அப்பாடா ஒரு தங்கமான திட்டம்
ஆண்டுதோறும் 1000 டன்கள் என்ற அளவில் இந்தியா
தங்க இறக்குமதி செய்வதால் பெருமளவு அந்நிய செலாவணியை இழக்கிறோம் மற்றும் தொழில்
முதலீடு கிடைக்காமல் அந்நிய
முதலாளிகளுக்கு காவடி தூக்கும் நிலைக்கு ஆளாகின்றோம். தங்க இறக்குமதி நிறுத்தப்பட
வேண்டும் மேலும் பாதுக்காப்பு பெட்டக்ங்களில் உறங்கும் தங்கத்தை
வெளிக்கொண்டுவரவேண்டும். மக்கள் வங்கியில், பங்கு பத்திரங்களில் முதலீடு செய்யும்
போது நம் நாட்டு தொழில் முனைவோர் ஆர்வத்துடம் தொழில் செய்யமுடியும்.
முதலீட்டுக்காக அந்நிய முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவேண்டியதில்லை.
தற்போது
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தங்க பத்திர திட்டம் ஒரு நல்ல சமிஞ்ஞையை தருகிறது.
இது ஒரளவிற்கு இறக்குமதியை குறைக்கும் ஆனால் எந்த அளவிற்கு பொதுமக்களிடம்,
கோயில்களில் பதுங்கியிருக்கும் தங்கத்தை வெளிக்கொண்டு வரும் என்பது
கேள்விக்குறிதான். இந்த திட்டம் நல்ல திட்டம் தான், இது தூண்டில் தான், நாம்
வேட்டையாட வேண்டியது சுறாக்களை, திமிங்கிலங்களை, இதற்கு இந்த தங்க பத்திர தூண்டில்
போதாது. தற்போது பொதுமக்கள் மற்றும் கோயில்கள் உட்பட பொது அமைப்புகளில் சுமார்
20,000 டன்கள் தங்கம் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது நமது நாட்டின் 20 ஆண்டுகள் இறக்குமதி செய்யும் அளவு ஆகும். திருப்பதி கோயில்
மட்டும் 1800 கிலோ தங்கத்தை ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்துள்ளது. குருவாயூர்
கிருஷ்ணன் கோயில் சுமார் 600 கிலோ தங்கத்தை வைத்துள்ளாதாக தகவல்கள் உள்ளன.
உண்மையாகவே மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்க, உறங்கி கிடக்கும் தங்கத்தை
அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசுக்கு சில யோசனைகள்.
Ø தங்க
உச்சவரம்புச் சட்டம், அதாவது ஒரு தனிநபர் ஒரு குறிப்பட்ட அளவிற்கு மேல் தங்கம்
வைத்திருக்க கூடாது என்று வரையறை செய்யலாம்.
Ø குறிப்பிட்ட
அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்க தங்க சேமிப்பு வரி விதிக்கலாம்.
Ø வங்கிகளின்
பாதுகாப்பு பெட்டகங்களில் தங்க கட்டிகள், தங்க காசுகள் தங்க பிஸ்கட்டுகள்
வைத்திருக்க தடை கொண்டுவரலாம்.
Ø கோயில்களில்
தங்க முலாம் பூசுதல், உண்டியல் தங்கம் போன்றவற்றை வங்கிகளில் முதலீடு செய்ய வழி
வகை செய்யலாம்.
Ø தங்க நகை
செய்யும் ஆசாரிகள், தங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் என அனைத்து
நிலைகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம்.
