Saturday, 8 February 2014

முத்துகுமார் நினைவாக



முத்துகுமார் நினைவாக

சில சிவப்பு கிழமைகள் பிறப்பதுண்டு
சில கருப்பு வெளிச்சங்கள் விடிவதுண்டு
அழுத்தம் தாளாமல்
வெடிக்கும் எரிமலைகள்
புவியில் கண்டதுண்டு
மனதின் புழுக்கம் தாளாமல்
துடிக்கும் எரிமலையாய்
வாழ்ந்து எரிந்தவனை கண்டதுண்டா?
மனம் நொந்த வேளையிலும்
மக்களின் அறியாமை அகற்ற
அறிவொளி ஏற்ற
சூரிய கதிரை
உடலெனும் வெற்றிலையில்
சுண்ணாம்பாய் தடவியவன்
எரிதழல் மீதினிலே
எண்ணத்தை ஏற்றியவன்
இத்துப்போன தேசத்தில்
இரும்பை காய்ச்சி ஊற்றியவன்
குமரா நீ
தீ அள்ளி தின்றுவிட்டாய்
தமிழர் மனதில் நின்றுவிட்டாய்
உன் உடல் அழிந்து போகையிலும்
உணர்வாலே வென்றுவிட்டாய்
குமரா நீ
எங்களை பேச வைப்பதற்காக
ஊமையானவன் நீ
நாங்கள் எழுவதற்காக
முடங்கியவன் நீ
நாங்கள் சிந்திப்பதற்காக – மரணத்தை
சந்தித்தவன் நீ
எங்களை யோசிக்க வைப்பதற்காக
தீயை நேசித்து வெந்தவன் நீ
உன் கடிதத்தின் வார்த்தைகள்
உன் அறிவின் ஆழத்தை சொன்னது
இத்தகு மனிதனையா?
தீ இன்று தின்றது?
வண்ணத்திரை வானவில்லாய்
நாங்கள் வளைந்திருந்த வேளையிலே
உன் எண்ணத்திரை கொண்டு
எங்களை எழுப்பிவிட்டாய்
அதற்காக எமனையும் உசுப்பிவிட்டாய்


மெனக்கெட்டு கிரிக்கெட்டில் – நாங்கள்
கெட்டழிந்த வேளையிலே
சுட்டழிந்த கூட்டத்தை
சுட்டிக்காட்டியவனே
உன்னையா தீ இன்று தின்றது
உன்னையா தழல் சுட்டுக் கொன்றது
வங்க கடலோரம் –அந்த
சிங்களப் படை சீற்றத்தால்
கான குயில்களின்
கதை முடிந்து போகிறது
அதை பார்க்க பார்க்க – நம்
மனம் வெந்து சாகிறது
தமிழனத்தை
கை காக்கும் – எதிரியை
ஒரு கை பார்க்கும்
என நினைத்திருந்தோம்
கை தாக்கும் – சிங்கத்தோடு
கை கோர்க்கும்
என நினைக்கவில்லை
சூரியன் சுட்டெரிக்க மறக்கிறது – ஏன்
மறுக்கிறது

இலை படையெடுக்கும்
இழுக்கிற்கு விடை கொடுக்கும்
என்றே கோன் ஆக்கினோம்
இலை நிலையெடுக்கவில்லை
தரணி ஆண்டாலும் – போர்
பரணி பாடவில்லை
நம் அரசியல் ஒற்றுமை கூடவில்லை
உண்மையாக கட்சிகள் தமிழர் நலன் தேடவில்லை
முத்துக்குமரா – நீ
நீ எரிந்து போனவன் அல்ல
எங்களை எழுப்பி போனவன்
முத்துக்குமரா – நீ
நேற்றைய சூரியன் தான்
இன்றும் உன் வெளிச்சம் போகவில்லை
உன்னை நினைக்கும் போது தான்
நாளைய சூரியர்கள் உதிக்கிறார்கள்.
முத்துக்குமரா – நீ
நீ எரிந்து போனவன் அல்ல
எங்களை எழுப்பி போனவன்
ரெ.ஐயப்பன்
www.ayyappangeo.blogspot.com