Tuesday, 20 October 2015

வட கிழக்கு பருவக்காற்று

வட கிழக்கு பருவக்காற்று
தமிழகத்திற்கு முக்கியமான மழை தரும் காற்றுகள் வடகிழக்கு பருவக்காற்றுகள் ஆகும். இக்காற்றுகள் திரும்பிவரும் தென்மேற்கு பருவக்காற்றுகள், பின்னடையும் பருவக்காற்றுகள், குளிர் கால பருவக்காற்றுகள், நிலப்பருவக்காற்றுகள் என்று பலவாறு அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் முதன்மையான மழைக்காலமான தென்மேற்கு பருவக்காற்று (ஜீன் முதல் செப்டம்பர்) காலத்தில், தமிழகத்தின் அமைவிட காரணிகளால் தமிழகம் அதிக மழை பெறுவதில்லை. அதனால் தான் தென்மேற்கு பருவக்காலத்தில் தமிழகத்தை மழைமறைவு பிரதேசம் என்று அழைப்பர். தமிழகம் மேற்குதொடர்ச்சி மலைகளின் காற்று கீழிறங்கும்(கிழக்குச்சரிவு) திசையில் அமைந்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குசரிவுகளில் (கேரளா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம்) மோதி உயரே சென்று அதிக மழையை தருகிறது. தென்மேற்கு பருவக்காற்று கிழக்குச்சரிவில் கீழிறங்கும் போது குறைவான மழையையே தர முடிகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச்சரிவில் உள்ள தமிழகம் தென்மேற்கு பருவகாலத்தில் மழை பெற முடியாமல் வறண்ட வானிலையையே பெறுகிறது. இந்நிலையில் தான் வடகிழக்கு பருவக்காற்றுகள் தமிழகத்திற்கு முக்கியமானதாகிறது.
வடகிழக்கு பருவக்காற்றின் தோற்றம் மற்றும் பயணம்
உண்மையில் தென்மேற்கு பருவக்காற்றின் நீட்சியே வடகிழக்கு பருவக்காற்று ஆகும். இந்தியாவின் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கி ஜீன் மாதம் முதல் வீசத்தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்றுகள் அக்டோபர் மாதம் முதல் தன்னுடைய பயணத்தை வடகிழக்கிலிருந்து தென்மேற்காக மாற்றி அமைத்துக்கொள்கிறது. இதன் முலம் தன்னுடைய பருவக்காற்று சுழற்சியை முடித்துக்கொள்கிறது. இதற்கு முக்கிய காரணம் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே ஆகும். செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியில் பூமத்திய ரேகையில் செங்குத்தாக சஞ்சரிக்கும் சூரியன் அதற்கு பிறகு தென் கோளார்த்தில் தன்னுடைய பயணத்தை தொடர்கிறது. இதனால் வட கோளார்த்தத்தில் உள்ள இந்திய நிலத்தின் மீது உள்ள வளிமண்டலத்தின் வெப்பநிலை குறையத்துவங்குகிறது. மாறாக தென் கோளார்த்தத்தில் உள்ள கடற்பரப்பின் வெப்பநிலை உயரத்துவங்குகிறது. இந்த வெப்பநிலை மாற்றம் வளிமண்டல காற்றழுத்தத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வளிமண்டலத்தில் வெப்பநிலை குறைவின் காரணமாக காற்று கீழறங்கி அதிக காற்றழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் தென் கோளார்த்தத்தில் அதிகரித்த வெப்பநிலையின் காரணமாக வளிமண்டலத்தின் காற்றுகள் மேல் நோக்கி நகர்ந்து குறைந்த காற்றழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வடகோளார்தத்தின் அதிக காற்றழுத்தத்திலிருந்து தென் கோளார்த்தத்தின் குறைந்த காற்றழுத்தத்தை நோக்கி காற்று வீசதொடங்குகிறது.
இதுவரை (செப்டம்பர்) தென் கோளார்த்தத்தின் கடல் பரப்பிலிருந்து வீசிய ஈரம் மிகுந்த தென் மேற்கு பருவக்காற்று இப்போது (அக்டோபர்) முதல் வட கோளார்த்தத்தின் வறண்ட நிலக்காற்றாக வீசுகிறது. இந்த வடகிழக்கு பருவக்காற்றுகள் நிலத்தில் உருவாவதால் வறண்டு காணப்படுகிறது. எனவே இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மழையை தருவதில்லை. இக்காற்றின் ஒரு பகுதி வங்கக்கடலின் மீது பயணிக்கும் போது அதிக அளவு ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்கிறது. இந்த வடகிழக்கு பருவக்காற்றின் பாதையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகள் (ஒடிஸா, ஆந்திரம், தமிழ்நாடு) இருப்பதால் இப்பகுதிகள் நல்ல மழையை பெறுகின்றன. பொதுவாக அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வட கிழக்கு பருவக்காற்றுகள் துவங்குகின்றன. தென்மேற்கு பருவக்காற்றிற்கு மழைமறைவு பிரதேசமான இந்த கிழக்கு சமவெளிப்பகுதிகள் வட கிழக்கு பருவக்காற்றால் ஏமாற்றப்படாமல் மழை பெறுவதால் பாலைவனமாகாமல் தப்பித்துக்கொள்கிறது.  
2015 வடகிழக்கு பருவக்காற்று எப்படி இருக்கும்? இந்திய வானிலை துறையின் ஆய்வு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் நீண்ட கால வடகிழக்கு பருவ மழையின் சராசரி 438.2 மிமி ஆகும் இந்த ஆண்டு சுமார் 88% முதல் 90% வரை நீண்ட கால வட கிழக்கு பருவ மழை சராசரியை விட அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  
  ரெ.ஐயப்பன்

Tuesday, 6 October 2015

Communal Harmony Rally 02/10/2015



Communal Harmony Rally
02/10/2015