இது போன்ற தங்க கட்டுப்பாடு பலனளிக்குமா? என்ற கேள்விக்கு இரு
நாடுகளில் நடந்த நிகழ்வுகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக இந்தியா
1968ல் திரு மொராஜி தேசாய் நிதியமைச்சராக இருந்த போது தங்க கட்டுப்பாடுகள்
கொண்டுவரப்பட்டன. 14 கேரட்டுக்கு அதிகமான நகைகளை செய்யக்கூடாது, தங்க ஆசாரிகள் 100
கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருக்க கூடாது, தங்க விற்பனை டீலர்கள் 2 கிலோவுக்கு
மேல் தங்கம் வைத்திருக்க கூடாது மேலும் தங்க பத்திரங்கள் மீதான வருமானத்திற்கு வரி
கிடையாது போன்ற அம்சங்களுடன் தங்க கட்டுப்பாடு திட்டம் 1968ல் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இத்திட்டம் வெற்றியடையவில்லை, தங்க கடத்தல் அதிகரித்தது, சட்ட விரோத தங்கம்
அதிகரித்தது. இந்திய மக்கள் நேர்மைக்குறைவாக இத்திட்டத்தை அணுகினர். தேசப்பற்றை
விட சுய லாபத்தை முன்னிறுத்தினர். இது போன்ற காரணங்களால் இத்திட்டம் தோல்வியை
தழுவியது. இதன் விளைவை 1990ல் நாம் அனுபவிக்க நேர்ந்தது. அந்நிய செலாவணி
தட்டுப்பாட்டால் ரிசர்வ் வங்கி கையிருப்பில் இருந்த 40 டன்கள் தங்கத்தை நாம்
இங்கிலாந்து வங்கியில் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். பிறகு நாம்
தங்க கட்டுப்பாடு திட்டத்தை நீக்கியது. இப்போது மக்கள் தங்கத்தில் சேமிப்பு
முதலிடு செய்வதால் தொழில் முதலிடு இன்றி தவிக்கிறோம்.
1933ல் அமெரிக்காவில் பிராங்ளின் ரூஸ்வெல்ட அதிபராக இருந்த
காலத்தில் டாலர் அதிகமாக அச்சிட வேண்டியிருந்தது, ஆனால் தங்க கையிருப்பு குறைவாக
இருக்கும் போது டாலர் அச்சிட்டால் டாலரின் நாணய மதிப்பு குறைந்து விடும். எனவே
ரூஸ்வெல்ட் அரசு கையிருப்பில் உள்ள தங்கத்தை அதிகரிக்க முடிவு செய்தார்.
எக்ஸிக்யூட்டிவ் ஆடர் நம்பர் 6102, இதன்படி மக்கள் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை அரசுக்கு
சந்தை விலையை விட குறைவாக விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். புதிதாக தங்கம்
வாங்குவதையும் தடை செய்தார், மீறுபவர்கள் 10,000 டாலர் தண்டத்தொகை அல்லது 10 ஆண்டு
சிறை தண்டனைக்குரிய குற்றம் செய்ததாக கருதப்படுவர். இந்த கடுமையான சட்டத்தை அமெரிக்க மக்கள் ஏற்றார்கள். தங்கள் தேச
பக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தை சந்தை விலையை
விட குறைவான விலைக்கு அரசுக்கு விற்றார்கள். அமெரிக்கவில் தங்க கட்டுப்பாடு சட்டம்
பெரும் வெற்றி பெற்றது. 1930களில் அமெரிக்காவில் இருந்த பொருளாதார மந்த
நிலையிலிருந்து அமெரிக்கா மீண்டு வர இத்திட்டம் மிக முக்கிய காரணியாக இருந்தது.
ஒரே விதமான திட்டம் அமெரிக்காவில் வெற்றியும், இந்தியாவில்
தோல்வியும் பெற்றது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்குமான வித்தியாசம் இரண்டு தான்,
ஒன்று அமெரிக்கர்களின் தேச பக்தி மற்றொன்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் மீது
மக்களுக்கு இருந்த நம்பிக்கை. இதை
அமெரிக்காவிடமிருந்து கற்க இந்திய தலைவர்களும், இந்திய குடிமக்களும் தயாரா?
ரெ.ஐயப்பன்