறாக கொள்கைகளினால் தான் ஆதரிக்கபடுகிறீர்கள். இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு நீங்கள் வெற்றி பெற நினைக்கிறீர்கள் அதற்காக நீங்கள் தேமுதிக வின் கதவுகளை தட்டுவது உங்களை மலினப்படுத்துகிறது. ttதயவு செய்து உங்கள் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையை வெற்றிக்காக பலிகொடுத்துவிடாதீர்கள். இந்த தேர்தலில் நீங்கள் ஏற்படுத்த வேண்டியது நம்பிக்கையை தான்.
திமுக அதிமுக ஆதரவு வாக்காளர்களே, இந்த முறை பொதுவுடமை இயக்கங்களளை ஆதரிக்காமல் இருக்க காரணம் தேடிவிடாதீர்கள்?  தீரத்துடன் உங்கள் வாக்குகளை மாற்றத்திற்கான முயற்சியெடுத்துள்ள பொதுவுடமைகட்சிகளுக்கு வாக்களியுங்கள்.
கல்வியறிவு மிகுந்துள்ள தமிழக வாக்காளர்களே விளம்பரங்களால் வசியப்படாமல் எளிய பொதுவுடைமை இயக்க வேட்பாளர்களை ஆதரியுங்கள்.
முதலாளித்துவமும், தனியார்மயமும் மிகுந்து வரும் இக்காலத்தில் இதற்கு எதிர் சக்தியான பொதுவுடைமை சிந்தாந்தம் பலம் பெறுவதே மக்கள் சுரண்டப்படாமல் காக்கும்.
ஒட்டுமொத்த இந்தியாவிலும் பொதுவுடைமை இயக்கங்களின் தேவை உருவாகிக்கொண்டு வருகிறது. பெரும்பான்மையாக உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் ஜனநாயக தேர்தல்கள் வழியாக தன் சிந்தனை திறன் கொண்டு கவர்ச்சித்திட்டங்களுக்கு அடிமையாகிவிடாமல் மாற்று சிந்தாந்தங்களை ஆதரிக்க வேண்டும். அறத்தின் வழி நிற்கும் எளிய கட்சிகளை, வேட்பாளர்களை ஆதரிக்கும் நல் ஒழுக்கத்தை தமிழக வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்து அதிமுக மற்றும் திமுகவை அரசியலில் ஓரம் கட்ட வேண்டிய கால கடமையை இத்தேர்தலில் நாம் நிறைவேற்றுவோம். அதிமுக மற்றும் திமுகவின் ஆணவ அரசியல் ஆட்டத்தை கலைக்க துணிந்துள்ள பொதுவுடமை கட்சிகளை ஆதரிப்போம். ஆட்டத்தை கலைப்போம், அறம் சார் அரசியலை நோக்கி நகர்வோம். உதய சூரியன் அஸ்தமிக்கட்டும், இலைகள் உதிரட்டும். உழைப்பின் சின்னமான கதிர் அருவாள், சுத்தியல் அரச பீடத்தில் ஏறட்டும்.
 ரெ.ஐயப்பன்