ஆசிரிய கூலிகளும் கங்காணி எஜமானர்களும்
யார் ஆசிரியன்? கல்வியில் சான்றிதழ்
வைத்திருக்கும் அனைவரும் ஆசிரியனா? அப்படியானால் தகுதி தேர்வு எதற்கு?
பள்ளிக்கல்வி துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியங்களை கலைத்து விட்டு போனால் கூட
தவறில்லை. சுய நலத்தில் ஊறிப்போன அரசு
ஆசிரியர்களைப் பற்றி பேசாமல் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களைப் பற்றி
சற்று சிந்திப்போம்.
அடிமைப்பட்டாளத்திற்கு ஆசிரிய பட்டம்
சூட்டிவிட்டு கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது தனியார் கல்வி நிறுவனங்கள். பத்துக்கு
ஒன்பது ஆசிரியர்களுக்கு சுய சிந்தனையோ, கொள்கைகளோ, நேர்மைத்திறனோ இல்லை என்பது
தான் மிகப்பெரிய உண்மை. பல பட்டங்கள் பெற்ற ஆசிரிய பெருமக்கள் தனக்கென எந்த தனித்துவமும்
இல்லாமல் கங்காணி எஜமானர்களின் சிந்தனைகளை செயல்படுத்தும் எந்திரமாக
இருக்கின்றனர். இவர்களால் தான் பள்ளிகள் பாழ்பட்டு போகின்றன. தங்களைப் போலவே மாணவர்களும் சொந்த
சிந்தனையற்றவர்களாக மாற்ற கடும் போராட்டம் நடைபெறுகிறது. குருவிகள் கூட கொஞ்சம் உயரே
பரந்து பார்க்கும் ஆனால் இவர்களோ கல்வியின் கழுத்தை திருகும் கள்வர்களின்
கனிவுப்பார்வைக்காக தன் சிந்தனை சிறகுகளை பாரம் என்று உதிர்த்து விட்டார்கள். ஒற்றை
நெல்லுக்கு சீட்டெடுக்கும் கிளிப்பிள்ளையைப்போல் அடிமைவாழ்வில் சுகம் கான
துவங்கிவிட்ட சக ஆசிரிய சமுதாயத்தை வருத்ததுடனும், கோபத்துடனும் பார்கிறேன்.
இவற்றையெல்லாம் முன் வைக்கும் ஆசிரியனை பயத்துடன் பார்கின்றனர். ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு என குழந்தைகளுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்கள் தங்கள் தொழிலில்
ஒன்றுபடுவதில்லை.
குழந்தைகள், இளைய மக்களை தொழில் நுட்பம்,
மேற்கத்திய கலாசாரத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் என வருத்தப்படுவதில்
அர்த்தமில்லை. தனியார் பள்ளிகளில் 90% ஆசிரியர்கள் அடிமை சாம்ராஜ்யங்களில்
கூலிகளாக பொதி சுமக்கிறார்கள் அவர்களால் உருவாக்கப்படும் மாணவ சமுதாயம் திறன்
மிகுந்தவர்களாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் சுதந்திரமானதாகவோ, சுய சிந்தனை
உள்ளதாகவோ, நேர் மதி கொண்டதாகவோ கொள்கையுள்ளதாகவோ, இரக்கமுள்ளதாகவோ இருக்க
வாய்பில்லை என்ற கணத்த உண்மை கணக்கிறது. ரெ.ஐயப்பன்